உத்தர்காண்ட் இடம்பெயர்தல் - கடவுளின் பூமியில் மனிதர்களுக்கு இடமில்லை!

 

 








கடவுளின் பூமியில் மனிதர்களுக்கு இடமில்லை

2000ஆம் ஆண்டு நவம்பர் ஒன்பதாம் தேதி உத்தர்காண்ட் மாநிலம் உருவானது. அதை உருவாக்கியபோது ஒன்றியத்தில் பிரதமராக வாஜ்பாய் இருந்தார். தொடக்கத்தில் மாநிலத்திற்கு உத்தராஞ்சல் என்று பெயர் வைக்கப்பட்டு பின்னர் உத்தர்காண்ட் என மாற்றப்பட்டது. காரணம், பெயர் வைத்தவர்களுக்கே தெரியும். இப்படி பெயர் மாற்றியதால் மாநிலம் முன்னேறிவிட்டதா என்றால் கிடையது.

இந்த மாநிலத்திலுள்ள மக்கள் தொடர்ச்சியாக சமவெளிக்கு இடம்பெயர்ந்து வருகிறார்கள். கடவுளின் பூமி என வலதுசாரி இந்து கட்சிகள் கூறி கூப்பாடு போட்டாலும் நிலைமை பெரிதாக மாறவில்லை. வாய்ப்பேச்சு வயிற்றிலுள்ள பசித்தீயை அணைக்க உதவாது அல்லவா? அந்த யதார்த்தம் அரசியல்வாதிகளுக்கு புரியவில்லை. மக்களுக்கு புரிந்ததால் தொடர்ச்சியாக அங்கிருந்து பிழைக்க வெளியேறி வருகிறார்கள். கல்வி, மருத்துவ வசதிகள் மிக சொற்பமாக உள்ள மாநிலம். இந்த நிலையில் வேலைவாய்ப்புகளும் கூட கிடையாது என்ற நிலையில் மக்கள் எப்படி அங்கு பிழைத்திருப்பார்கள்?

காங்கிரஸ், வலதுசாரி மதவாதகட்சி என இரண்டு கட்சிகள் மாறி மாறி ஆட்சிக்கு வந்தும் மக்கள் வேலையின்றி வெளி மாநிலங்களுக்கும், உள்ளுக்குள்ளும் இடம்பெயர்தலை தடுத்த நிறுத்தமுடியவில்லை. 2017ஆம் ஆண்டு கிராம மேம்பாடு, இடம்பெயர்தல் தடுப்பு கமிஷன் ஒன்று அமைக்கப்பட்டது. 2001,2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு தகவல்படி உத்தர்காண்டின் மலைப்பகுதி, கிராமப்புறங்களில் இடம்பெயரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது தெரிய வந்தது. டேராடூன், உத்தம்சிங் நகர், நைனிடால், ஹரித்வார் ஆகிய மாவட்டங்களில் மக்கள்தொகை அதிகரித்து வருகிறது. இதற்கு மாறாக, பாரி, அல்மோரா மாவட்டங்களில் பெரிய வளர்ச்சி ஏதும் இல்லை. டெஹ்ரி, பாகேஸ்வர், சமோலி, ருத்ரபிராயாக், பித்தோரகார் மாவட்டங்களில் குறைந்த வளர்ச்சியே பதிவாகியுள்ளது.

எஸ்டிசி என்ற தன்னார்வ அமைப்பு எடுத்த ஆராய்ச்சியில், ஆண்டுக்கு 67 சதவீத மக்கள் இடம்பெயர்ந்து வருகிறார்கள். 2008, 2018 காலகட்டத்தில் 5,02,717 மக்கள் இடம்பெயர்ந்திருக்கிறார்கள். ஆண்டுக்கு தோராயமாக 50,272 நபர்கள்.

2018,2022 காலகட்டத்தில், 3,35,841 பேர் இடம்பெயர்ந்திருக்கிறார்கள். தோராயமாக ஆண்டுக்கு 83,960 நபர்கள். ஐம்பது சதவீத மக்கள் தங்கள் வாழிடங்களுக்கு அருகிலுள்ள நகருக்கு அல்லது மாவட்டங்களுக்கு இடம்பெயர்ந்து வருகிறார்கள்.இடம்பெயரும் கணக்குப்படி தினசரி 230 பேர் இடம்பெயர்ந்து வருகிறார்கள். இதை இடம்பெயர்தல் கமிஷன், நேர்மறையான மாற்றம் என்று பெருமையாக கூறியுள்ளது. சூழலியலாளர் சுந்தர்லால் பகுகுணாவின் மகன் ராஜீவ், இடம்பெயர்தல் கமிஷனை எந்த பயனும் இல்லாத அமைப்பு என சாடுகிறார். அவர்கள், மாந்த்ரீகர்கள் உச்சரிக்கும் வெற்று மந்திரங்களைப் போல வேலை செய்வதாக தங்களைக் காட்டிக்கொள்கிறார்கள். அவ்வளவுதான் என்று விமர்சித்துள்ளார்.

தொடக்கத்தில் வேலைக்காக டெல்லி, மும்பை என்ற சென்ற மக்கள் இப்போது மாநிலத்திற்குள்ளாக பல்வேறு நகரங்களுக்கு இடம்பெயர்ந்து வருகிறார்கள். ஒவ்வொரு நகருக்கும் வளங்களை பகிர்வதற்கு வரம்புகள் உண்டு. குறிப்பிட்ட நகரில் மக்கள்தொகை அதிகரிப்பது, உள்ளூர் நிர்வாகம்,மாவட்ட அரசு நிர்வாகம் ஆகியோருக்கு சிக்கலையே தரும் என சமூக ஆய்வாளர் ஜெய்சிங் ராவத் கூறினார். கடந்த நான்கு ஆண்டுகளில் உத்தர்காண்டில் இருபத்து நான்கு கிராமங்களில் வசிக்க ஆளே இல்லாமல் பேய் கிராமங்களாக மாறிவிட்டது. இப்போதும், 398 கிராமங்களில் உள்ள மக்கள் தொடர்ச்சியாக பல்வேறு கிராமங்களுக்கு உள்ளுக்குள் இடம்பெயர்ந்து வருகிறார்கள். கடவுள் பூமி என பெயர் வைப்பதில் காட்டும் அக்கறையை, மாநிலத்தில் உள்ள தொழில்களை மேம்படுத்துவதற்கு காட்டினால் மக்கள் இடம்பெயர்தல் பிரச்னையை தீர்க்கலாம்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - நரேந்திர சேதி
தமிழாக்க கட்டுரை
தீரன்
#u'khand #job #town #migration #crisis #rural #economy #god land #ghost village #population #SDC #anoop nautiyal #imbalance
 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்