தமிழகத்தில் அமைதியாக நடக்கும் பேரழிவு - குழந்தை திருமணங்கள், இளையோர் கர்ப்பிணி பிரச்னை

 

 

 





 

 குழந்தை திருமணம், பள்ளிப்பருவ கால கர்ப்பங்கள் - அமைதியாக நேரும் சீரழிவு

இந்தியாவில் ஆங்கிலேயர் காலகட்டத்தில் குழந்தை திருமணங்கள் ஆயிரக் கணக்கில் நடந்தேறின. பின்னர், அதுபற்றிய பிரச்னைகள் தெரியவந்தபிறகு, அவற்றைத் தடுக்க அரசும் சட்டங்களை இயற்றியது. கல்வி கற்கத் தொடங்கிய மக்களும் மெல்ல மனம் மாறினார்கள். குழந்தை திருமணங்கள் நடப்பது குறைந்தது. குறிப்பாக கல்வி அறிவு, குழந்தை திருமணங்களை பெருமளவு குறைத்தது என்பதே உண்மை. இப்போது, அப்படியான சூழ்நிலை மெல்ல தகர்ந்து, தமிழ்நாடு மெல்ல பின்னோக்கி நகர்ந்து வருகிறது.

சென்னையில் உள்ள வருமானம் குறைந்த பின்தங்கிய பகுதிகளில் (கண்ணகி நகர், பெரும்பாக்கம்) குழந்தைத் திருமணங்கள், பள்ளிகால கர்ப்பங்கள் அதிகரித்து வருகின்றன. குடும்பநலத்துறை இதுபற்றிய தகவல்களை அறியும்போதே, பள்ளிச்சிறுமிகள் கர்ப்பிணிகளாக இருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் அரசு பெரிதாக ஏதும் செய்யமுடிவதில்லை. இருந்தாலும் பள்ளி செல்லும் வயதில் கர்ப்பிணியாவதால் ஏற்படும் அபாயங்கள் பற்றி விழிப்புணர்வு செய்ய முயன்று வருகின்றனர். பள்ளி, அரசு மருத்துவமனை வழியாகவே அரசின் குடும்பநலத்துறைக்கு குழந்தை திருமணங்கள், டீனேஜ் கர்ப்பம் பற்றிய தகவல்கள் தெரியவருகின்றன. பல்வேறு சம்பவங்களில் குழந்தை திருமணங்கள் மறைக்கப்படுகின்றன.

தினக்கூலி தொழிலாளர்கள், ஒற்றை பெற்றோராக இருக்கும் குடும்பத்தில் பெண்கள் எளிதாக பாலின ஈர்ப்பு ஏற்பட்டு உடலுறவில் ஈடுபடுகிறார்கள். இதில் முக்கியமானது, படிக்கும் பள்ளி சிறுமிகளாக இருந்தாலும் கூட பாதுகாப்பான உடலுறவுக்கு உதவும் ஆணுறை, கர்ப்பத்தடை மாத்திரைகள் பற்றிய அறிவோ, விழிப்புணர்வோ இல்லை என்பதுதான்.

பெற்றோர் உழைப்புக்காக அதிக நேரம் செலவிட்டு நெடுநேரம் கழித்தே வீடு திரும்புகிறார்கள். அவர்களுக்கு பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்பதே தெரிவதில்லை. அப்படி தெரிய வரும்போது பள்ளி செல்லும் பெண்பிள்ளை கர்ப்பிணியாக இருக்கிறாள். இனி என்ன செய்வது என காதலித்தவனுக்கு மணம் செய்து வைத்துவிடுகிறாள். ஆனால், உண்மையான பிரச்னை இதிலிருந்துதான் தொடங்குகிறது. பள்ளி செல்லும் டீனேஜ் பெண்கள், காதலித்து கர்ப்பம் தரிப்பதால் அவர்களுக்கு அரசு வழங்கும் மருத்துவர் முத்துலட்சுமி உதவித்தொகை ரூ.18 ஆயிரம் கிடைக்காமல் போகிறது. பள்ளிக் கல்வியும் தடைபடுகிறது.

பிறக்கும் குழந்தையும் எடை குறைவாக, பல்வேறு நோய்களுடன் பிறக்க அதிக வாய்ப்புள்ளது. பள்ளிப்படிப்பு இல்லை என்பதால், சிறுமியும் பொருளாதார தேவைக்காக கூலி வேலைக்கு போகும் சூழல் ஏற்படுகிறது. இது அப்படியே அவர்களது பெற்றோர் வாழ்க்கை போலவே வட்டமாக சுழற்சியாகிறது. காதலை சட்டம் போட்டு தடுக்கும் வட இந்திய முட்டாள்தனங்களை நாம் செய்யவேண்டியதில்லை. கர்ப்பிணியான பெண்கள் கல்வியை மீண்டும் தொடர்வதற்கான வாய்ப்புகளை அரசு ஏற்படுத்திக் கொடுக்கலாம். பாதுகாப்பான உடலுறவு பற்றி விழிப்புணர்வு செய்யலாம். இதன்மூலம் பெண்கள் நோயுறுவதை தடுக்கலாம். ஆபத்தை முன்கூட்டியே தடுக்க முயலலாம்.

அரசின் சட்டங்களைப் பார்ப்போம்.

பிசிஎம்ஏ, குழந்தை திருமண தடை சட்டம் 2006
ஆணுக்கான திருமண வயது 21, பெண்ணுக்கான திருமண வயது பதினெட்டு. இந்த விதிகளை மீறி நடைபெறும் திருமணங்கள் அனைத்தும் குழந்தை திருமணங்களாக கருதப்படும். இதற்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை அல்லது ஒரு லட்சம் அபராதம் கட்டவேண்டும். குறைந்த வயது கொண்ட சிறுமிகளை மணம் செய்துகொடுக்கும் பெற்றோர், காப்பாளர் ஆகியோர் தண்டனைக்கு உரியவராகிறார்கள்.

சிறுமிகளை கர்ப்பிணியாக்கும் செயலுக்கு ஏழாண்டு சிறை தண்டனை உண்டு.

பாலியல் ரீதியான குற்றங்களுக்கான தண்டனை - போக்சோ 2012

பதினெட்டு வயதுக்கு கீழுள்ள சிறுமிகளை வல்லுறவு, தொல்லை, ஆபாசப்படம், சீண்டல் என எந்த குற்றங்களைச் செய்தாலும் இப்பிரிவில் பதிவு செய்யலாம்.

செய்த குற்றத்தைப் பொறுத்து நீதிபதி மூன்று ஆண்டு தொடங்கி ஆயுள் தண்டனை வரை தண்டனை விதிக்கலாம். சிறுமியின் சம்மதத்தைப் பெற்று உடலுறவு கொண்டேன் என ஒருவர் சாதித்தாலும் போக்சோ சட்டப்படி குற்றம் குற்றமே.

குழந்தை திருமணங்கள், பெண்கள் மீதான வன்முறைக்கு 181, 1098 ஆகிய உதவி எண்களை ஒருவர் பயன்படுத்தி புகாரளிக்கலாம்.

2024ஆம் ஆண்டு ஜனவரி தொடங்கி ஜூலை மாதம் வரை குழந்தை திருமணப் புகார்கள் பதிவாகியுள்ள எண்ணிக்கை 2,361(தமிழ்நாடு)

குழந்தை திருமணத்தில் சீரழிவை சந்தித்த முதன்மை மாநிலங்கள்

தமிழ்நாடு - 8,966
கர்நாடகா - 8,348
மேற்கு வங்கம் - 8,324
தெலங்கானா - 4,400
ஆந்திரா - 3,416

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகளவு குழந்தை திருமணங்கள் நடந்து வருகின்றன.

பத்மஜா ஜே எழுதிய டிஓஐ கட்டுரையை அடிப்படையாக கொண்ட தமிழாக்கம்.

#child marriage #TN #school dropout #PCMA act #POCSO #low income #single parent #dailywages #teenages #hotspot #aarvam ngo #drug abuse #pregnancy #social welfare #underweght #unhealth #babies #haemoglobin #181 #1098 #helpline #safesex #love #elopement #complaints #unprotected sex # awarenss #silent crisis


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்