தொழிலை தொடங்கி நடத்த நெஞ்சம் முழுக்க துணிச்சல் கொண்டவர்! - கடிதங்கள்
தொழிலதிபர் ரிச்சர்ட் பிரான்சன் |
அன்புள்ள தோழர் முருகு அவர்களுக்கு, வணக்கம்.
நலமாக இருக்கிறீர்களா? இன்று காலை 5.45க்கு தாம்பரம் பஸ் பிடித்தேன். கணியம் சீனிவாசன் சார் வீட்டுக்கு போவதுதான் திட்டம். சானடோரியம் பஸ் ஸ்டாப்பில் இறங்கிவிட்டு பஸ் டிப்போவில் ஒருமணிநேரம் உட்கார்ந்திருந்தேன். அங்கு தினசரி பேப்பர்களை வாங்கிப்படித்தேன். பிறகு, எழுந்து சாலையைக் கடந்து எதிரே தெரிந்த உணவகத்திற்கு சென்று நான்கு இட்லிகளை சாப்பிட்டேன். பிறகு, அருகில் இருந்த காய்கறிக்கடைக்கு சென்று பழங்களை வாங்கினேன்.
பிறகுதான் சீனிவாசன் சாரை அழைத்தேன். பைக்கில் வந்து வீட்டுக்கு அழைத்துப்போனார். நான் முதலில் அவர்கள் வீட்டுக்குப் போனபோது வியன் என்ற பையன் இருந்தான். இப்போது கைக்குழந்தையோடு இயல் என்ற சிறுமியும் இருந்தாள். அந்தளவு இடைவெளி ஆகிவிட்டது. நிறைய நேரம் பேசிவிட்டு, வீட்டில் சாப்பிட்டுவிட்டு சில புத்தகங்களை படிக்க வாங்கி வந்தேன்.
ரிச்சர்ட் பிரான்சன் - என் சொக்கன் எழுதிய நூலை அவரது வீட்டிலேயே படித்துவிட்டேன். 174 பக்கம்தான். தொழில் அதிபர்களைப் பற்றி படிப்பது எப்போதும் எனக்கு பிடித்தமானது.ரிச்சர்டின் வாழ்க்கையில் அவரது அம்மாவான ஈவ் பிரான்சனின் பங்கு முக்கியமானது. இன்று அவரது குழுமத்தில் ஏராளமான நிறுவனங்கள் உள்ளன. தொழில் வெல்கிறதோ இல்லையோ துணிச்சலாக இறங்கி சாதித்த அவரது மனவலிமை ஆச்சரியமானது.
பிரிட்டிஷ் காலத்தில் வாழ்ந்த எலிசா என்ற பெண் எழுதிய இந்தியப் பயணம் பற்றி கடிதங்களை படித்து வருகிறேன். மொழிபெயர்ப்பு நன்றாக இருக்கிறது. கூடவே லார்க்கோ வின்ச் காமிக்ஸ் படித்துக்கொண்டு இருக்கிறேன். சுவாரசியமான புத்தகம்.
நன்றி
ச.அன்பரசு
கருத்துகள்
கருத்துரையிடுக