பொழுதுபோக்குபூங்காகவாக மாற்றப்படும் காந்தியின் சபர்மதி ஆசிரமம்!

 








2019ஆம் ஆண்டே காந்தியின் சபர்மதி ஆசிரமம் புத்துயிர் அளிக்கப்படும் என ஒன்றிய அரசு கூறி அதற்கான முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் இயற்கையான தடையாக கொரோனா வந்தது. இக்காலகட்டத்தில் தங்களுக்கு ஆதரவான பல்வேறு மசோதாக்களை சட்டமாக்கிய பிரதமர் மோடி, இப்போது காந்தியின் பக்கம் கவனம் திருப்பியுள்ளனர். 

1,200 கோடி மதிப்பில் காந்தியின் சபர்மதி ஆசிரமத்தை நவீனப்படுத்தி புதுப்பிக்க உள்ளதாக ஒன்றிய அரசு கூறியுள்ளது. காந்தியை தேசத்தந்தை என்ற இடத்திலிருந்து அகற்றி அதில் ஆர்எஸ்எஸ் பிரிவினைவாதிகளை பொருத்தும் பணியை பாஜக அரசு தொடர்ச்சியாக செய்து வருகிறது. இதற்கு அச்சாரமாக காந்தியை ஸ்வட்ச் பாரத் திட்டத்தின் அடையாளமாக்கி அசிங்கப்படுத்தியது. காந்தி வெறும் ஒருவரின் தூய்மை பற்றி மட்டும் பேசவில்லை. ஜனநாயகத்தன்மை, அகிம்சை, சுய ஒழுக்கம் பற்றியெல்லாம் கூட பேசியுள்ளார். இவற்றில் தன்னுடைய பங்கு பற்றி நூல்களைக் கூட எழுதியுள்ளார். ஆனால் அதையெல்லாம் படிக்க தெரிந்துகொள்ள ஒன்றிய அரசுக்கு எந்த விருப்பமுமில்லை. ஈடுபாடும் இல்லை. 

சபர்மதி ஆசிரமத்தை ஏழு அறக்கட்டளைகள் நிர்வாகம் செய்து வருகின்றன. இந்த நிலையை சாதகமாக்கி மாநில அரசு மூலம் சபர்மதி ஆசிரமத்தை ஒன்றிய அரசு மாற்றியமைக்க முயன்று வருகிறது. எளிமையாக உள்ள இந்த ஆசிரமத்தை பார்க்க மட்டுமே உலக நாடுகளில் இருந்து ஆண்டுதோறும் தோராயமாக 7 லட்சம் பேர் வந்து போகிறார்கள். 

காந்தியைக் கொன்று அவரின் கொள்கைகளை அழிக்க நினைத்த கட்சி, இன்று அவரின் ஆசிரமத்தை பாதுகாக்கிறேன் என்ற பெயரின் அவரின் பெயரை முழுக்க அழிக்க நினைக்கிறது என்கிறார் நில உரிமை ஆர்வலரான சாகர் ராபாரி. ஆசிரம ம் மேம்படுத்தப் படவேண்டும் என நினைப்பவர்கள் கூட வலதுசாரி அரசு, காந்தியன் கருத்தியலை முற்றாக துடைத்தெறியும் வாய்ப்புள்ளதாக கருத்து தெரிவித்துள்ளனர். 

கடந்த ஆகஸ்ட் 4 அன்று, 130 கல்வியாளர்கள், கல்வி நிறுவனங்கள், காந்தியை பின்பற்றுபவர்கள் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அரசு, ஜாலியன் வாலாபாக்கிற்கான நினைவுமண்டபத்தைப் போல சபர்மதி ஆசிரமத்தை மாற்ற வாய்ப்புள்ளது. ஜாலியன் வாலாபாக் நினைவு மண்டபம் வரலாற்று நிகழ்ச்சியை நினைவுகூறும் இடமாக இல்லாமல் தீம் பார்க் போல அரசால் மாற்றப்பட்டுவிட்டது என காட்டமாக விமர்சிக்கின்றனர். அதற்கேற்ப புதுப்பிக்கப்படும் ஆசிரமத்தில் அருங்காட்சியகம், உணவு உண்பதற்கான இடம், வாகனங்களை நிறுத்துவதற்கான இடம், பல்வேறு வணிக நிறுவனங்களின் கடைகள் ஆகியவை அமைக்கப்படவிருப்பதாக ஒன்றிய அரசு கூறியுள்ளது. 

இதுதொடர்பாக எழுத்தாளர் அருந்ததிராய்,  முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி ஏபி ஷா, எழுத்தாளர் நயன்தாரா ஷேகல், சமூக செயல்பாட்டாளர் ஜிஎன் டேவி ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இதில், காந்தி ஆசிரம அமைப்புகளை வணிகமயாக்கும் செயல்பாடு தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு மோசமான எடுத்துக்காட்டாக மகாராஷ்டிராவில் உள்ள சேவாகிராமம் உள்ளது. 1936-1948 ஆண்டுகளில் காந்தியின் வீடாகவும், ஆசிரமமாகவும் இருந்தது.  காந்தியை கொன்ற கருத்தியல் உள்ளவர்கள், இப்போது இரண்டாவது முறையாக அவரை கொலை செய்ய நினைக்கின்றனர் என்று கூறப்பட்டுள்ளது. 

காந்தியின் ஆசிரம் ஏற்கெனவே உலகத்தரத்தில்தான் உள்ளது. இப்போது அதனை மாற்றி அமைக்கவேண்டிய அவசியமில்லை. இதனை வடிவமைத்த சார்லஸ் கொரியா, காந்தியின் கொள்கைகளை மனதில் ஏற்றிக்கொண்டுதான் இதனை எளிமையாக வடிவமைத்தார். இப்போது ஆர்எஸ்எஸ் கொள்கைகளால் தாக்கமுற்று, ஆசிரமத்தை மாற்றும் எண்ணம் தவறானது என்று குஜராத்தைச் சேர்ந்த எழுத்தாளர், சமூக ஆர்வலரான ஜிஎன் டேவி கூறினார்.  


2

காந்தி ஏன் அமெரிக்கா செல்லவில்லை என்று ஒருமுறை கேட்கப்பட்டது. அதற்கு அவர், அங்கு சென்றால் மக்கள் என்னை நான் யார் என்று பார்ப்பதற்குத்தான் வருவார்கள். என்னைப் பற்றி தெரிந்துகொண்டு கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு வரவேண்டும். அதனால்தான் அங்கு செல்லவில்லை என்று கூறினார். காந்தியை பற்றி அறிய விரும்புபவர்கள் அங்கு செல்ஃபி எடுப்பதை விட அவர் உலகிற்கு என்ன சொல்ல விரும்பினார். செய்தார் என மக்கள் அறியவேண்டும் என காந்திய அறிஞர்கள் கூறுகிறார்கள். 

முதன்மை செயலரான கைலாசநாதன் காந்தியின் சபர்மதி ஆசிரமத்தை புதுப்பிக்கும் திட்டத்திற்கு பொறுப்பாக இருக்கிறார். இவரின் முதல் பணி, அந்த வளாகத்தில் மூன்று தலைமுறையாக வாழ்ந்து வந்த மக்களை இடம்பெயர்ப்பதுதான். மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க, அவர்களுக்கு நிரந்தரமாக தங்க வீடு வழங்கப்படும் என்று கூறியிருக்கிறது அரசு. 

ஆசிரம் இப்போது இருக்கும் பரப்புடன் கூடுதலாக நூறு ஏக்கர்களை இணைத்து புதுப்பிக்கப் போகிறார்கள். இதற்கு முன்னர் நான்கு முறை புதுப்பிக்க முயன்றும் திட்டம் ஈடேறவில்லை. ஆனால் இம்முறை நிச்சயமாக நிறைவேற்றிவிட ஒன்றிய அரசு உறுதியாக உள்ளது. அமைதியும் அழகும் கொண்ட இந்த இடத்திற்கு 2014ஆம் ஆண்டு சீன அதிபரை பிரதமர் மோடி அழைத்து வந்தபோது காந்திய அறிஞர்கள் மிரண்டு போனார்கள். விருந்தினரை எதற்காக காந்தி ஆசிரமத்தில் சந்திக்கவேண்டும் என கேள்வி எழுப்பினார்கள். 182 மீட்டரில் சிலை எழுப்பி சர்தார் படேலை காட்சி பொருளாக மாற்றியது போல காந்திக்கு நடக்காமலிருந்தால் பெரிய விஷயம்தான். 

ஃபிரன்ட்லைன் - அனுபமா கடகம்











கருத்துகள்