இந்துத்துவா எனும் கொடூர அச்சுறுத்தல்! - இணைய மாநாட்டில் பேசப்பட்ட கருத்துகள் ஒரு பார்வை

 







இந்துத்துவா எனும் கொடூர அச்சுறுத்தல்

கடந்த மாதம் செப்டம்பர் 10-12 என மூன்று நாட்கள் ஆன்லைன் வழி மாநாடு ஒன்று நடத்தப்பட்டது. இதில் இந்துத்துவா வேகமாக பரவி வரும் நிலையில் சமூகம், அரசியல், பாலினம், சாதி, மதம், சுகாதாரம், ஊடகம் ஆகியவற்றில் ஏற்படும் விளைவுகள் பற்றி விவாதிக்க ஏற்பாடானது. 

இந்த நிகழ்ச்சியை சமூக அறிவியல் நிறுவனங்களும், ஐரோப்பிய அமெரிக்க பல்கலைக்கழகங்களும் இணைந்து ஏற்பாடு செய்தன. தோராயமாக உலகம் முழுக்க உள்ள 50 பல்கலைக்கழகங்கள் இந்த மாநாட்டிற்கு ஆதரவை வழங்கியிருந்தன. இப்படி ஒரு மாநாடு நடைபெறப்போகிறது என செய்தி பரவியதும், அதனை ஏற்பாடு செய்தவர்கள், அதில் பங்கேற்பவர்களுக்கு இந்துத்துவ தீவிரவாதிகள் கொலைமிரட்டல்களை அனுப்பத் தொடங்கினர். சமூக வலைத்தளத்தில் இப்போது அதிகளவு இந்துத்துவ பயங்கரவாதிகள் இருப்பதால், அதில் உள்ள பங்கேற்பாளர்களை கடுமையாக விமர்சித்து பேசத்தொடங்கினர். 

இந்த வகையில் அமெரிக்காவில் இந்து மந்திர் நிறுவன அதிகாரிகள், விஷ்வ ஹிந்து பரிஷத் நிறுவனம், ஹிந்து அமெரிக்க பௌண்டேஷன் ஆகியோர் இந்த மாநாட்டிற்கு நாங்கள் ஆதரவு வழங்கமாட்டோம் என தெரிவித்தன. 

குடியரசு கட்சியைச் சேர்ந்த நீரஜ் அன்டானி என்பவர், மாநாட்டை கண்டித்து பேசியவர், ஹிந்துபோபியாவை உருவாக்குகிறீர்கள் என குற்றம் சாட்டினார். இந்தியாவைப் பொறுத்தவரை காசை வாங்கிக்கொண்டு சலாம் போடும் செய்தி ஊடகங்கள் உடனே இந்துத்துவாவை விமர்சிக்கும் மாநாட்டிற்கு எதிராக விவாதங்கள், செய்திகளை வெளியிடத் தொடங்கின. 

மிரட்டல்கள் வந்தாலும் கூட மாநாடு 45 பங்கேற்பாளர்களுடன் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இதில் அவர்கள் ஆய்வு மற்றும் தங்களது சிந்தனைகளை பகிர்ந்துகொண்டனர். இவர்கள் பெரும்பாலும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்தான். அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளிலிருந்து பங்கேற்றனர். இந்தியாவில் ஒன்றிய அரசு, இந்துத்துவா கொள்கையின்படிதான் செயல்பட்டு வருகிறது. இதனை வரலாற்று அறிஞர் கியான் பிரகாஷ், ஜனநாயகத்தன்மையற்ற, அறிவுப்பூர்வமற்ற கருத்தை வைத்து ஆட்சி செய்கிறார்கள் என்று மாநாட்டில் பேசினார். 

முதல் நிகழ்ச்சியாக உலகளவில் இந்துத்துவா எப்படியிருக்கிறது என்ற தலைப்பில் நடைபெற்றது. இதில் பேசிய அரசியல் செயல்பாட்டாளர் கிறிஸ்டோபே ஜாப்ரலெட், ஆர்எஸ்எஸ் இந்துத்துவா கொள்கையை இந்தியா தாண்டியதாக பார்க்கிறது. இதனை வி.டி சாவர்க்கர் இந்துத்துவா - யார் இந்து என்று எழுதிய நூலில் கூறியுள்ளார். தனது கருத்தை வலுவாக வளர்க்க ஆர்எஸ்எஸ் அமைப்பு தனது செல்வத்தை ஏராளமாக செலவு செய்து வருகிறது என்று கூறினார். 

அடுத்து பேசிய ஆவணப்பட இயக்குநரான ஆனந்த் பட்வர்த்தன்,அமெரிக்காவில் இனவெறி கொண்ட கு கிளக்ஸ் கிளான் அமைப்பைப் போலவே இந்துத்துவாவில் உள்ள இந்துகள் செயல்படுகிறார்கள் என நேரடியாகவே சுட்டிக்காட்டி பேசினார். 

அடுத்து பேசிய எழுத்தாளர் மீனா கந்தசாமி, தனது நான்கு வயது மகளை கொலை செய்துவிடுவோம் என இந்துத்துவ ஆட்கள் மிரட்டியதாக கூறினார். மேலும் இந்துத்துவா, பெண்ணியம் மற்றும் சாதி ஒழிப்பிற்கு எதிரானது. இந்த இரண்டு விஷயங்களையும் அது தோற்கடிக்க முயல்கிறது. சிறுபான்மையினர் என்ற கருத்துகளை முன்வைத்து பிராமணர்கள், தலித் ஆகியோருக்கு இடையில் நிலவும் பிரச்னைகளை மறைக்கிறது என்றார். 

அடுத்து இரண்டாவது நிகழ்ச்சியாக இந்துத்துவ பொருளாதாரம் பற்றிய விவாதம் தொடங்கியது. இதில் பேசிய சமூகவியலாளர் டீன் ட்ரெஸ், இந்துத்துவா, ஜனநாயகப்போக்கை அழித்து மேல்தட்டு மக்களுக்கான வர்த்தக வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கிறது. ஏறத்தாழ இந்த கருத்தியல், மீண்டும் பிராமணப் படிநிலையை சமூகத்தில் அழுத்தமாக உருவாக்க முயல்கிறது என்று கூறினார். 

அடுத்து பேசிய பொருளாதார வல்லுநரான பிரிதம் சிங், ஒன்றிய அரசு கொண்டு வந்த மூன்று விவசாய சட்டங்களுமே விவசாயத்துறையை முதலாளித்துவ நிறுவனங்களின் கைகளில் ஒப்படைப்பதோடு, விவசாய செயல்பாடுகளை மையப்படுத்துகிறது. இது அவர்களின் நீண்டகால செயல்பாடாக, திட்டமாக இருக்கலாம் என்றார். 

ஏழைகளுக்கான திட்டங்களை தீட்டி அவர்களை வறுமையிலிருந்து மீட்பது பாஜகவின் திட்டமாக இல்லை.அதனால்தான் ஏழை மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முன்னர் இருந்த காங்கிரஸ் கட்சி அளவுக்கு கூட திட்டங்களை சரியாக செயல்படுத்தவில்லை என்றார் சமூகவியலாளர் ஜென்ஸ் லெர்ச்சே. 

2014ஆம் ஆண்டு தொடங்கி இன்றுவரை பொருளாதார சிக்கல் அதிகரித்து வந்துள்ளது. பணக்காரர், ஏழை இடைவெளி கூடிக்கொண்டே உள்ளது. ஆனாலும் எப்படி பாஜக, 2019இல் மக்களின் வாக்குகளைப் பெற்றதற்கு பொருளாதார வல்லுநர் வம்சி வாகுலபரணம் துல்லியமான காரணங்களை அளித்தார். தேசியவாசம், பொருளாதார பாப்புலிசம் ஆகியவற்றை வைத்து பாஜக தனது வாக்குகளைப் பெற்றது என்றார். 

சாதி

சாதி, சாதி சார்ந்த எண்ணங்களை எப்படி மறைத்து பிராமணர்கள் குறிப்பாக பிராமண ஆண்கள் இந்து அடையாளம், கலாசாரத்தை முன்வைக்கின்றனர் என்று ஆய்வாளர் கஜேந்திரன் அய்யாதுரை தனது அறிக்கையை வாசித்தார். 

அடுத்து பேசிய பன்வார் மேக்வன்சி, ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் பணியாற்றி பிறகு அதிலிருந்து விலகி வந்துவிட்டவர்.  இந்துத்துவா என்பது மதமல்ல, உண்மையல்ல. அது ஒரு இனக்குழு சார்ந்த அரசியல் கருத்தியல். ஜனநாயக பன்மைத்துவ நாட்டை மதம் சார்ந்த நாடாக மாற்றுவதே அதன் லட்சியம் என உறுதிபட தெரிவித்தார். மேலும், தாழ்ந்த சாதிகளைச் சேர்ந்தவர்களுக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பில் சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்துவதுதான் வேலை. வேறு பணிகளுக்கு பதவிகளுக்கு அவர்களை வரவிடுவதில்லை என்றார். 

பாலினம் மற்றும் பாலியல் அரசியல்

இதில் ரேப் நேஷன் எனும் தனது நிறைவு பெறாத திரைப்படத்தை இயக்குநர் லீனா மணிமேகலை திரையிட்டார். இதில் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் இருந்தனர். இவர்கள் குஜராத் மற்றும் முசாபர்நகர் மதக்கலவரங்களில் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள். இந்த கொடூர சம்பவம் 2002 முதல் 2013 வரை நடைபெற்றது. பாலியல் வன்முறை என்பது இந்துத்துவாவின் அடிப்படை. இவர்கள் தேசியவாதம் பேசிக்கொண்டு இந்துவல்லாத பெண்களை வல்லுறவு செய்து, கொலை செய்கிறார்கள். இதனை ஆண்மையில் பெருமையாக பேசுகிறார்கள் என்று காரசாரமாக பேசினார். 


ஃபிரன்ட்லைன்

விகார் அஹ்மத் சையத்







கருத்துகள்