உணர்வு ரீதியாக பிறருக்கு அடிமையாக இருப்பது சுதந்திரத்தை தொலைத்துவிடும்!

 

 

 


பிறரின் மகிழ்ச்சிக்குப் பொறுப்பேற்றுக்கொள்ளாதீர்கள்!

லின்சிஸ்தான் என்ற நாட்டில் சமூக வலைதளத்திற்கு புதிய விதி நடைமுறைக்கு வந்தது. நீங்கள் பதிவிடும் கருத்தால் யாராவது ஒருவருக்கு மனம் புண்பட்டால் அபராதம், சிறைதண்டனை உண்டு என அரசு கூறியது. உண்மையில் நமது கருத்து அனைவருக்கும் மகிழ்ச்சியை தர முடியுமா, அதற்கு வாய்ப்புள்ளதா? நிச்சயம் இல்லை. முன்னமே கூறியபடி தண்டனையை கூறி, ஒருவரை மிரட்டி வழிக்கு கொண்டு வருவதில் இதுபோன்ற அறிவிப்புகள் வரும்.

நீங்கள் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர். அதிலேயே, நீங்கள் எடுக்கும் முடிவுகள், கூறும் கருத்துகளுக்கு பலரும் ஆமோதிப்பை வெளிப்படுத்த மாட்டார்கள். எதிர்ப்பார்கள். அப்படி சொல்லக்கூடாது. பேசக்கூடாது என்பார்கள். இந்த லட்சணத்தில் காழ்ப்பும் வெறுப்பும் கொண்ட சமூக வலைத்தளத்தில் பதிவிடும் கருத்துகளுக்கு பூமாலை மட்டுமே கிடைக்குமா என்ன? மாட்டுச்சாணியைக்கூட அள்ளி வீசுவார்கள். அப்படியானால் என்ன செய்வது? விதிக்குட்பட்டு அரசின் விளம்பரம், பிரசார திரைப்படங்கள், அரசு ஆதரவு ஆட்கள் மட்டுமே சமூக வலைத்தளத்தில் இயங்க முடியும் என்பதே விதிகள் மூலம் அரசு மறைமுகமாக கூறவருகிறது.

காதலோ, திருமண உறவிலோ எதிலும் பிறரின் மகிழ்ச்சிக்கு, துன்பத்திற்கு கூட இருப்பவர் கணவரோ, மனைவியோ காரணமாக முடியாது. இயல்பாகவே ஒருவரது மனநிலை சூழலுக்கு ஏற்ப, சிந்தனைகளுக்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கும். அப்படி பொறுப்பு ஏற்றுக்கொண்டு மன்னிப்பு கேட்பவர்கள், மெல்ல தங்களை தாங்களே கழுத்தில் பெல்டை கட்டிக்கொண்டு அதை இன்னொருவருக்கு கொடுக்கிறார்கள். கொடுத்துவிட முயல்கிறார்கள். இந்த செயல்பாடு, அவர்களை நீங்காத துயரத்தில் தள்ளும். இத்தகைய சுரண்டல் உறவுக்கு எதிர்காலம் இல்லை.

எல்லோருக்கும் நண்பராக ஒருவரால் இருக்க முடியாது. அப்படி இருக்கிறார் என கூறினால், அது நடிப்பாகவே இருக்கும். சாத்தியமில்லாத விஷயம் அது. ஒருவர் தனது தேவையை எந்த உறவிலும் வெளிப்படையாக கூறி அதை நிறைவேற்றிக்கொள்ளலாம். இங்கு நான் கூறுவது உணர்வுரீதியான தேவைகளை, பொருளாதார தேவைகளை அல்ல. குடும்பம், சமூகம், அமைப்புகள் எப்போதுமே ஒருவரை சுதந்திரமாக இருக்க விடாமல் பல்வேறு உதாரணங்களைக் கொண்டு முடக்கும். கட்டுப்பாடு, ஒழுக்கம் என்று கூறுவதெல்லாம் மனிதர்களை, சுதந்திரமாக, இயங்க செயல்பட, சிந்திக்க விடாமல் தடுக்கும் சங்கிலிகள்.

எப்போதுமே உணர்வுகளுக்கு அடிமையாகி இருக்கக்கூடாது. நமது செயல்கள், மகிழ்ச்சி என்பது நம்மைச் சார்ந்ததே. சிரிப்பு வந்தால் சிரியுங்கள். அழுகை வந்தால் அழுதுவிடுங்கள். இல்லையெனில் அதுவே பின்னாளில் மனநல குறைபாடுகளாக வெளிப்பட வாய்ப்புகள் உண்டு. சுதந்திரம் என்பது காற்று போல எப்போதும் உள்ளது. அதைப் பறிக்கும் நபர்களிடம் உங்களை தொலைத்துவிடாதீர்கள். அன்பின் பெயரில் அடிமையாகாதீர்கள். ஒருமுறை உங்களின் தனித்துவத்தை இழந்துவிட்டால், மீண்டும் அதைப் பெறுவது கடினம்.

மூலம் நான் வயலன்ட் கம்யூனிகேஷன்
வின்சென்ட் காபோ

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்