உலகிலுள்ள வினோதமான காடுகள்- தெரிஞ்சுக்கலாம் வாங்க!

 




ஆவோகிகாகரா, ஜப்பான்





வினோதமான காடுகள்

விஸ்ட்மேன்ஸ் வுட்

இங்கிலாந்து

டர்ட்மூர் தேசியப்பூங்காவின் ஒருபகுதியாக விஸ்ட்மேன்ஸ் வுட் காடு உள்ளது. தென்மேற்கு பகுதியில் இந்தக் காடு அமைந்துள்ளது. உயரமாக ஓக் மரங்களின் கிளைகள் படர்ந்து வளர்ந்துள்ளதால் காட்டுக்குள்ளிருந்து ஆகாயத்தைப் பார்ப்பதே கடினமாக இருக்கும். பேய், பூதம், பிசாசு இருக்கும் என்றாலும் நம்பியே ஆகவேண்டிய அனைத்து செட்டப்புகளும் இக்காட்டில் உண்டு. 

தி ஸ்வார்ஸ்வால்ட்

ஜெர்மனி

இதனை கருப்புக்காடு என்று சொல்லுகிறார்கள். பிரதர்ஸ் கிரிம்ப் போன்றோர் இக்காடு பற்றி ஏராளமான கதைகளை எழுதியுள்ளனர். ஓநாய் இருக்குமாம், சூனியக்காரிகள் இருப்பார்களாம், தீய சக்திகள் குடியிருக்கும் காடாம் என அரண்மனை 4, 5 எடுக்கும் அளவுக்கு சமாச்சாரங்கள் உள்ளன. இக்காட்டிற்குள் நுழையும் சிறுவர்கள், அவர்களின் பாவக்கணக்கிற்கு ஏற்ப தண்டிக்கும் அரக்க மனிதனும் இருக்கிறான் என்று சொல்லுகிறார்கள். இக்காட்டிற்குள் உள்ளே போனவர்கள் திரும்ப வெளியே வரமுடியாது எனவும் கதை கட்டி வருகிறார்கள். 

தி ஹோயா பசியு காடு

ரோமானியா

வடமேற்கு ரோமானியாவில் அமைந்துள்ள காடு. இதனை ரோமானியாவின் பெர்முடா டிரையாங்கிள் என்று சொல்லுகிறார்கள். ஐந்து வயது குழந்தையைக் காணோம், இருநூறு ஆடுகளை காணாப்பொணமாக்கியது என பல்வேறு கதைகளை சொல்லுகிறார்கள் இக்காட்டைப் பற்றி. . இக்காட்டிற்குள் செல்லும்போது பதற்றமாக இருக்கிறது என்று தோன்றினாலோ, யாராவது உங்களை கண்காணிப்பது போல தோன்றினாலோ உடனே அங்கிருந்து திரும்பி வெளியே வந்துவிடுங்கள் என எச்சரிக்கை செய்கிறது வனத்துறை. உள்ளூர் மக்கள் செம உஷார். உள்ளே போனால் வெளியே வரமுடியாது என புரிந்துகொண்டு தானுண்டு தன் வேலையுண்டு என காட்டைத் தவிர்த்து வாழ்கிறார்கள். 

லாங் ட்ரெய்ல்

அமெரிக்கா

437 கி.மீ. நீள காடு, வெர்மாண்ட் மாநிலத்தில் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. 1946ஆம் ஆண்டு பௌலா ஜீன் வெல்டன் என்ற கல்லூரி மாணவி இக்காட்டில் காணாமல் போனார். இவரோடு சேர்த்து இன்னும் நான்கு பேர் 1945-50 காலகட்டத்தில் காணாமல் போயிருக்கிறார்கள். ஒருவரின் உடல் மட்டுமே காவல்துறைக்கு கிடைத்தது. தீயசக்திதான் இதற்கு காரணம் என மக்கள் நம்புகின்றனர். 

ஐலேண்ட் ஆப் டால்ஸ்

மெக்சிகோ

இந்த தீவில் உள்ள மரங்களில் வினோதமான தோற்றங்களைக் கொண்ட பொம்மைகள் உள்ளன. இவற்றின் தலைகள் சிதைக்கப்பட்டு, உடல் பாகங்கள் சிதறிக் கிடப்பது வழக்கம். பல்லாண்டுகளுக்கு முன்னர் கடலில் மூழ்கி இறந்த பெண்ணின் ஆவியை துரத்தும் ஆண் ஒருவர் இப்படி செய்துவருகிறார் என கதை சொல்லுகிறார்கள். அரை நூற்றாண்டாக இப்படித்தான் இங்கு பொம்மைகள் இருப்பதாக கூறுகிறார்கள். வினோதமாக பொம்மைகள் மரத்தில் கட்டியிருப்பதை பார்ப்பதே பீதியூட்டுவதாக உள்ளது. 

பிளெய்ராடம் காடு

ஸ்காட்லாந்து

வடக்கு எடின்பர்க் அருகே உள்ள காடு இது. விக்டோரியா ராணி காலகட்டத்தில் இங்கு நிலக்கரி சுரங்கம் செயல்பாட்டில் இருந்தது. காட்டை பார்க்க வந்தவர்கள் பலரும் பயத்தோடுதான் திரும்பிச் சென்றனர், அவர்களின் செல்லப் பிராணிகளும் கூட மிரண்டன. ஆனால் இதெல்லாம் சுற்றுலாப் பயணிகளை தடுக்க வில்லை. அப்படி 2008இல் உள்ளே சென்றவர்கள், நிறைய புகைப்படங்களை எடுத்தனர். அதனை தெளிவாக பார்த்தபோது, அவர்களின் பின்னணியில் விக்டோரிய கால உடைகளை அணிந்த உருவம் ஒன்று தெளிவாக தெரிந்தது. 

ஆவோகிகாகரா

ஜப்பான்

ஜப்பானில் உள்ள காட்டின் மண்ணில் இரும்புச்சத்து அதிகம். இங்கு செல்பவர்களின் ஸ்மார்ட்போன், காம்பஸ் சாதனங்கள் வேலை செய்யாது. ஃப்யூஜி மலையின் கீழே இக்காடு உள்ளது. தொலைந்துபோன, கோபமான, வன்மத்தோடு உள்ள ஆவிகள் இக்காட்டில் உள்ளன என்று சொல்லுகிறார்கள்.


ரீடர்ஸ் டைஜெஸ்ட்






கருத்துகள்