வெயிலை அள்ளிப்பருகுபவனின் கதை! கடிதங்கள்
எழுத்தாளர் ஜெயமோகன்
இனிய தோழர் இரா. முருகானந்தம் அவர்களுக்கு,
வணக்கம். நலமா?
எங்கள் அலுவலகத்தில் தற்போது தீபாவளி மலர் வேலைகள் நடந்து வருகின்றன. கட்டுரைகளை செம்மையாக்கும் பணியைக் கொடுத்திருக்கிறார்கள். சேலம் கல்லாங்குத்து பஜார், திண்டுக்கல் - பழநி நடைபாதை, சிவகாசி தீக்குச்சிகள் உள்ளிட்ட கட்டுரைகள் தயாராகி உள்ளன. நிருபர் வெ.நீலகண்டனின் இடத்தை நிரப்புவது கடினமானது. அவர் ஏகப்பட்ட வேலைகளை செய்துகொண்டிருந்தார். என்னால் முடிந்தளவு வேலை செய்து வருகிறேன்.
விகடனில் ஜெயமோகன் எழுதிய வெயிலில் தொற்றிக்கொள்வது கதை, புதுவித புனைவாக ஈர்த்தது. வெயிலை அள்ளிப்பருகும் மனிதர் ஒருவரின் கதை இது. தீராத பகல், தனது காதலியின் இறப்பு ஆகிய நினைவுகளை பசுமையாக வைத்திருக்க வெளிச்சத்தின் போதையை நாடி விமானத்திலேயே திரியும் மனிதரின் வாழ்க்கை ஆச்சரியப்படுத்தியது.
குங்குமத்தில் வரும் முகங்களின் தேசம் தொடர், நூலாக வெளியாகும்போது முக்கியமான நூலாக இருக்கும். இந்திய நிலப்பரப்பு, மனிதர்கள், புழுதி, நீர், உணர்வுகள் என மாயம் நிகழ்த்தும் எழுத்து.
பேச்சு மறுபேச்சு நூலில் இசை பற்றி இளையராஜா பேசியது புதிதாக இருந்தது. பேட்டி எடுத்தவர்களின் இசை ஞானம் சாதாரணமாக பாடல்களைக் கேட்பவர்களை விட அதிகம் என்பதை எளிதில் உணரலாம். இதை கவனத்தில் கொண்டுவராமல் வாசித்தால் எழுத்து உறுத்தாது. நீங்கள் கடற்கரையில் எடுத்திருந்து பதிவு செய்திருந்த படங்கள் நன்றாக இருந்தன.
நன்றி!
சந்திப்போம்
ச.அன்பரசு
25.9.2016
கருத்துகள்
கருத்துரையிடுக