பலவீனமான இளைஞனின் உடலுக்குள் புகுந்து துரோகிகளை பழிவாங்கத் தொடங்கும் தற்காப்புக்கலை மாஸ்டரின் ஆன்மா!
டாமினேட்டர் ஆப் மார்சியல் காட்ஸ்
எபிசோடு 29
சீன டிராமா
குயின் சென்னுக்கு அப்பா கிடையாது. அம்மா மட்டும்தான். குயின் குடும்பம், நாட்டின் ராணுவத்தில் உயர்பதவிகளைப் பெற்றுள்ளது. அத்தனைக்கும் குயின் சென்னின் தாத்தா, குறிப்பிட்ட எல்லைப்பிரிவுக்கு தலைவராக இருப்பதால் சாத்தியமானது. அவரது மகள் குயின் யூசெ, முகம் தெரியாத ஒருவரை காதலித்து மணம் செய்துகொள்கிறாள். குழந்தை பிறந்தபிறகு, தந்தையின் வீட்டுக்கு வருவதால் ஊர் அவர்களை ஏசுகிறது.
இப்படி வளரும் குயின்சென்னுக்கு, ஆன்ம ஆற்றல் பெரிதாக வளரவில்லை. அந்த நேரத்தில் அவனது உடலுக்குள் சொர்க்கத்தில் உள்ள கடவுளின் ஆன்மா உள்ளே நுழைகிறது. அவருக்கு துரோகம் செய்த நண்பன், மோசம் செய்த காதலி ஆகிய இருவரை பழிவாங்கும் நோக்கம் உள்ளது. அதை குயின்சென்னின் பலவீனமான உடலைக் கொண்டு எப்படி செய்கிறார் என்பதே கதை.
இப்படியான கதைகள், மாங்கா வடிவில் ஏராளமாக இணையத்தில் கிடைக்கின்றன. எனவே, கதையில் பெரிய ட்விஸ்டுகள் ஏதுமில்லை. பொதுவாக பார்வையாளர்கள் நினைக்கும்போது பாட்டு, காமெடி என போக்கிரி படத்தில் காட்சிகள் வருமே அதேபோல்தான் இங்கும் நடக்கிறது.
முக்கியமான ட்விஸ்ட், குயின்சென்னின் அம்மாவுக்கு தற்காப்பு கலைகள் தெரியுமா இல்லையா என்பது... அடுத்து அவரின் முகம் அறியாத அப்பா யார், எங்கே இருக்கிறார், மகன் எப்போது அப்பாவை சந்திப்பான் என்பது... இந்த இரண்டும்தான் ஆர்வமூட்டுகிறதாக இருந்தது. அதற்கான பதில்களை நாம் பெறுவதற்குள் தொடர்மீதான நம்பிக்கையை இழந்து விடுகிறோம்.
காதல் காட்சிகள் பெரிதாக சோபிக்கவில்லை. மகாமோசமான கணினி கிராபிக்ஸ்கள், சண்டைக் காட்சிகள் எரிச்சலை ஊட்டின.
நிறைய சீன டிராமாக்களில் தீயசக்திகளைக் கொண்டவர்கள்தான் கரும்புகை போன்ற சக்திகளைப் பயன்படுத்துவார்கள் என காட்டிவிட்டனர். இந்த டிராமாவில், நிறையப் பேர் கரும்புகை கொண்ட சக்தியைப் பயன்படுத்தியதால் இது என்ன மாதிரியான சக்தி, நன்மையா, தீமையா என குழப்பம் வந்துவிடுகிறது. இதையெல்லாம் சற்று தவிர்த்திருக்கலாம். கிளிஷேவாக இல்லாமல் புதிதாக முயற்சி செய்வோம் என இயக்குநர் நினைத்திருக்கலாம். கரும்புகை சக்தி பற்றி தெளிவான விளக்கம் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
குயின்சென், சண்டை போடுவதில் சிறந்த ஆள். அதேநேரம் மருந்துகளை தயாரிக்கும் ரசவாதியும் கூட. இந்த சீனதொடரில் நாயகன் எந்த இடத்திலும் யாருக்கும் எழுந்து நிற்பதோ, எல்லோரும் வணங்கும்போது வணங்குவதோ செய்வதில்லை. நாட்டின் அரசரையே கண்டுகொள்வதில்லை. கையைக் கட்டிக்கொண்டு அப்படியே நிற்பார். அவருடைய அறிவுக்கும் கீழான ஆட்கள்தான். அவரது ஆசிரியர்களாக பதவியைப் பிடித்துக்கொண்டு நிற்கிறார்கள். குயின்சென் வாய்ப்பு கிடைக்கும்போது எல்லாம் அவர்களை மட்டம்தட்டி கேலி செய்கிறான். குயின்சென்னின் அறிவு விசாலம் காரணமாக பலரும் அவனுடைய நட்பை நாடுகிறார்கள்.
நாயகனைத் தாண்டி சற்றே ஆச்சரியம் தரும் பாத்திரமாக, சாமானியர்களில் ஒருவராக இருந்து அப்பாவின் வாளுடன் அகாடமிக்கு கல்வி கற்க வரும் வெய்மிங் உள்ளார். இவரது பாத்திரத்திற்கு தொடரின் இடையே மெல்ல நேரம் அதிகரித்து காட்டியுள்ளனர். ஆறுதல் அளிக்கிற பாத்திரம்.
அன்றைய கால சாதி, குடும்ப அரசியல் தாண்டி ஒருவர் தன் திறமையை மட்டுமே நம்பி வருவது எவ்வளவு கடினம் என்பதைக் காட்டியது நெகிழ்ச்சியான பதிவு. வெய்மிங், மார்குயிசின் மகன் பெங்கை தோற்கடிக்கும் சண்டையும் சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளது.
குயின் சென் தாத்தாவின் வீட்டில் இருந்து அவன் தாய்மாமன்களின் புறக்கணிப்பு காரணமாக அம்மாவை அழைத்துக்கொண்டு தனி வீட்டுக்கு போகிறான். அங்குபோய் அவன் எப்படி செலவுகளை சமாளிக்கிறான் என்பதை வெறும் வசனங்களாகவே கூறுகிறார்கள். காட்சியாக ஏதும் காட்டப்படவில்லை. பின்னாளில், ரசவாதி தேர்வில் குயின்சென் வென்று டான் என்ற மருந்து நிறுவனத்தின் தலைவியை சந்திக்கிறான். பிறகுதான் அவர்களுக்குள் ஒப்பந்தம் தயாராகி ஐம்பது சதவீத வருமான பகிர்வு நடைமுறைக்கு வருகிறது. டான் பவிலியன் மாஸ்டரின் கவர்ச்சி பெரிதாக எடுபடவில்லை. அந்த பாத்திரமும் சரியாக எழுதப்படவில்லை.
ஷாடோ ஸ்லை ஹவுஸ் எனும் கூலிப்படை அமைப்பை இன்னும் வலுவாக எழுதி காட்சிகளை சேர்த்திருக்கலாம்.
இருபத்தொன்பது எபிசோடுகளில் குடும்ப பஞ்சாயத்து, காதல், நட்பு, அதிகார வட்டாரங்களோடு தொடர்பு ஆகியவை மட்டுமே வைத்து இழுக்கிறார்கள். நாயகன், அவனது அப்பா யார் என அம்மாவிடம் கேட்கும்போது தொடர் யூகு ஆப்பில் முடியும் கட்டத்தை எட்டிவிடுகிறது. அதாவது, யூட்யூபில் குறிப்பிட்ட எபிசோடுகள்தான் இலவசம். மீதியை நீங்கள் சந்தா கட்டித்தான் பார்க்கவேண்டும்.
சுமாரான பழிவாங்கும் கதை
நேரமிருப்பவர்கள் யூட்யூபில் யூகு ஆப் வழியாக சீனத்தொடரைப் பார்க்கலாம்.
கோமாளிமேடை குழு
கருத்துகள்
கருத்துரையிடுக