போலி அறிவியலை, மத அடிப்படைவாதத்தைத் திணிக்கும் கல்விக்கொள்கை!

 

 

 



போலி அறிவியலை, மத அடிப்படைவாதத்தைத் திணிக்கும் கல்விக்கொள்கை!

மக்களுக்கு வழங்கப்படும் கல்வியே, நாட்டின் மேம்பாடு, வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைகிறது. இதை ஐ நா அமைப்பும் அங்கீகரித்து ஏற்றுள்ளது. நவீன காலத்தில் தொடக்க கல்வி, தேசிய மேம்பாட்டுக்கு பங்களிக்கும் வகையில் மாறியுள்ளது. இதற்கு எதிராக 2020ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தேசிய கல்விக்கொள்கை அமைந்துள்ளது. இந்திய கலாசார தன்மைக்கேற்றபடி கல்வி என்ற போர்வையில், தேர்தல் வெற்றியை கருத்தில் கொண்டு கல்விமுறை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இக்கல்விக்கொள்கை, உண்மையான வரலாற்றை மாற்றி மாணவர்களை தவறான திசைக்கு வழிகாட்டுகிறது.

இளங்கலை, முதுகலை பாடத்திட்டங்களில் இந்திய அறிவுத்திட்டம் என்பதை ஒன்றிய அரசு செயல்படுத்துகிறது. ஜோதிடம், ஜவுளித்துறை, நகரங்கள் திட்டமிடுதல், வேத கணிதம் என வெளிப்படையாக பொதுவாக பார்த்தால் மாணவர்களுக்கு நன்மை தருவதுபோல தோன்றும். ஆனால், பகுத்தாய்ந்து பார்த்தால் வலதுசாரி கருத்துகளை உள்ளே திணித்து குறிப்பிட்ட சில இனக்குழுவினருக்கு சாதகமான கல்வி மாறியிருப்பதை அடையாளம் காணலாம். இதை பிரசாரம் செய்ய இலக்கியங்கள், நூல்கள், போஸ்டர்கள், அட்டவணைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

1953ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தில் தொடக்க கல்வி திட்டம் ஒன்றை நடைமுறைக்கு கொண்டு வந்தனர். இதை தமிழ்நாட்டில் குலக்கல்வித் திட்டம் என்று அழைத்தனர். திராவிட இயக்கத்தின் தலைவரான பெரியார், இக்கல்வித்திட்டத்தை எதிர்த்து போராடினார். திராவிட முன்னேற்ற கழகம், ராஜாஜியின் கல்வித்திட்டத்தை பார்ப்பனிய கொள்கை கொண்ட திட்டம் என விமர்சித்ததோடு அதை எதிர்த்து மக்களைத் திரட்டி போராடியது. எதிர்ப்புகளைக் கண்டு அரசு தன் கல்வித் திட்டத்தை திரும்ப பெற்றது. கல்வியில் சமத்துவத்தை உடைக்கும் எந்தவித கொள்கையாக இருந்தாலும் அதை பள்ளியில் நுழையவிடக்கூடாது என்ற உண்மையை வரலாறு நமக்கு உணர்த்தி வருகிறது. தேசிய கல்விக்கொள்கைத் திட்டம் குலக்கல்வித் திட்டத்தின் அனேக சாயல்களைக் கொண்டுள்ளது.

இந்திய அறிவுத்திட்டம் என்ற பெயரில் அரசு பள்ளிகள், கல்லூரிகள், உதவி பெறும் பள்ளிகளில் இந்துத்துவ பாசிச அமைப்பான ஆர்எஸ்எஸ்சின் கருத்தியல்களைக் கொண்ட நூல்களை உள்ளே கொண்டு வரத் தொடங்கியுள்ளனர். இதற்கு உதாரணமாக மத்தியப் பிரதேசத்தில் பொறியல் மாணவர்களுக்கு மறுபிறப்பு பற்றிய பாடத்தை கட்டாயமாக்கி, பாடத்திட்டத்தில் கொண்டு வந்துள்ளனர். அறிவியலைக் கற்று வரும் மாணவர்களுக்கு, அறிவியல் பின்னணி இல்லாத மூடநம்பிக்கை கருத்துகளைக் கொண்ட பாடம் பயிலும்படி கட்டாயப்படுத்தப்படுவதுதான் நகை முரணாக உள்ளது.

இந்திய அறிவுத்திட்டம், அரசியலமைப்பை மெல்ல செயலற்றதாக மாற்றி சிதைத்து கொல்லைப்புறத்தின் வழியாக அறிவியலுக்கு முரணான மூடநம்பிக்கை கருத்துகளை பாடமாக கல்வி நிறுவனங்களில் கொண்டு வரத் தொடங்கிவிட்டது. தமிழ்நாட்டில் திமுக அரசு, தேசிய கல்விக்கொள்கையை அறிமுகமான காலத்தில் இருந்தே எதிர்த்து வருகிறது. இக்கொள்கை, மாநில சுயாட்சி, சமூகநீதிக்கு எதிரான அம்சங்களைக் கொண்டது. மாநில சுயாட்சியை பறித்து கல்வியை நாடு முழுக்க ஒன்றுபோல உருவாக்க ஒன்றிய அரசு திட்டமிட்டு வருகிறது. கல்வியை முழுக்க வணிகப்படுத்துவதன் காரணமாக, வறுமை, விளிம்புநிலையில் உள்ள மக்களுக்கு கல்வி கிடைக்காமல் போகும் அபாயம் உருவாகிறது.

ஒன்றிய அரசின் நீட் தேர்வு, மக்களின் சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் கருத்தில் கொள்ளாமல் பேராசை கொண்ட தனியார் பயிற்சி மையங்களை ஊக்குவித்து வளர்க்கும் போக்கு கொண்டது. இந்த பொதுத்தேர்வை திமுக அரசு எதிர்க்கிறது. வறுமை நிலையில் உள்ள மாணவர்கள், பேராசை கொண்ட கல்வி வணிகர்களுக்கு பலியாகிறார்கள். செல்வம் கொண்ட மாணவர்கள் மட்டுமே நீட் தேர்வை தனியாரில் பயிற்சி பெற்று எழுதி வெற்றி பெறும் நிலை உள்ளது. தேசிய கல்விக்கொள்கை, இந்திய அறிவுத்திட்டம் என நடைமுறைக்கு வரும் கல்வியை கற்றுத்தர எந்த பயிற்சிகளும் கிடையாது. அதுபற்றிய எந்த அறிவிப்பையும் ஒன்றிய அரசு வெளியிடவில்லை. சாதி, போலி தேசப்பற்று, அரசியல் புறக்கணிப்பு என பல்வேறு அம்சங்களைக் கொண்டதாக ஒன்றிய அரசின் கல்விக்கொள்கை அமைந்துள்ளது.

ஆண்டு கல்வி நிலை அறிக்கை, 2023ஆம் ஆண்டு வெளியானது. இதில், இருபத்தைந்து சதவீத இளையோருக்கு தாய்மொழியில் இரண்டாம் வகுப்பு பாடல் நூல்களை துல்லியமாக தெளிவாக வாசிக்கத் தெரியவில்லை என்ற உ்ணமை வெளியானது. 14-18 வயது கொண்ட இளையோரில் நாற்பது சதவீதம் பேருக்கு மூன்றிலக்க வகுத்தல் கணக்கு போட தெரியவில்லை. இப்படி அடிப்படையில் நிறைய தடுமாற்றங்கள் உள்ளபோது, உயர்கல்வியில் இன்னும் என்னென்ன பிரச்னைகள் வரும் என யோசிக்க வேண்டும்,

கல்விக்கொள்கை, ஒரு மாணவர் தேர்ந்தெடுத்த துறையில் சாதிக்கும்படியான அம்சங்களைக் கொண்டிருக்கவேண்டும். அவர், அரசின் கொள்கை வழியாக திறன்களை வளர்த்துக்கொள்ள இயன்றால் சரிதான். தொன்மை அறிவு என்றாலும் அதில் அறிவியல் முறைப்படி காரண, காரியங்கள் சரியாக இருக்கவேண்டும். பாகுபாடு இருக்க கூடாது. குறிப்பிட்ட பெரும்பான்மை மதக்கருத்துகளை மாணவர்களிடம் திணிப்பது, பல்வேறு இனக்குழுக்கள் வாழும் இந்தியாவுக்கு ஆபத்தானது. கல்வி ஒத்திசைவையும், அமைதியையும் ஏற்படுத்துவதாக இருக்கவேண்டுமே ஒழிய அரசியல் லாபத்திற்காக, பழிவாங்கலுக்காக பயன்படுத்தப்படக்கூடாது.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - தமிழச்சி தங்கபாண்டியன்
தமிழாக்க கட்டுரை
யத்ருச்யா
 
#NEP 2020 #pseudo science #reincarnation #engineering #irony #greed #scientific #propaganda #IKS #TIE #education #dravidian #dmk #dk #periyar #harmony #compassion #hindutva #ASER #NEET #autonomy #social justice #kula kalvi thittam #inequality #elementary education


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்