போதைப்பொருள் கடத்தலில் மாட்டிக்கொள்ளும் அப்பாவி கால்டாக்சி டிரைவர்!
டாப் கியர்
தெலுங்கு
ஆதி, ரியா, மைம் கோபி
போதை மாபியா குழுவின் விவகாரத்தில் கால் டாக்சி டிரைவர் சிக்கிக்கொள்கிறார். அவரது மனைவி உயிரைக் காப்பாற்ற போதைப்பொருளைக் கண்டுபிடிக்க செல்கிறார். இறுதியில் என்னவானது என்பதே கதை.
படத்தில் காதல் காட்சி, நகைச்சுவை என எதுவும் கிடையாது. முழுக்க ஆக்சன் திரில்லராக எடுக்க நினைத்த இயக்குநர், அதை படத்தின் பாதியிலேயே மறந்துவிட்டார். நிறைய காட்சிகளில் பிஜிஎம் உறுமலோடு காட்சி மெதுவாக நகர்கிறது. எலிவேஷனுக்கு வெறும் இசை மட்டும் போதாது அல்லவா, காட்சியில் ஏதேனும் இருக்கவேண்டுமே? அப்படி ஏதும் இல்லை.
நாயகன் டாக்சி டிரைவர். காதலித்து மனைவியை சார்பதிவாளர் அலுவலகத்தில் மணம் செய்கிறார். ஆனால், அவரின் கூட நிற்க எந்த நண்பர்களுமே இல்லை. அப்புறம் எப்படி சாட்சி கையெழுத்து போடுவது? இப்படியான லாஜிக் இடரல்கள் படம் நெடுக உண்டு. நேரடியாக கதைக்கு போகவேண்டும். எனவே, நாயகனுக்கு காதலி கிடையாது. மனைவி உண்டு. நாயகன், நாயகி தரப்பில் எந்த நண்பர்களும் இல்லை. ஏன், வீட்டில் கூட அவர்கள் மட்டுமே இருக்கிறார்கள். இந்த செட்டப் ஒருவித செயற்கையான தன்மையை ஏற்படுத்துகிறது. அவள் கர்ப்பிணியாக இருக்கிறாள். அதை நாயகனுக்கு சொல்ல நினைக்கிறாள். அவளுடைய பிறந்தநாள் இரவில் நடக்கும் கார் சேசிங் களேபரங்களே கதை.
மும்பையில் இருந்து ஆந்திரத்திற்கு போதைப்பொருளை சித்தார்த் என்ற போதைப்பொருள் டான் கடத்துகிறார். இதைப் பிடிக்க ஆந்திர காவல்துறை அலைபாய்கிறது.போலீசுக்குள் உள்ள உதவி கமிஷனரே, போதைப்பொருளை பிடித்து வெளி மார்க்கெட்டில் விற்று செட்டிலாக நினைக்கிறார். அதை ட்விஸ்ட் என சொல்லுகிறார்கள். அதைவிட டேவிட் என பெயர் சொல்லி நடக்கும் போதைப்பொருள் நாடகமே சற்று பொருத்தமாக உள்ளது.
மைம் கோபி சித்தார்த் என்ற போதைப்பொருள் டானாக நடித்திருக்கிறார். இரக்கமில்லாத கொலைகாரன் என்பதற்கு டஜன் பேர்களைக் கொல்கிறார். அதெல்லாம் சரி. ஆனால், களவு போன சரக்கை மீட்க டாக்சி ட்ரைவரை எப்படி நம்புகிறார் என புரியவில்லை. அவரது போட்டோ டிவியில் வெளியே வந்துவிடுகிறது. கூடவே டாக்சி ஓட்டும் நாயகனின் போட்டோவும் காண்பிக்கப்படுகிறது. இந்த லட்சணத்தில் நாயகன் மட்டுமே எப்படி போதைப்பொருளை தேடி கண்டுபிடிக்க முடியும்? டோண்ட் கொசின் தி எமோஷன் என்கிறீர்களா? தேடினாலும், தேடி எடுத்தாலும் கூட பார்வையாளர்களான நமக்கு எந்த எமோஷனும் வருவதில்லை. ரியா சுமனுக்கு மனைவி பாத்திரம். அவருக்கு நடிக்க அதிகவாய்ப்பு இல்லை. மைம் கோபிக்கு அதிக காட்சிகள் உள்ளன. ஆனால், அதில் இயக்குநர் எந்தவித புத்திசாலித்தனத்தையும் காட்டவில்லை. எனவே, தொடக்க பில்டப் தாண்டி ஒன்றுமில்லாமல் போகிறது. ஆதி எதற்கு இப்படியான படங்களை நடிக்கிறார் என்று தெரியவில்லை. இதுமாதிரியான படங்களுக்கு அதிக பட்ஜெட் தேவை. அப்படியல்லாதபோது அதை எதிர்பார்த்த தரத்தில் எடுக்க முடியாது.
படத்தில் மால் ஒன்றில் நாயகனை போலீசார் துரத்துகிற காட்சி ஒன்றுண்டு.அதை ஏதோ ஓடிப்பிடித்து விளையாடுவது போல எடுத்திருக்கிறார்கள். படுமோசம்.
டெலி ஃபிலிம் போல படத்தை எடுத்து வைத்திருக்கிறார்கள். டாப் கியர் என பெயர் வைத்தாலும் படம் முதல் கியரிலேயே ஊர்ந்து செல்கிறது. அப்படியே முடிகிறது.
வண்டி பிரேக் டவுன் ஆகிவிட்டது.
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக