பெயரை மாற்றிக்கொள்ள தயாராகும் பேஸ்புக்!- என்ன காரணம்?

 









பெயரில்  என்ன இருக்கிறது?

பொதுவாக அனைவரும் இப்படி சொல்லுவார்கள். ஆனால் பிராண்ட் பெயர்களைப் பொறுத்தவரை கவனமாக தேர்வு செய்யவேண்டும். இல்லையெனில் பெயர் மக்களின் மனதில் பதியாது. வணிகமே குப்புற விழுந்துவிடும். 

ஸோமாடோ

இன்று இந்திதான் தேசிய மொழி என லொள்ளு பேசும் உணவு சேவை நிறுவனம். அதன் இயக்குநர் தமிழர்களுக்கு சமூக வலைத்தளம் வழியாக சகிப்புத்தன்மை பற்றி பாடம் நடத்தியதையும் நாம் பார்த்தோம். ஸோமாடோ, 2010இல் உருவானபோது அதன்பெயர் ஃபுடிபே என பெயர் வைக்கப்பட்டது. பிறகு இரண்டே ஆண்டுகளில் நிறுவனத்தின் பெயரை ஸோமாடோ என்ற பெயரை மாற்றி பிராண்டிங் செய்தனர். இப்போது வெற்றிகரமாக மக்களுக்கு சகிப்புத்தன்மை பற்றி பாடம் எடுக்குமளவு நிறுவனம் வளர்ந்திருக்கிறது. 

நெட்பிளிக்ஸ்

இன்று உலகமெங்கும் மக்களின் அமோக ஆதரவைப் பெற்று வளர்ந்து வரும் நிறுவனம். இதன் வேகத்திற்கு அமேசான், டிஸ்னி கூட ஈடு கொடுக்க முடியவில்லை. பாரம்பரிய நிறுவனங்களுடன் போட்டியிட்டு நெட்பிளிக்ஸ் திரைப்பட விருதுகளையும் பெற்று வருகிறது. இதற்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் கிப்பி. துணை நிறுவனர் மார்க் ராண்டோல்ப் வேறு பொருத்தமான பெயர் கிடைக்கும் வரை இந்தப் பெயர் என கிப்பியை வைத்தார். 

கூகுள்

எண்பது, தொண்ணூறுகளில் மைக்ரோசாப்ட் எப்படி வளர்ச்சி பெற்று உலகை ஆண்டதோ அப்படி இன்று இணையம், கணினி, ஸ்மார்ட்போன் என அனைத்து விஷயங்களிலும் ஆட்சி செய்கிறது கூகுள். இதன் பெயரை குழந்தைகள் கூட சொல்ல முடிகிற அளவு பிரபலம் வாய்ந்தது. இணையத்திலுள்ள பல்வேறு இணைப்புகளை இணைத்துக் கொடுப்பதால் பேக் ரப் என பெயர் வைத்திருந்தனர். இப்போது நினைத்துப் பாருங்கள் பேக் ரப் என்றிருந்தால் பேரை சொல்ல முடியுமா? நினைவில் வைத்திருக்க முடியுமா? ஓராண்டுக்கு பிறகு பெயரை கூகுள் என மாற்றிவிட்டனர். எழுத்துப்படி பார்த்தால் கூகோல் என்றுதான் உச்சரிக்க வேண்டும். 

டிண்டர்

யூடியூபில் வீடியோக்களைப் பார்ப்பவர்கள், நிச்சயமாக டிண்டரின் விளம்பரங்களைப் பார்த்திருப்பார்கள். சுமாரான பெண் ஒருவர் ஆங்கிலத்தில் அல்லது தமிழில் வந்து தங்களது டேட்டிங் அனுபவத்தை பகிர்வார்கள். முடிவில் டிண்டர் என பெயர் வரும். இந்த நிறுவனத்தின் வேலையே உலகம் முழுக்க காதல் வளர்த்து ஜோடிகளாக டேட்டிங் அனுப்புவதுதான். முதலில் இதற்கு மேட்ச்பாக்ஸ் என பெயர் வைத்தனர். ஆனால் மேட்ச் என ஏற்கெனவே ஒரு தளம் இருப்பது நினைவுக்கு வர டிண்டர் என பெயர் மாற்றப்பட்டது. டிண்டர் என்றாலும் காதலையும், ஒன்றாக இணைவதையும் குறிக்கும் அர்த்தம்தான் என்பதால் வெற்றி பெற்றுவிட்டது. 

இன்ஸ்டாகிராம் 

புகைப்படங்களாக போட்டு மக்களை உசுப்பேத்தும் பிரபலங்களின் ஆஸ்தான வலைத்தளம். இதன் பெயர் முதலில் பார்பன் என்று இருந்தது. முதலில் இடங்களின் முகவரியை பிறருக்கு பகிர்வதாகவே வேலைகள் இருந்தன. பிறகுதான், புகைப்படங்களை பகிரும் சேவையாக மாற்றி பெயரையும் இன்ஸ்டாகிராம் என மாற்றினார்கள். 

இன்று கொரிய சீரிஸ்களில் கூட சப்வே ரெஸ்டாரெண்ட் பிரபலம். அதன் பெயர் முதலில் பெட்டேஸ் சூப்பர் சப்மெரின்ஸ் என்றுதான் இருந்தது. அதாவது, 1968ஆம் ஆண்டு வரையில்...  விளையாட்டு வீரர்களுக்கு ஆடை, விளையாட்டு சாதனங்கள், ஷூக்கள் தயாரித்து வழங்கும் நைக்கின் பழைய பெயர், ப்ளூ ரிப்பன் ஸ்போர்ட்ஸ். பெப்சி முதலில் பிராட்ஸ் டிரிங்க் என பெயர் வைக்கப்பட்டு இருந்தது. 

ஃபேஸ்புக்கின் பெயர் மாற்றம்

ஃபேஸ்புக் எங்கு வளர்ச்சி பெறுகிறதோ அங்கு அரசியல் சீர்குலைவு நாட்டில் பெரும் கிளர்ச்சிகள், போராட்டங்கள் நடக்கும். இதற்கு காரணம், அங்குள்ள வலதுசாரி கட்சிகளிடம் காசு வாங்கிக்கொண்டு அவர்களின் நச்சு பிரசாரங்களை தனது பல்வேறு நிறுவனங்கள் வழியாக பரப்பும். இதனாலும் மக்களின் தகவல்களை பல்வேறு நிறுவனங்களுக்கு விற்றது, வெறுப்புவாதம். வன்முறை செய்திகளை பிறருக்கு பகிர்வதை தடுக்காதது ஆகியவற்றால் பல்வேறு வழக்குகளையும், அபராத த்தையும் சந்தித்து வருகிறது. கூடவே நிறுவனத்தில் வேலை செய்து விலகி, ஊருக்கு ஊர் ஓலா கார் பிடித்து சென்று ஃபேஸ்புக்கின் தந்திரங்களை பிரான்சஸ் ஹாகன் என்ற பெண்மணி கூறிவருகிறார். இதனால் ஃபேஸ்புக் என்ற பெயர் ஏகத்தும் டேமேஜ் ஆகிவிட்டது. 

தொழில்நுட்பநிறுவனமாக தன்னை நிலைநிறுத்திக்கொள்ள ஃபேஸ்புக் பெயர் மாற்றத்தை நம்பியுள்ளது. மெடாவர்ஸ் முறையில் பணியாற்றப்போவதாக தகவல்கள் கூறுகின்றன. 

மெடாவர்ஸ் என்றால் வேலை, விளையாட்டு என இரண்டையும் விஆர் ஹெட்செட் மூலம் செய்வது என்று அர்த்தம் என இணையம் சொல்லுகிறது. இதற்காகவே ஃபேஸ்புக்கில் பத்தாயிரம் பேர் சேர்க்கப்பட்டு உள்ளனராம். 

டைம்ஸ் ஆப் இந்தியா




கருத்துகள்