அமெரிக்காவில் வாழும் இந்தியர்களின் மனநிலையைச் சொன்ன நாவல்! - கடிதங்கள்

 





ஒன்றிய அரசு விருது பெற்ற எழுத்தாளர் பாலபாரதி



மதிப்பிற்குரிய ஆசிரியர் கே.என்.சிவராமன் அவர்களுக்கு, வணக்கம். 

நலமா?

தேர்தல் முடிந்தபிறகு ஊரில் சென்று வேலை செய்வேன் என்று நினைக்கிறேன். வங்கியில் சில வேலைகள் பாக்கி உள்ளன. நேருவின் நூலில் மக்கள் உரிமைகள், பண்பாடு, மதம் என இருபகுதிகளைப் படித்து முடித்துள்ளேன். மொழிபெயர்ப்பு நா.தர்மராஜன். வாசிக்க தட்டாமல் சரளமாக உள்ளது. நான் எழுதுவதிலும் இந்த ஒழுங்கைக் கொண்டு வரவேண்டும். 

பாலபாரதி சார் மயிலாப்பூர் வந்தபோது என்னை அழைத்தார். பஜார் தெருவில் மோர் மார்க்கெட் அருகே சந்தித்தோம். அவரோடு கனியும் வந்திருந்தான். ஃபேஸ்புக்கில் தினமொரு அத்தியாயம் என்று எழுதிய மந்திரச்சந்திப்பை நூலாக்கிவிட்டார். அவர் அதனை நூலாக தொகுத்தபோதே படித்துவிட்டேன். நூலைக் கொடுத்தவர், அதற்கு பணம் கொடுத்தபோது வேண்டாம் என மறுத்துவிட்டார். அவரே வேண்டாம் என்ற போது கட்டாயப்படுத்தவேண்டாம் என நானும் விட்டுவிட்டேன். மார்வெல் யுனிவர்ஸ் போல அவர் இதுவரை எழுதிய நாவல்களிலுள்ள பாத்திரங்கள் மந்திரச்சந்திப்பு நாவலில் சந்தித்து உரையாடுகின்றன. இதுதான் இந்த நாவலின் முக்கியமான அம்சம். வாசிக்க நன்றாக இருந்தது. விபத்தில் உங்களுக்கு ஏற்பட்ட காயம் ஆறியிருக்கும் என நினைக்கிறேன். உடலைப் பார்த்துக்கொள்ளுங்கள்.

நன்றி!

ச.அன்பரசு

3.4.2021


2


அருண் நரசிம்மன் நாவல்


அன்புள்ள ஆசிரியர் கே.என்.சிவராமன் அவர்களுக்கு, வணக்கம். 

நலமா? புக் பை வெயிட்டில் தேவையான நூல்களை வாங்கியிருப்பீர்கள். சென்னையில் இருந்திருந்தால் உங்களுக்கு தொல்லை கொடுக்காமல் புத்தகங்கள் சிலதையேனும் வாங்கியிருப்பேன். பரவாயில்லை. இப்போதைக்கு கணினியில் உள்ள நூல்களை வாசிக்கலாம் என உள்ளேன்.

அருண் நரசிம்மன் எழுதிய அமெரிக்க தேசி நாவலை படித்துக்கொண்டிருக்கிறேன்.  கூடவே ஜீரோ டு ஒன் என்ற ஸ்டார்ட்அப் பற்றிய நூலையும் வாசித்து வருகிறேன். சில நூல்களை இணையத்தில்தான் வாங்கவேண்டும். மீதி நூல்களை பிடிஎப் வடிவில் படித்துக் கொள்ள நினைத்துள்ளேன். அலுவலகம் தொடங்கிவிட்டால் நூல்களை படிப்பது கடினமாகவே இருக்கும். நன்றி!

ச.அன்பரசு

13.4.2021





3


கே.என்.சிவராமன்


அன்பிற்கினிய ஆசிரியர் கே.என்.சிவராமனுக்கு, வணக்கம். அம்மாவும் தாங்களும் நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். 


2018இல் குங்குமத்தில் நீங்கள் எழுதிய தேங்க்ஸ் சிறுகதை படித்தேன். காலையில்தான் திடீரென எடுத்து படித்தேன். கச்சிதமான வடிவில் அமைந்த கதை. அம்மாவுக்கும் மகனுக்குமான பாசம், காதலி பிளஸ் மனைவிக்குமான நெருக்கம், ஊடல் என அம்சமாக இருந்தது. உறவு கொண்டுவிட்டு தேங்க்ஸ் என்று நாயகன் சொல்லும் வார்த்தை ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மாதிரியான அர்த்தத்தை ஏற்படுத்துகிறது. தாராவை மறக்கமுடியாத பாத்திரமாக்கியிருக்கிறீர்கள். 

ஸ்டார்ட்அப் பற்றிய ஜீரோ டு ஒன் என்ற நூலைப் படித்தேன்.  ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான பல்வேறு பாடங்களை எழுத்தாளர் சுட்டிக்காட்டி எழுதியுள்ளார். ஐடியாக்கள், தொழில்களை தொடங்கும்போது உள்ள மூடநம்பிக்கைகளைப் பற்றி எழுதியது முக்கியமானது. 

அருண் நரசிம்மன் எழுதிய அமெரிக்க ஐடி கலாசாரம் பற்றிய நூலை படித்தேன். முதலில் படிக்கும்போது சற்றே தடுமாற்றம் இருந்தாலும் கதை அமெரிக்காவுக்கு சென்றபிறகு வேகம் பிடித்தது. நீங்கள் இந்த நாவலை முன்னதாகவே படித்திருப்பீர்கள். நாயகனான தேசிகன் மனம் முதிர்ச்சி பெறுவதுதான் கதை. அவல நகைச்சுவை காட்சிகளை தமிழ் நாவலில் படிப்பது சிறப்பாக இருந்தது. நன்றி

ச.அன்பரசு

30.4.2021


கருத்துகள்