வடகிழக்கு கலாசார விஷயங்களை பேசும் சிறுகதை நூல்! - கடிதங்கள்
அசாம் |
அன்புள்ள நண்பர் இரா. முருகானந்தம் அவர்களுக்கு, வணக்கம்.
நலமாக இருக்கிறீர்களா? கடந்த சில மாதங்களாக ஷர்ட், பேண்ட் என எதையும் வாங்கவில்லை. நேற்று பேண்ட் ஒன்று வாங்கினேன். ஷர்ட் பீசாக வாங்கி தைக்கவேண்டும். தற்போது சுப்பாராவ் மொழிபெயர்ப்பில் லைபாக்லை ஆன்ட்டி சிறுகதைத் தொகுப்பு படித்து வருகிறேன்.
ஐந்து சிறுகதைகளை படித்திருக்கிறேன். இக்கதைகள் பழங்குடி மக்களின் பண்பாடு, வேறு இனங்களுக்கு இடையே ஏற்படும் சண்டைகள், இழப்புகள் பற்றி பேசுகின்றன. பாசனின் பாட்டி சிறுகதை உணர்ச்சிகரமான கதை. வங்காளி குடும்பத்திற்கும், பழங்குடி குடும்பத்திற்குமான உறவை பேசுகிறது.
எங்கள் இதழ் வேலைகள் எப்போதும் போல நடந்துகொண்டிருக்கிறது. எழுதுவதில் வாக்கிய அமைப்பு பிரச்னை உள்ளது என அலுவலக சகா பாலபாரதி சொன்னார். எனவே, கவனமும், கருத்துமாக எழுத முயன்று வருகிறேன். வேகமாக எழுதும்போது சிலசமயம் பத்திகளிடையே தொடர்பு அற்று போகும் வாய்ப்புள்ளது.
20 நேர்காணல்களைக் கொண்ட நூல் தயார் செய்துவிட்டேன். இன்னும் சில வேலைகள் பாக்கி. தேர்தலுக்கான பணியில் ஈடுபட்டு இருப்பீர்கள். உடலை கவனித்துக்கொள்ளுங்கள்.
நன்றி
ச.அன்பரசு
3.3.2021
கருத்துகள்
கருத்துரையிடுக