உண்மைகளை வெளிப்படையாக பேசும் பிரபாகரனின் நேர்காணல் நூல்! - தமிழீழம் என் தாகம்
தமிழீழம் என் தாகம்
விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன்
பேட்டி
தமிழீழ விடுதலைப்புலிகள் வெளியீடு
இந்தியாவில் வெளியாகும் சண்டே என்ற பத்திரிகைக்காக பத்திரிகையாளர் அனிதா பிரதாப் எடுத்த நேர்காணல் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் இருபது பக்கங்களைக் கொண்ட நூல். பிரபாகரன் அவர்களே கேள்விகளுக்கு பதில் கூறியதால் நூல் முக்கியத்துவம் பெறுகிறது. மற்றபடி பத்திரிகையாளர் அனிதா பிரதாப் கேட்ட கேள்விகள் அனைத்துமே அரசு, ராணுவத்திற்கு விடுதலைப்புலிகள் அமைப்பு பற்றிய தகவல்களைக் கொடுப்பது போலவே உள்ளது. கேள்விகள் தெளிவாகவும் இல்லை. நேர்மையாகவும் இல்லை.
கெரில்லா போர் முறையைப் பற்றி கேள்வி கேட்டுவிட்டு இயக்கத்தின் கொள்கை என்னவென்று ஒரு கேள்வி. விடுதலை அல்லது புரட்சி இயக்கங்கள் பெரும்பாலும் இடதுசாரி கொள்கையை மையமாக கொண்டவை. இதைக்கூடவா பத்திரிகையாளர் அறியாமல் இருப்பார்? இல்லை அதை வேண்டுமென்றே கேட்கிறாரா என்று தெரியவில்லை.
இன்னொரு இடத்தில் இயக்கத்திற்கு நிதி, ஆயுதம் கொடுத்து உதவும் அமைப்புகளைக் கூறச்சொல்கிறார். அதற்கு பிரபாகரன் பதில் கூற விரும்பவில்லை என்று கூறி கடக்கிறார். விடுதலை இயக்கம் பற்றி, அதன் செயல்பாடுகள் பற்றி கிஞ்சித்தும் தெரியாதவர்களைக்கூட இக்கேள்விகள் எரிச்சல் அடைய வைத்துவிடும்.
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம், தலைவர் பிரபாகரன் நேரடியாக அளித்துள்ள நேர்காணல் என்பதால் அதை தமிழாக்கம் செய்து வெளியிட்டுள்ளது. மற்றபடி கேள்விகள் எவையும் ஆழமானவை கிடையாது. அதில் நேர்மையும் இல்லை.
இந்த சிறுநூலை வாசிப்பதன் வழியாக வாசகர்களுக்கு என்ன கிடைக்கிறது? எளிமையான முறையில் பிரபாகரனின் புரட்சிகர வாழ்க்கையைப் பற்றி அறியலாம். அவரின் இளம்வயது, இயக்கத்தை தொடங்குவதற்கான காரணம் ஆகியவை படிக்க சிறப்பாக உள்ளன. இன்று விடுதலைப்புலிகள் இயக்கம், இலங்கை ராணுவத்தால் முற்றாக அழிக்கப்பட்டாலும் பிரபாகரன் தனது செயல்பாட்டில் கொண்டிருக்கிற நம்பிக்கையும் கனவும் அசாதாரணமானது. பேட்டியில் எங்குமே இயக்கச் செயல்பாட்டின் தொய்வு தெரியவில்லை. அனைத்து செயல்பாடுகளையுமே நம்பிக்கையுடன் வெளிப்படுத்தி பேசுகிறார்.
நூலில், பிரபாகரன் அவர்கள் எதையும் மழுப்பி பேசவில்லை. பிற விடுதலை இயக்கங்கள், தமிழ் அரசியல் கட்சிகள், சிங்கள ஆட்சியாளர்கள் மீது வெளிப்படையான அதிருப்தியை, நம்பிக்கையின்மையை கூறுகிறார். மற்ற இயக்கங்களை விடுதலைப்புலிகள் அச்சுறுத்துகிறார்களா என்பதற்கு அவர் கூறும் பதில் சற்று எதிர்பாராத ஒன்று. வாசிக்கும்போது சிறப்பாக உள்ளது.
விடுதலைப்புலிகள் இயக்கம் பற்றி, அதன் நோக்கம் பற்றி ஏராளமான நூல்கள் எழுதப்பட்டுவிட்டன. ஆதரவாக, எதிராக என நூல்கள் வகை பிரியும். பிரபாகரன், புலிகள் இயக்கம் பற்றி தானே கூறியிருப்பதால் இச்சிறுநூல் முக்கியத்துவம் பெறுகிறது.
கோமாளிமேடை குழு
கருத்துகள்
கருத்துரையிடுக