ஒரு எல்லை இரண்டு வேறுபட்ட அரசு அமைப்புகள்!

 

 

 






ஒரு எல்லை இரண்டு வேறுபட்ட அரசு அமைப்புகள்

சீனா, சோசலிச கருத்தை அடிப்படையாக கொண்ட சர்வாதிகார நாடு. அதை யாரும் மறுக்க முடியாது. இந்தியா, இப்போதைக்கு தேர்தல் நடத்தப்பட்டு ஜனநாயகம் என்பது பெயரளவுக்கேனும் உள்ளது. சீனாவுடன் இந்தியாவுக்கு எல்லைப் பிரச்னைகள் சுதந்திரமடைந்த காலம் தொட்டே உண்டு. இப்போது சீனா, திபெத்தை முழுக்க கையகப்படுத்தி, அங்கு அவர்களின் அரசியல் கருத்துக்கு ஏற்ற தலாய் லாமா ஒருவரை நியமித்து ஆட்சி செய்து வருகிறது. திபெத்திற்கு பார்வையாளர்கள் வரவோ, அங்குள்ளவர்கள் இந்தியாவில் உள்ள ஆன்மிக தலைவரான அசல் தலாய் லாமாவைப் பார்க்கவோ செல்ல முடியாது. அதற்கு சீன அரசு அனுமதி அளிப்பதில்லை.

சீனாவில் சோசலிச அரசுக்கு, கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக மக்கள் எந்த விமர்சனத்தையும் வைக்க முடியாது. டெக் நிறுவனங்கள் மூலம் சமூக வலைத்தளங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அரசை விமர்சிக்கும் பதிவுகள் உடனே காவல்துறையால் நீக்கப்பட்டு வருகின்றன. நடப்பு காலமான 2024ஆம் ஆண்டு, திபெத்தில் மக்கள் சீன குடியரசு உருவாகி எழுபத்தைந்து ஆண்டு ஆனதையொட்டி கொண்டாட்ட நிகழ்ச்சிகள் தொடங்கியுள்ளன. உண்மையில் திபெத்தில் உள்ள மக்கள், சிறையில் வைக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் சீன அதிபரான ஷி ச்சின்பிங்கின் கொள்கையால் மகிழ்ச்சியாக இருப்பது போல பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. இது, மாவோவின் கலாசாரப் புரட்சியால் உள்நாட்டில் பல லட்சம் மக்கள் இறந்தபோது, அதை மறைத்து செய்த வெளிநாட்டு கருத்தியல் பிரசாரம் போல உள்ளது.

கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சீன கம்யூனிஸ்ட் கட்சியில் அரசியல் குழு உறுப்பினரான, வெளியுறவு அமைச்சரான வாங் யியை சந்தித்துப்பேசினார். இந்த சந்திப்பு ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நடைபெற்றது. இந்தியாவும், சீனாவும் கூட்டுறவும், ஒற்றுமையாகவும் இருக்கவேண்டும். இதன் வழியாக நுகர்வை தவிர்த்து பெரிய சாதனைகளை செய்யலாம் என வாங் யி கூறினார். அவர் கூறியது எளிய சொற்கள்தான். ஆனால், அதை நடைமுறையில் சாத்தியப்படுத்துவது மிகவும் கடினம். 2020ஆம் ஆண்டு தொடங்கி இன்றுவரை லடாக் பகுதியில் ஆறு இடங்களில் சீனா முன்னேறி ஆக்கிரமிப்புகளை செய்துள்ளது. இவற்றில் எழுபத்தைந்து சதவீதம் நீக்கப்பட்டுவிட்டதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கூறினாலும், நிலைமை எதிர்பார்த்த அளவுக்கு சீரடையவில்லை.

இந்திய சீன எல்லை 1956ஆம் ஆண்டு சீன பிரதமர் சூ என் லாயால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. 1959ஆம் ஆண்டு, எல்லைக்கோடு இரு நாடுகளாலும் அங்கீகரிக்கப்பட்டது. ஆனால், அதை தற்போதைய சீன அரசு கண்டுகொள்ளவில்லை. திபெத்தின் ஹாசாவில் சர்வதேச தகவல்தொடர்பு மையம் செப்டம்பர் 2ஆம்தேதி உருவாக்கப்பட்டு இயங்கி வருகிறது. திபெத்தின் பெயரும் கூட ஷியான் என மாற்றப்படவிருக்கிறது. இந்துத்துவ நாடாக இந்தியா சர்வாதிகாரத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. ஆனால், சீனா, தொடக்கத்தில் இருந்தே சோசலிசத்தை அடிப்படையாக கொண்ட சர்வாதிகார நாடாகவே இருந்தது. இரு நாடுகளும் அருகருகே இருந்தாலும் சித்தாந்த அடிப்படையில் எதிரெதிரான இயல்பை, செயல்பாட்டைக் கொண்டவை.

திபெத்தில் சீன அரசு, தனது கருத்தியலை விளம்பரப்படுத்தி வருகிறது. கூடவே ராணுவத்தையும் எல்லைகளில் குவித்து வருகிறது. எனவே, இனி, இமாலய பகுதியில் மானசரோவர் யாத்திரை என்பது நடைபெறாது. சீனாவில் சோசலிச சர்வாதிகாரம் என்றால் இந்தியாவில் இந்துத்து கருத்தியல் சர்வாதிகாரம் வளர்ந்து வருகிறது. இப்போதைக்கு இந்தியாவில் ஜனநாயகம் என்பதைக் கூற முடிகிறது. நாளைக்கு நிலைமை மாறலாம்.

டெக்கன் கிரானிக்கல் - கிளாட் ஆர்பி
தமிழாக்க கட்டுரை
தீரன்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்