துயரத்தாரையாக வழிந்தோடும் வாழ்க்கை! - கடிதங்கள்

 






pixabay


பிரிய முருகானந்தம் அவர்களுக்கு, வணக்கம். 

உங்களுக்கும் எனக்குமான அறிமுகம் அந்தளவு ஈர்ப்பானதாக அமையவில்லை. இதை நீங்களும் அறிந்திருப்பீர்கள். தங்களின் அறிமுகத்தினால் என்னை நான் புதுப்பித்துக்கொண்டேன். கருத்துகளிலும், ஒரு விஷயத்தை அணுகுவதிலும் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். 

தாங்கள் எனக்கு வாசிக்க கொடுத்த புத்தகங்கள் நீண்ட வாழ்வை வாழ்ந்த அயர்வையும், கர்வத்தையும், மகிழ்ச்சியையும் ஒரு சேர ஏற்படுத்தியது என்று கூறினால் அது மிகையான ஒன்றல்ல. 

தங்களின் அறிவை, அனுபவத்தை, மகிழ்ச்சியான நேரங்களை என்னோடு பகிர நினைத்ததே பெரிய வரமாக நினைக்கிறேன். யாருக்கு கிடைக்கும் இந்த வாய்ப்பு?

அனைத்து நேரங்களிலும் நம் உணர்வை மொழியால் வெளிப்படுத்த முடிவதில்லை. தங்களை மார்புறத் தழுவ நினைக்கிறேன். பல்வேறு வழிகளில் மக்களுக்கு நன்மை கிடைக்க போராடும் உங்கள் போராட்டம் வெற்றி பெற இறையை வேண்டுகிறேன். 

இப்படி எழுதுவது கூட முழுமையாக நான் கூற விரும்புவதை கூறுகிறதா என்று தெரியவில்லை. ஓரளவு உதவுகிறது என்றுதான் சொல்ல வேண்டும். நான் எதைத்தேடிக் கொண்டிருக்கிறேன் என்று எனக்கே தெரியவில்லை. முன் ஒரு காலும் பின் ஒரு காலுமாக தடுமாறிக்கொண்டிருக்கிறேன். துயரத்தாரையான எழுத்துகளை யாரும் வாசிப்பதை விரும்புவது இல்லை. இத்தோடு எழுதுவதை நிறுத்திக்கொள்ளலாம் என்று தோன்றுகிறது. புதியது பூக்கும்போது தொடருகிறேன். 

விடைபெறுகிறேன் அண்ணா!

நன்றி!

ச.அன்பரசு

15.3.2013

கருத்துகள்