செவ்வாயில் புத்தம் புதிய நகரம்!

 









செவ்வாயில் புத்தம் புதிய நகரம்!



செவ்வாயில் மக்களை குடியமர்த்துவதற்கான நகரத்தை அமைக்க சீனா, ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா ஆகிய நாடுகள் முயன்று வருகின்றன. 


அண்மையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஹோம் விண்கலம் செவ்வாய்க்கு அனுப்பி வைக்கப்பட்டது. 2117ஆம் ஆண்டில் அங்கு நகரம் அமைப்பதற்கான திட்டத்தை அந்நாடு திட்டமிட்டுள்ளது. இதற்குப்பிறகு சீனாவின் தியான்வென் 1 என்ற விண்கலம் செவ்வாய்க்கு அங்குள்ள சூழல்களை ஆராய அனுப்பி வைக்கப்பட்டது. மூன்றாவதாக, அமெரிக்க நாசாவின் பெர்சீவரென்ஸ் ரோவர், செவ்வாயிலுள்ள வேதியியல் பொருட்களைப் பற்றி ஆராய அனுப்பி வைக்கப்பட்டது. 


உலக நாடுகளிடையே செவ்வாயை ஆராய்ச்சி செய்வதற்கான ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு பிப்ரவரியில் செவ்வாய் சங்கம் என்ற அமைப்பு, செவ்வாயில் நகரத்தை அமைப்பதற்கான திட்டங்களை அனுப்பி வைக்க கோரியது. இதற்காக, உலக நாடுகளிலிருந்து 175 குழுக்கள் நகர வடிவமைப்பு திட்டங்களை அனுப்பி வைத்துள்ளன. இதில் பங்கேற்ற சோனெட் எனும் குழுவின் திட்டத்தைப் பார்ப்போம். .நுவா நகரம் எனும் இத்திட்டப்படி செவ்வாயில் நிலத்திற்கு கீழே வீடுகள் அமைக்கப்படும். இங்கு தேவையான தாவரங்கள் வளர்க்கப்பட்டு விலங்குகளை பராமரிக்க முடியும். இதற்கு தேவையான நீராதாரங்களும் அமைக்கப்படும். 


ஒருவர் தனது தினசரி தேவைகளை நிறைவேற்றுக்கொள்ளும்படி அனைத்து வசதிகளும் குடியிருப்பின் உள்ளேயே இருக்கும். இதில் சவால்களும் இல்லாமலில்லை. குடியேறும் மக்களுக்கான வாகனங்கள், பூமியைத் தொடர்புகொள்வதற்கான மேம்பட்ட மின்னணு சாதனங்கள், பள்ளிகள், கடைகள், மருத்துவமனைகள், கதிர்வீச்சைத் தடுக்கும் கட்டடங்கள் ஆகியவற்றை உருவாக்குவது கடினம். தற்காலிக, நீ்ண்டகால நோக்கில் என இரண்டு வகையில் திட்டமிட்டு நகரத்தை உருவாக்கவேண்டும். 


’’செவ்வாயில் வாழும் மக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதோடு அவர்களுக்கு அழகான அனுபவத்தையும் தரவேண்டும். அதற்காகவே பல்வேறு திட்டமிடல்களை செய்யவேண்டியுள்ளது'’ என்றார் சோனெட் குழுவின் வடிவமைப்பாளர்களில் ஒருவரான ஆல்ஃபிரெடோ முனோஸ். 35 குழுக்களின் உழைப்பில் உருவாகியுள்ள நுவா நகரத்தைப் பின்பற்றி ஆயிரம் கி.மீ. இடைவெளியில் மேலும் நகரங்கள் உருவாக்கப்படவிருக்கின்றன. 


நுவா நகரம் அதைச் சுற்றி உருவாக்கப்படும் ஐந்து நகரங்களுக்கு தலைநகராக இருக்கும். இந்நகரத்தில் 2 லட்சம் முதல் 2 லட்சத்து 50 ஆயிரம் மக்கள் வசிப்பார்கள். செவ்வாயில் தாராசிஸ் எனும் பகுதியிலுள்ள எரிமலைகளைத் தாண்டி 2,25,000 கி.மீ. தொலைவில் புதிய நகரங்கள் நிர்மாணிக்கப்படவிருக்கின்றன. செவ்வாயில் கிடைக்கும் கிராபைட், சல்பர், பாலிஎத்திலீன் ஆகியவற்றைப் பயன்படுத்தி கட்டடங்கள் உருவாக்கப்படவிருக்கின்றன. இதோடு, மக்கள் சுவாசிப்பதற்கான ஆக்சிஜனையும் உற்பத்தி செய்யவேண்டிய தேவை உள்ளது. 


நுவா நகரத் திட்டம் இப்போதுவரை காகிதத்தில் இருந்தாலும் 2054க்குள் சரியான நிதியுதவி கிடைத்தால் இதனை செய்யமுடியும் சோனெட் குழு கூறியுள்ளது. இப்போதைககு பூமியில் நாம் வாழும் வாழ்க்கையை விட சிறந்த ஒன்றை கண்டுபிடிக்கும் ஆசை அனைவருக்கும் இருக்கிறதுதானே? எதிர்காலத்தில் இத்திட்டமும் சாத்தியமாகலாம். 


தகவல் 


Science Focus


How to build a martian Mega city - Dr. stuart clark

BBC Science focus







  



கருத்துகள்