புறக்கணிக்கும் கலாசாரம்! - நமது முதுகெலும்பு உறுதியாக நேராக இருக்கிறதா?

 



புறக்கணிப்பு கலாசாரம்




ட்விட்டரில் பெரும்பாலான போராட்டங்கள் புறக்கணிப்போம் என்றே தொடங்கி வருகின்றன. இவற்றை பெரும்பாலும் தேசபக்தி கூட்டம்தான் முன்னெடுக்கிறது. இவற்றில் பெரிய புத்திசாலித்தனம் ஏதும் இருக்காது. கிறுக்குத்தனமாக ஒன்றை புரிந்துகொண்டு உடனே புறக்கணிப்போம், கொடி பிடிப்போம் என ஹேஷ்டேக்கை கட்டைவிரலால் அழுத்திக்கொண்டிருப்பார்கள். பெரும்பாலும் இப்படிப்பட்ட போராட்டங்களை அசலான பிரச்னைகளிலிருந்து மக்களை திசைதிருப்ப ஆளும் ஒன்றிய அரசின் ஐடி விங் ஆட்கள் செய்கிறார்கள். அல்லது அப்படி செய்பவர்களுக்கு காசு கொடுத்து ஊக்கப்படுத்துகிறார்கள். 

இந்தியர்களுக்கு சிறப்பாக வேலை செய்யும் உறுப்பு, காது. அதில் கேட்கும் செய்திகளை மோசமாக பிறருக்கு சொல்ல பயன்படும் உறுப்பு வாய் என்று கூறுவார்கள். அந்த வகையில் போலிச்செய்திகளுக்கும் வெறுப்பை உண்டாக்கவும் ட்விட்டர் முக்கியமான கருவியாகிவிட்டது. 

ஃபேப் இந்தியாவின் விளம்பரம்


முன்னர் டாடாவின் தனிஷ்க் நிறுவனத்தின் மதமாற்றுத்திருமணத்தைப் பேசிய ஏகத்துவம் என்ற விளம்பரத்திற்கு மனது புண்பட்டுவிட்டது என ஓலங்களை எழுப்பினார்கள். விளம்பரத்திற்காக இந்த கூச்சலா என பதறிப்போன தனிஷ்க் நிறுவனம். அதனை திரும்ப பெற்றுவிட்டது. இப்போது ஸ்டைலான காதி உடைகளை விற்கும் ஃபேப் இந்தியாவின் நேரம். 

மத்திய மேல்தட்டு வர்க்கத்தினரின் செல்வாக்கு பெற்ற ஆடை விற்கும் நிறுவனம், ஃபேப் இந்தியா. உருது வார்த்தைகளைப் பயன்படுத்தி ஜாசன் இ ரிவாஸ் என்ற தலைப்பில் ஆடைகளை விளம்பரப்படுத்தியது. உடனே தேசபக்தி ஆட்களுக்கு மூக்கு வியர்த்து தேசபக்தி புண்பட்டுவிட்டது. இது இந்தியக் கலாசாரமல்ல, விளம்பரத்தில் பெண்கள் பொட்டு கூட வைக்கவில்லை என ஏராளமான நோபல் பரிசு பெறும் தரத்திலான கண்டுபிடிப்புகளை செய்தனர். இதற்கு முன்னர் ப்ரூக்பாண்ட் ரெட்லேபிள் டீயில் கூட இதேபோல, முஸ்லீம் ஒருவர் விநாயகர் சிலையை செய்யும் சிற்பியாக இருப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியது. 


தனிஷ்க் ஏகத்துவம்

காந்தி, இந்தியாவின் பொருளாதாரம் இங்கிலாந்து பொருட்கள் குவிக்கப்படுவதால் கெடுகிறது என்பதை உணர்ந்தார். இதற்காக அந்நிய பொருட்களை புறக்கணிப்போம் என்று மக்களை ஊக்கமூட்டினார். தானும் கதர் ஆடைகளையே அணிந்தார். ஆனால் இன்று எந்த மதிப்பும் இல்லாமல் புறக்கணிப்போம் என கோஷங்களை எழுப்பி வருகிறார்கள். இதற்கு என்ன பயன் என்று புரியவில்லை. 

ஒரு நிறுவனத்திற்கு விளம்பரத்தை வடிவமைக்கும்போது அந்த பிராண்டின் விற்பனை இலக்கு, யாரை குறிவைத்து விற்கிறோம் என்பதை தெளிவாக தெரிந்துகொண்டு உருவாக்கவேண்டும். கூடவே அப்போதைய நாட்டின் அரசியல் நிலையும் முக்கியம் என்கிறார் பிஜூர் ஆலோசனை நிறுவனத்தின் தலைவரான ஹரிஷ்

ஒரு நிறுவனம் தான் எந்த தவறும் செய்யாதபோது எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். தன்னம்பிக்கையோடு நின்றால் அதற்கு பெருமை. அதுவும் ஃபேப் இந்தியா போல பாரம்பரியமான நிறுவனத்திற்கு அதுவே சிறந்த விளம்பரமாக இருக்கும் என்கிறார் எழுத்தாளரும், விளம்பர வல்லுநருமான அனுஜா சௌகான். இதற்கு எடுத்துக்காட்டாக நைக் நிறுவனம், ஆப்ரோ அமெரிக்கர்கள் மீதான தாக்குதலை எதிர்த்து வெளியிட்ட விளம்பரம் முக்கியமானது. தனது நிலையில் உறுதியாக நின்று வென்றுகாட்டியது. 

வணிக நிறுவனங்கள் என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டது. எனவே, குறிப்பிட்ட கான்செப்டில் விளம்பரங்களை செய்தாலும் கூட அதற்கு சமூக வலைத்தளத்தில் மன்னிப்பு கேட்பது என்பது சரியானது அல்ல. இப்படி ஒருமுறை நடந்தால், பிறகு அடுத்தடுத்து அதேபோன்ற நிலை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. உண்மையில் நிறுவனம் சமூக வலைத்தளத்தில் வரும் கூப்பாடுகளையும், ஓலங்களையும் கேட்டு பயப்படவேண்டியதில்லை. முதுகெலும்பை நிமிர்த்தி தனது பிராண்டிற்கு ஏற்ப விளம்பரங்களை செய்து அதற்கான வாடிக்கையாளர்களை பெறலாம். அதில் பிழையேதும் இல்லை. தனிஷ்க் வெளியிட்ட விளம்பரங்கள் சமூக வலைத்தளத்தில் புறக்கணிப்போம் என அலறியவர்களால் நினைத்ததை விட புகழ்பெற்றது. இதனால் அதன் விற்பனை அதிகரித்துள்ளது என்பதே இதற்கான சான்று. 

டைம்ஸ் ஆப் இந்தியா

கேட்டகி தேசாய்



கருத்துகள்