சீனாவின் நவீன சிற்பி - டெங் ஷியாபோபிங் கடந்த வந்த அரசியல் முள்பாதை
book review
சீனாவின் நவீன சிற்பி - டெங் ஷியாபோபிங் கடந்த வந்த அரசியல் முள்பாதை
டெங் ஷியாபோபிங் அண்ட் தி சைனீஸ் ரிவல்யூஷன்
அரசியல் சுயசரிதை
டேவிட் எஸ் ஜி குட்மேன்
ரூட்லெட்ஜ் பதிப்பகம்
டெங் ஷியாபோபிங்கை முன்னிறுத்தாமல் இன்று ஷி ச்சின்பிங் எந்த உரையையும் தொடங்கி முடிப்பதில்லை. சீனர்களுக்கு தேசியக்கட்சியோடு போரிட்டு சுதந்திரம் வாங்கிக்கொடுத்தது மாவோ என்றால், அந்த நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கான அடித்தளத்தை அமைத்தவர், டெங் ஷியாபோபிங். 1976 தொடங்கி 1985ஆம் ஆண்டு வரை சீன அதிபராக இருந்த டெங் செய்த ராணுவ, பொருளாதார சீர்திருத்தங்கள் காரணமாகவே சீனா, இன்று பெரும் வளர்ச்சியைப் பெற்றுள்ளது.
இங்கு கவனிக்க வேண்டியது, சீனா தனது நாட்டை வளர்ச்சிக்காகத் திறந்துவைத்தாலும் அதன் கலாசாரத்தை ஆன்மாவை முழுக்க இழந்துவிடவில்லை. சோசலிசச்தை சீன கலாசாரத்தோடு இணைந்து திட்டங்களை தீட்டி முன்னெடுத்தவர் டெங். இந்த நூல், டெங்கின் அரசியல் வாழ்க்கையை விரிவாக அலசுகிறது. ஆனால் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பெரிதாக பேசவில்லை. ஏனெனில் அங்குள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதிக்கம், அரசியல் உறுப்பினர்களின் தனிப்பட்ட வாழ்க்கையையும் விட்டுவைப்பதில்லை. டெங்கின் மகள் தனது அப்பா பற்றிய நூலை எழுதினாலும் அதுவும் தீவிரமாக தணிக்கை செய்யப்படும் நிலை. சீன கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ள யாரும் மாவோ, அவரின் கொள்கை, கட்சியின் செயல்பாடு பற்றி எழுதலாம். அதுபற்றி தனிப்பட்ட கருத்துகள்,விமர்சனங்களை வைக்க முடியாது. எதிர்புரட்சியாளர்கள் என்று கூறப்பட்டு ஒழுங்கு நடவடிக்கை பாயும். சிறை அல்லது காணாமல் போய்விடுவார்கள்.
டெங் தனது அரசியல் அடிகளை கவனமாக எடுத்து வைத்து சீனாவின் அதிபராக முன்னேறியவர். தொடக்கத்தில் சீன - ஜப்பான் போரில் பங்கேற்றவர் என்பதால், கட்சியிலும் மக்களிடமும் செல்வாக்கு பெற்றவர். மாவோவுக்கு நெருக்கமானவராக கருதப்பட்டவர். டெங்கின் வாழ்க்கையில் கிடைத்த அனைத்துமே அவரது திறமைக்காக அல்ல. அவர் கொண்டிருந்த தனிப்பட்ட, அரசியல் தொடர்புகள், நட்புகள் காரணமாகவே கிடைத்தன. அவரும் தன்னை மூன்று முறைகள் ஒழுங்கு நடவடிக்கைகளுக்குள் உட்படுத்திக்கொண்டு முன்னேறி வந்தார். 1960ஆம் ஆண்டு தொடங்கி எழுபது வரையிலான காலம் டெங்கிற்கு கடுமையானது. அவரை கட்சி கிராமம் ஒன்றுக்கு அனுப்பி வைத்து வீட்டுச்சிறையில் வைத்தது. பிறகு சிறையில் தள்ளியது. சிவப்பு ராணுவப்படையினர், டெங்கைப் பற்றி இழிவாக போஸ்டர் அடித்து சுவரில் ஒட்டினர். ஊடகங்களிலும் அவரைப் பற்றிய அவதூறுகளைப் பரப்பினர். இதெல்லாம் மாவோவின் கலாசார புரட்சிக்கு எதிரான விமர்சனங்களை, கருத்துகளை டெங் கூறியதால் நேர்ந்த விளைவு.
யோசித்துப் பாருங்கள். வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டபோது டெங்கின் வயது அறுபது. அந்த வயதில் அவர் உடலுழைப்பு வேலைகளை செய்ததோடு, அருகிலிருந்து தொழிற்சாலையிலும் பகுதி நேரம் பணிபுரிந்தார். டெங்கின் மூத்த மகன் அப்பாவின் அரசியல் செயல்பாடுகளுக்காக கல்லூரியில் இருந்து விலக்கப்பட்டு, சிவப்பு ராணுவ வீரர்களால் தாக்கப்பட்டு ஊனமாக்கப்பட்டார். மருத்துவ சிகிச்சை அளிக்க கட்சி மறுத்துவிட்டதால், சக்கர நாற்காலியில் வாழும்படியாக சூழ்நிலை மாறியது.
சீர்திருத்த சிந்தனைகளை டெங் ஷியாபோபிங் முன்வைத்தபோதும், அதை செயல்படுத்த மாவோ மறுத்துவிட்டார். டெங் அமைப்பைக் காக்கும் திறன் கொண்டவர். விவாதங்கள், கருத்துகளை பகிர்ந்தாலும் கூட கட்சி இறுதியாக முடிவெடுத்தால் அதை மீற மாட்டார். அதனால்தான் அவரது வாழ்க்கை மேலும் கீழுமாக சென்று வந்தது.
நூலில் குட்மேன், டெங் ஷியாபோபிங் பிரான்சில் படித்தது, அங்கு ரினால்ட் தொழிற்சாலையில் பிட்டராக வேலை செய்தது, பத்திரிகைகளை அச்சிட்டு வெளியிட்டது தொடர்பான தகவல்களை எழுதியிருக்கிறார். பிரான்சில்தான், சீன கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டது. டெங் வெளிநாடுகளில் பகுதி நேரமாக ஏராளமான வேலைகளை செய்திருக்கிறார். பிறகு, ரஷ்யாவுக்கு சென்று கட்சி சார்ந்த வேலைகளை தொடர்ந்திருக்கிறார். பல்வேறு நாடுகளுக்கு சென்று கட்சி சார்ந்த பணியை செய்து வந்ததால் தொழில்வளர்ச்சி சார்ந்த சிந்தனைகள் அவருக்குள் வலுப்பட்டிருக்க கூடும். மாவோவுக்கு ஆதரவானவர் என்பதால் சாதகமான விஷயங்களை விட அதிக பாதகமே டெங்கிற்கு கிடைத்தது.
தொண்ணூறுகளுக்குப் பிறகு, அரசு பதவிகளை விட்டு நீங்கினாலும் முக்கிய முடிவுகளை எடுக்கும்போது அவரின் பார்வைக்கு திட்டங்களை கொண்டு செல்லும் அளவுக்கு மாறினார். 1985ஆம் ஆண்டிலேயே வயதாவதால், பிறர் கூறாமல் தானே அதுவரை ஏற்றிருந்த பதவிகளிலிருந்து விலகத் தொடங்கினார். தியான்மென் சதுக்க படுகொலைகள் நடந்த ஆண்டில் முழுமையாக அரசியல் வாழ்க்கையிலிருந்து விலகிக்கொண்டார்.
தியான்மென் சதுக்க மாணவர் போராட்டத்தை எதிர்ப்புரட்சி என்று கூறியது, மாணவர்கள் இரண்டாயிரம் பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ராணுவத்திற்கு வெளிப்படையான பாராட்டுகளை தெரிவித்தது என களங்கமான கறுப்பு பக்கங்களும் டெங்கிற்கு உண்டு. நூலில் கட்சிக்கும், ராணுவத்திற்குமான நெருக்கம் விரிவாகவே கூறப்பட்டுள்ளது. டெங்கிற்கு அரசியல் ரீதியாக பின்னடைவு ஏற்பட்டபோதெல்லாம் ராணுவம் உதவிக்கு வந்தது.
மாவோ நாட்டிற்கு சுதந்திரம் பெற்றுத்தந்தார் என்றாலும், நடைமுறையாக மாறி வரும் அரசியலைப் பொறுத்தவரை அவருடைய கருத்துகள் காலாவதியானவை. மாவோவின் ஆதரவாளராக இருந்தாலும் டெங், நவீன சிந்தனை கொண்டவர், மக்களின் ஏழ்மையான வாழ்க்கைக்கு தொழில்துறை வளரவேண்டும் என நம்பினார். அவரது கருத்துகளை வெளிப்படையாக கூறியபோது, மாவோவின் ஆதரவு கூட்டத்தால் முதலாளித்துவவாதி என இகழப்பட்டார். கட்சியில் இருந்த பதவி பறிபோய், அதிகாரத்தில் கீழிறக்கப்பட்டார். கட்சி ஆதரவு நாளிதழ், ஊடகங்கள் டெங்கை கடுமையாக வசைபாடின. விமர்சித்தன. இழிவுபடுத்தின. இதையெல்லாம் தாண்டி வர அறுபது வயதுக்கு மேலாகிவிட்டது. அப்படியும் நினைத்த கருத்துகளை கூறி, செயல்பாடுகளை செய்துவிட்டுத்தான் டெங் மறைந்தார்.
வயதாகி அரசியல் பணிகளைக் குறைத்துக்கொண்டபோது, அரசு பதிப்பகத்தில் பல்வேறு தலைவர்கள் பற்றிய நூல்களை வரலாறு சார்ந்து எழுதி தொகுத்தார். டெங் அவரது வாழ்க்கை, செயல்பாடு, பேச்சுகளை தானே தொகுத்து நூலாக்கியிருக்கிறார். அதேவழியில் இன்று ஷி ச்சின்பிங்கும் தனது செயல்பாடுகளை நூலாக்கி வருகிறார்.
குட்மேன், டெங் எழுதிய பல்வேறு நூல்களைப் படித்து அரசியல் சுயசரிதையை எழுதியிருக்கிறார். இதிலேயே ஏராளமான நூல்களை மேற்கோள்களாக காட்டுகிறார். அவரது உழைப்பு கண்டு மலைப்பாக உள்ளது.
டெங் ஷியாபோபிங் எளிமையான விவசாயி போன்ற தோற்றம் கொண்டவர். சிறிய உருவம், புன்னகைக்கும் முகம். ஆனால் அவர் எடுத்த காரியத்தில் உறுதியாக நின்று சாதித்தவர். பல்வேறு இடர்ப்பாடுகளை சந்தித்தாலும் தான் செய்ய நினைத்த விஷயங்களை திட்டமிட்டு சாதித்துக் காட்டியபிறகு மறைந்தவர்.
அமைதியாக மாவோவின் அருகே நின்று இரண்டாவது சக்திவாய்ந்த தலைவராக இருந்தவர். தனது இடத்தை உறுதிப்படுத்திக்கொண்டு அதிபரானபிறகு தனது சக்தியை முழுமையாக வெளிப்படுத்தியவர். டெங் தன்னை முன்னிலைப்படுத்தவில்லை. நாட்டை விளம்பரப்படுத்தினார். அதன் பிரதிநிதியாகவே வெளிநாடுகளுக்கு பயணித்தார். வாழும் காலத்தில் மக்களிடம் செல்வாக்கை சந்தித்தாலும், உறுப்பினராக இருந்த கட்சியில் இகழ்ச்சியை அதிகம் சம்பாதித்தார். ஆனாலும் கூட டெங் உருவாக்கிய கொள்கைகளே நவீன சீனாவை வளர்ச்சிப்பாதையில் பயணிக்க வைத்துள்ளது.
சீனாவைப் பற்றி, கம்யூனிஸ்ட் கட்சி பற்றி, டெங்கின் அரசியல் வாழ்க்கை பற்றி அறிந்துகொள்ள உதவுகிற சிறந்த நூல்.
கோமாளிமேடை குழு
கருத்துகள்
கருத்துரையிடுக