ஆப்பிரிக்காவில் அடிப்படை கட்டமைப்பிற்கு உதவி வளர்ச்சியை பகிர்ந்து கொண்ட சீனா!
ஆப்பிரிக்காவை நவீனமயமாக்கும் சீனா!
உங்கள் நண்பரோடு செல்லும் பாதையை பகிர்ந்துகொள்ளுங்கள் என்று ஆப்பிரிக்க பழமொழி ஒன்றுண்டு. யார் நம்புகிறார்களோ இல்லையோ சீனா அதை நம்புகிறது. சீனாவும், ஆப்பிரிக்காவும் பரஸ்பர நலன்களுக்காக இணைந்தே பயணிக்கின்றன. அண்மையில் சீனா, ஆப்பிரிக்காவுக்கான ஒத்துழைப்பு மாநாடு சீனாவில் நடைபெற்றது. இதில் ஐம்பது ஆப்பிரிக்க நாட்டு தலைவர்கள் பங்கேற்றனர். 1970ஆம் ஆண்டு சீனாவில் இருந்து ஐம்பதாயிரம் தொழிலாளர்கள், பொறியாளர்கள் ஆப்பிரிக்காவின் தான்சானியா, ஜாம்பியா நாடுகளுக்கு இடையிலான ரயில்பாதை திட்டத்தை செயல்படுத்த வந்தனர். கடந்த ஐம்பது ஆண்டுகளில் ரயில்பாதை பணியில் ஏற்பட்ட பல்வேறு விபத்துகளில் மொத்தம் எழுபது சீன தொழிலாளர்கள், பொறியாளர்கள் இறந்துள்ளனர். இவர்களுக்கென நினைவுத்தூண்களை தான்சானியாவில் எழுப்பி உள்ளனர்.
1,860 கி.மீ தொலைவுக்கு ரயில் பாதையை சீனா, ஆப்பிரிக்காவில் உருவாக்கியுள்ளது. அப்பாதை இரு நாடுகளின் நல்லுறவுக்கான சாட்சியாக உள்ளது. சீனா ரயில்வே கன்ஸ்ட்ரக்சன் கார்ப் நிறுவனம், நைஜீரியாவில் நாற்பத்து மூன்று ஆண்டுகளாக இயங்கி வருகிறது. அதில் இஸ்ஸா பாத்திமா அப்லோலா, என்ற பெண் ரயில் பொறியாளர் உருவானார். இவர்தான் அந்நாட்டின் முதல் பெண் ரயில் பொறியாளர். அந்நிறுவனத்தில் பதினாறு ஆண்டுகளாக, பல்வேறு திட்டங்களில் பங்களித்து வருகிறார்.
காங்கோ நாட்டின் அதிபர் டெனிஸ், சீனா எங்களுக்கு எப்போதைக்குமான நட்புநாடு என்று கூறினார். சாலை, துறைமுகம், விமான நிலையம், ரயில்பாதை ஆகியவற்றை கட்டமைத்ததோடு, பல்லாயிரக்கணக்கான நிபுணர்களுக்கும் பயிற்சி அளித்துள்ளது. வேலைவாய்ப்புகளும் கூடியுள்ளன. சீனாவின் உதவி என்பது வெற்று பேச்சளவில் அல்ல. செயல் அளவிலும் உள்ளது. தான்சானியாவில் சபையர் ஃப்ளோட் கிளாஸ் தொழிற்சாலை தொடங்கப்பட்டுள்ளது. இத்தொழிற்சாலை, தனது உற்பத்திபொருளை உள்ளூரிலும் ஆறு ஆப்பிரிக்க நாடுகளிலும் விற்பனை செய்ய திட்டமிட்டு இயங்கி வருகிறது. முழுத்திறனோடு இயங்கினால் நேரடியாக 1,650, மறைமுகமாக 6,000 வேலைவாய்ப்புகளையும் அளிக்கும். போஸ்வானாவில், பசுமை ஆற்றல் தொழிற்சாலைகளை சீனா, உருவாக்கி வருகிறது. நூறு மெகாவாட் சோலார் பேனல் நிலையமாக உருவாகும், தொழிற்சாலை நாட்டிற்கு முக்கியமானது.
சீனா, ஆப்பிரிக்காவில் வேளாண்மை தொழில்நுட்பங்களுக்கென தனியாக இருபத்து நான்கு மையங்களை அமைத்துள்ளது. 300 மேம்பட்ட தொழில்நுட்பங்களை உள்ளூர் மக்களுக்கு கற்றுத்தந்துள்ளது. 14 ஆயிரம் மக்களுக்கு வேளாண்மை முறைகள் பற்றி பயிற்சி அளித்துள்ளது. சீனா - ஆப்பிரிக்க கூட்டு நிறுவனங்களில் பணியாற்றுவதற்கான தொழில் பயிற்சிகளை சீனா ஆப்பிரிக்க இளைஞர்களுக்கு பயிற்சி மையங்கள் மூலம் வழங்குகிறது. இந்த வகையில் 2,20,000 இளைஞர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். மேற்கு நாடுகள், சீனாவை வணிக ரீதியாக பொருளாதார தடை கூறி விலக்கினாலும், அதன் வளர்ச்சி என்பது தடுத்த நிறுத்தக்கூடியதல்ல. ஏழை நாடுகளுடனான நல்லுறவு காரணமாக பரஸ்பர வளர்ச்சி அடிப்படைக் கட்டமைப்பு திட்டங்கள் வழியாக வளர்ந்து வருகிறது.
சீனா டெய்லி
தமிழாக்கம் தீரன்
கருத்துகள்
கருத்துரையிடுக