அரசு, தொழிலாளர் பற்றிய தெளிவை ஏற்படுத்தும் நூல்!

 

 

 



 

அரசும் புரட்சியும்
புரட்சியாளர் லெனின்
தமிழில் ரா கிருஷ்ணய்யா

சோவியத் யூனியனை மக்கள் பிரதிநிதிகளில் ஒருவராக ஆண்ட லெனின் எழுதிய நூல். இந்த நூலை கிருஷ்ணய்யா சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். நூல் முழுக்க அரசு என்றால் என்ன, அதன் நோக்கம், யாருக்காக செயல்படுகிறது, அதை தொழிலாளர்கள் எப்படி கைபற்றி மக்களுக்காக இயங்க வைப்பது என நிறைய உதாரணங்களோடு எழுதியுள்ளார். நூலில் கூடுதலாக சந்தர்ப்பவாதிகள் பற்றியும் விரிவாக விமர்சனங்களை எடுத்து வைத்து விவாதித்துள்ளார். நூல் எளிதாக வாசித்து யோசித்து புரிந்துகொள்ளக்கூடியதல்ல. மொத்தம் 570 பக்கங்களைக் கொண்டது.

மார்க்சிய தத்துவம் சார்ந்த நூல் என்பதால், நூலை அனைவருக்கும் பொதுவான நூலாக கூற முடியாது. நிதானமாகவே படிக்க முடியும். நூலை வாசிப்பதற்கு முன்னர், அதன் பின்னே உள்ள பல்வேறு சம்பவங்களை படித்துவிட்டு வந்தால் நூலை முழுவதுமாக வாசிக்க எளிதாக இருக்கும். ஏராளமான சம்பவங்களை நூல் சுருக்கமாக கூறிச்செல்வதால் சற்று குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது. லெனின் எழுதியுள்ள இந்த நூல் முழுக்க மார்க்ஸ், எங்கல்சின் பல்வேறு கூற்றுகள், ஏராளமான நூல்களில் இருந்து எடுத்து பயன்படுத்தப்பட்டுள்ளது. நூலை எழுதத் தொடங்கிய காலகட்டம், அதை வெளியிடும் காலம் என இரண்டுமே பல்வேறு வேறுபாடுகளைக் கொண்டுள்ளது. இதற்கு லெனினின் அரசியல்வாழ்க்கை பிரச்னைகளே மூல காரணம். நூலை முழுமையாக்க அவருக்கு நேரம் கிடைக்கவில்லை.

அரசு என்பது வர்க்க முரண்பாடுகளுக்கு இடையிலான மோதல் விளைவாக உருவாகி எப்படி நிலைத்து நின்றது என்பதை விளக்கும் விதம், நூலின் அடிப்படைத்தன்மையை புரிய வைக்கிறது. அரசு, வர்க்கம் இதெல்லாம் புரிந்தபிறகே அடுத்தடுத்த பிரச்னைகளுக்கு நூல் வாசகர்களை கூட்டிசெல்கிறது. வர்க்கம், முதலாளித்துவம், குட்டி முதலாளித்துவம், சந்தர்ப்பவாத சிந்தனையாளர்கள், அராஜகவாதம், மென்ஷிவிக், சோஷலிஸ்ட், போல்ஷ்விக், பாட்டாளி வர்க்கத்தின் செயல்பாடு என நிறைய விஷயங்கள் விரிவாக பேசப்படுகின்றன. ஜெர்மன் எழுத்தாளர்கள், சிந்தனையாளர்களான பிளெனேவ், காவுத்ஸ்கி ஆகியோர் பற்றிய விமர்சனம் நூல் முழுக்க கூறப்படுகிறது. இந்த எழுத்தாளர்களின் நூல்கள், சொந்த நாட்டைக் கடந்து ரஷ்யாவில் அதிகம் படிக்கப்பட்டவை. காவுத்ஸ்கியின் சந்தர்ப்பவாத அரசியல் கடுமையாக விமர்சிக்கப்பட்டு கண்டிக்கப்படுகிறது. மார்க்ஸ், எங்கல்ஸ் கூறியதை சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள், எதிர்புரட்சியாளர்கள் எப்படி புரட்டி மாற்றி எழுதுகிறார்கள் என்பதை புரியும்படி எழுதியுள்ளனர்.

அரசு எந்திரம் மக்களுக்கானதாக இருக்கவேண்டியதன் அவசியம், அல்லாதபோது அந்த பொறியமைவை தகர்த்து மீண்டும் உருவாக்க வேண்டிய அவசியம் பற்றி நூல் விளக்கமாக விவரிக்கிறது. புரட்சியை உருவாக்கியபிறகு என்ன செய்யவேண்டும் என தொழிலாளர்களுக்கு லெனின் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்குகிறார். இந்த நூலை வாசிப்பவர், ஒரு நாட்டின் அரசு, முதலாளித்துவவாதிகள், வர்க்கம், தொழிலாளர்கள், சந்தர்ப்பவாத தலைவர்கள், ஆதரவாளர்கள் என பல விஷயங்களை அறிந்துகொள்ள முடியும். நவீன காலத்தில் லெனின் கூறிய எழுதிய கருத்துகளுக்கு என்ன மதிப்பு என மார்க்சியவாதிகள் ஆய்வுநோக்கில்தான் கூறவேண்டும். ஆனால், அவரது சிந்தனைகள் எழுதப்பட்ட காலத்தில் முக்கியமானவையாக இருந்தன. மார்க்ஸின் பல்வேறு கொள்கைகளை லெனின் செயல்படுத்த முனைந்தார். அந்த காரணத்தாலேயே லெனின் எழுதிய இந்த நூல் முக்கியத்துவம் பெறுகிறது. புரட்சி செய்து பெற்ற அரசியல் அனுபவங்கள் இடம்பெறவில்லை. அதற்கு லெனின் பரபரப்பான அரசியல் வாழ்க்கையே காரணம். இந்த நூலில் அவர் ஏறத்தாழ கூற விரும்பிய பெரும்பாலான கருத்துகளை கூறிவிட்டார். கல்வி அறிவு இருக்கிற இடத்தில்தான் கம்யூனிசம் பரவ முடியும். கம்யூனிசம் சார்ந்த கல்வியை லெனின் எழுதிய இந்த நூல் சிறப்பாக விளக்கியுள்ளது.

கோமாளிமேடை குழு




https://www.google.com/url?sa=t&source=web&rct=j&opi=89978449&url=https://www.tamildigitallibrary.in/book-detail%3Fid%3DjZY9lup2kZl6TuXGlZQdjZhekZx9%26tag%3D%25E0%25AE%25B5%25E0%25AE%25BF.%2520%25E0%25AE%2587.%2520%25E0%25AE%25B2%25E0%25AF%2586%25E0%25AE%25A9%25E0%25AE%25BF%25E0%25AE%25A9%25E0%25AF%258D%2520%25E0%25AE%2585%25E0%25AE%25B0%25E0%25AE%259A%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AF%258D%2520%25E0%25AE%25AA%25E0%25AF%2581%25E0%25AE%25B0%25E0%25AE%259F%25E0%25AF%258D%25E0%25AE%259A%25E0%25AE%25BF%25E0%25AE%25AF%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AF%258D&ved=2ahUKEwj4k4_b9MOIAxWPsVYBHZZ7IIQQFnoECBYQAQ&usg=AOvVaw2AYqhTTAKvRueN5I-S1O5e


 
 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்