உணவு பாதுகாப்புக்கு ஆபத்தாகும் எத்தனால் உற்பத்தி!
உணவுப்பயிர்கள் எரிபொருளாகிறது... |
இந்திய அரசு எரிபொருளில், எத்தனால் கலக்கும் திட்டத்தை வைத்துள்ளது. தற்போது 8 சதவீதம் கலக்கப்படும் எத்தனாலின் அளவை விரைவில் இருபது சதவீதமாக்க அரசு யோசித்து வருகிறது. அரிசி, சோளம், கரும்பு ஆகியவற்றிலிருந்து எத்தனால் தயாரிக்கப்பட்டு வருகிறது. எத்தனாலை இப்பொருட்களிலிருந்து உற்பத்தி செய்யத் தொடங்கினால் அதிக மக்கள்தொகை கொண்ட நாடான இந்தியாவில் உணவுத்தட்டுப்பாடு ஏற்படும் என வல்லுநர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
எத்தனால் |
கடந்த ஜூன் மாதம், ஒன்றிய அரசு எத்தனால் உற்பத்தியை ஐந்தே ஆண்டுகளில் இருமடங்காக்க திட்டங்களை வகுத்துள்ளது. 2025ஆம் ஆண்டில் எரிபொருளில் 20 சதவீத எத்தனால் கலக்கப்பட்டிருக்கும். இதற்காக எத்தனாலை உற்பத்தி செய்ய ஏதுவான பயிர்களை விளைவிக்கும் விவசாயிகளுக்கு நிதியுதவிகளை வழங்கவும், சூழல் தொடர்பான அனுமதியை கொடுக்கவும் தயாராக இருக்கிறது அரசு. இதன் காரணமாக அரசிடம் உள்ள தானியங்கள் நிறுவனங்களுக்கு மானிய விலையில் வழங்கப்பட உள்ளன. இதனால் இத்தானியங்கள் தேவைப்படும் மக்கள் சிரமப்படும் நிலை உருவாகியுள்ளது.
அரசுக்கு புதிய எத்தனால் திட்டம் மூலம் ஆண்டுக்கு 4 பில்லியன் டாலர்கள் மிச்சமாக வாய்ப்புள்ளது. அதாவது இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய் அளவு குறையும். இதன் காரணமாக வெளியிடப்படும் கார்பன் அளவும் பெருமளவு கட்டுக்குள் வரும்.
இந்தியா இன்று ஓரளவு பொருளாதார வளர்ச்சி பெற்ற நாடாக இருந்தாலும்கூட ஏழைகளுக்கு உணவு வழங்க கூடிய நிலையில் இல்லை. பட்டினி கிடக்கும் மக்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் 94 ஆவது இடத்தில் இந்தியா உள்ளது. இந்த பட்டியலில் உள்ள மொத்த நாடுகளின் எண்ணிக்கை 107 ஆகும். 2018 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் ஊட்டச்சத்து பிரச்னையால் அவதிப்படும் மக்களின் எண்ணிக்கை 209 மில்லியனாக உள்ளது. அதாவது மக்கள்தொகையில் 15 சதவீதம்.
உணவுப்பயிர்களிலிருந்து எரிபொருட்களை தயாரித்தால் அதனால் அதிகம் பாதிக்கப்படுவது ஏழை மக்களாகவே இருக்கும். எனவே அரசு இதனை கவனத்துடன் அணுகவேண்டும் என்கிறார் மேரிலாண்ட் பல்கலைக்கழக உயிரிதொழில்நுட்ப பேராசிரியர் சாந்தனு சாந்தாராம். அரசு இதனைத் தனக்கேற்றபடி சாதகமாக செயல்படுத்த கூடுதலாக உள்ள தானியங்களை மட்டுமே எத்தனால் தயாரிக்க பயன்படுத்துவதாக கூறியுள்ளது. ஆனால் இதெல்லாம் தானிய வளர்ச்சி குறைவற இருக்கும்போது சரி. ஆனால் பஞ்சகாலத்தில் தானிய விளைச்சல் குறைவாக இருக்கும்போது பிரச்னையாகும்? அப்போது எரிபொருள் உற்பத்தியைக் குறைக்க முடியாது என அரசு கூறும். இதற்கு மாற்றாக வேறு ஐடியாவே கிடையாது என்று கூற முடியாது. 2018ஆம் ஆண்டு பாசி, புற்கள் ஆகியவற்றிலிருந்து எரிபொருட்களை தயாரிக்கும் திட்டம் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் அரசு அதனை செயல்படுத்தவில்லை.
சூழலுக்கு உகந்த எரிபொருட்கள் சந்தையில் தலைமை வகிக்க வாய்ப்பு உள்ளது. அதற்கு கழிவுகளிலிருந்து எரிபொருளை தயாரிக்க முன்வரவேண்டும் என்கிறார் உலக தூய்மையான போக்குவரத்து முறை கௌன்சில் தலைவரான ஸ்டெபானி சியர்லே. இதில் முக்கியமான கருத்து உள்ளது. கழிவாகும் பொருட்களைத்தான் பஞ்சாப்பில் நிலத்தில் வைத்து எரிக்கிறார்கள். அது காற்றில் கலந்து மாசுபாட்டை அதிகரிக்கிறது.
இதில் மற்றொரு அபாயமாக உள்ளது நீர் தட்டுப்பாடு. அரிசி, கரும்பை மட்டுமே எத்தனாலை தயாரிக்க அதிகம் பயிரிட்டால் இப்போதுள்ள தண்ணீர் தட்டுப்பாடு இன்னும் உச்சத்துக்கு போகும். இப்போதே விவசாயத்தில் எண்பது சதவீத நீர் அரிசிக்கும், கரும்புக்கும்தான் செலவாகிறது என்கிறார் பெங்களூருவைச் சேர்ந்த அறிவியல் கொள்கை வகுப்பாளர் ரம்யா நடராஜன்.
ஃபினான்சியல் எக்ஸ்பிரஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக