பண்டோரா பேப்பர்ஸ்!- அறக்கட்டளை மூலம் வரி ஏய்ப்பை நடத்தும் பணக்காரர்கள்
பண்டோரா பேப்பர்ஸ் - இந்தியன் எக்ஸ்பிரஸ் |
பண்டோரா பேப்பர்ஸ்
14 கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து 11.9 மில்லியன் கோப்புகள் வெளியாகியுள்ளன. இந்த கோப்புகள் வெளிநாடுகளில் தொடங்கப்பட்டுள்ள 29 ஆயிரம் போலி நிறுவனங்கள் பற்றியது. சிங்கப்பூர், நியூசிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளில் வாடிக்கையாளர்களாக உள்ள நிறுவனங்கள் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
வெளியாகியுள்ள கோப்புகள் பல்வேறு வெளிநாடுகள், அறக்கட்டளைகளில் உள்ள முதலீடுகள், பங்கு முதலீடுகள், வாங்கப்பட்டுள்ள நிலங்கள், ரொக்கம் ஆகியவற்றை விளக்குகின்றன. பண்டோரா பேப்பர் விவகாரத்தில் இந்தியாவின் பங்கு இருந்தால்தானே நமக்கு பெருமை? இதில் மொத்தம் 380 இந்தியர்கள் தொடர்புடையவர்களாக இருக்கிறார்கள்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ், அறுபது நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் கோப்புகளை ஆராய்ந்து உறுதிபடுத்தியுள்ளது.
பல்வேறு அறக்கட்டளைகளைத் தொடங்கி அதன் மூலம் வரி ஏய்ப்பு செய்தவர்கள்தான் இந்த விவகாரத்தில் வெளியாகி இருக்கிறார்கள். இப்படி வரி ஏய்ப்பு விவகாரம் வெளியாகும் போதெல்லாம் வரி குறைவாக உள்ள நாடுகளில் ஒருவர் நிறுவனம் தொடங்குவது குற்றமல்ல. சட்டரீதியானது என சில நல்ல உள்ளங்கள் சப்பைக்கட்டு கட்டுவது உண்டு. எதற்காக அங்கு சென்று பணத்தை மறைத்து நிறுவனங்களை தொடங்கவேண்டும் என்பதைக் கேள்வி கேட்டால், கேள்வி கேட்பவர் இந்தியராக இருப்பாரா என்று சந்தேக கணைகளை அரசியல்வாதிகளும் அவர்களின் கைத்தடியான ஊடகங்களும் எழுப்புவார்கள்.
பணம் சேர்க்கும் திவால் சாமர்த்தியம்
அறக்கட்டளையை சட்டரீதியாக தொடங்கலாம்தான். ஆனால் அதனை தொடங்குபவர் பெயர் ஏன் போலியாக இருக்கவேண்டும் என்பதில்தான் அத்தனை விஷயங்களும் இருக்கிறது. இந்தியாவில் வரி கட்டாதவரை பிடிக்க நினைத்தால் கூட வெளிநாடுகளில் உள்ள அறக்கட்டளையை மடக்க முடியாது. இதன் உரிமையாளர் பெயர் வேறாக இருக்குமே? உள்நாட்டில் வங்கியில் கடன் வாங்கிவிட்டு அத்தொகையை இப்படி அறக்கட்டளை தொடங்கி மறைத்து வைக்கமுடியும். இதனை வங்கியும், சட்டரீதியான அமைப்புகளும் அணுகவே முடியாது. அனில் அம்பானி இப்படித்தான் தனது நிறுவனத்தை திவாலானதாக சொல்லிவிட்டு வெளிநாடுகளில் பணத்தை குவித்து வைத்துள்ள சாமர்த்தியம் தெரிய வந்துள்ளது.
என்ன வேறுபாடு?
பனாமா பேப்பர்ஸ், பாரடைஸ் பேப்பர்ஸ் என்பதெல்லாம் தனிநபர்கள் நிறுவனங்கள் தொடங்கிய நிறுவனங்கள் பற்றிய கோப்புகளைக் குறித்தன. ஆனால், பண்டோரா பேப்பர்ஸ் பல்வேறு நாடுகள் வரி ஏய்ப்பைத் தடுக்கும் சட்டங்களை உருவாக்கியபிறகும் கூட எப்படி வெளிநாட்டில் முறைகேடாக பணத்தை, பங்கு முதலீட்டை, வரி ஏய்ப்பை செய்கிறார்கள் என்பதைப் பேசுகிறது. இந்த வகையில் அறக்கட்டளை எனும் அமைப்பை எப்படி தனிநபர்களும் நிறுவனங்களும் தங்களுக்கு ஏற்றபடி லாபமாக பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்பதை கூறுகிறது. வரி இல்லாமல் நிறுவனங்கள் தொடங்க சமோவா, பெலிஸ், பனாமா, பிரிட்டிஷ் வர்ஜின் ஐலேண்ட், சிங்கப்பூர், நியூசிலாந்து, அமெரிக்காவின் சவுத் டகோடா ஆகிய இடங்கள் உதவுகின்றன.
அறக்கட்டளை டெக்னிக்!
அறக்கட்டளையில் மூன்று முக்கியமான விஷயங்கள் உள்ளன. ஒன்று, அதனை உருவாக்கி, யார் அதனை நிர்வாகம் செய்யவேண்டும் என்று கூறும் செட்லர் என்பவர். இவர்தான் அதனை நிர்வாகம் செய்யும் அறங்காவலரை நியமிக்கிறார். இவர், அறக்கட்டளையை மேற்பார்வை செய்யும் மற்றொரு நபரையும் நியமிக்கும் அதிகாரம் கொண்டவர். அறக்கட்டளையின் செயல்பாட்டிற்கு டிரஸ்டி எனும் அறங்காவலரே பொறுப்பு. வம்பு, வழக்கு வந்தால் இவர்தான் பார்க்கவேண்டும். அடுத்து செயல்பாடுகளால் பயன்பெறுபவர்கள் என்பது மூன்றாவது பகுதி.
சட்டவிரோதமா இல்லையா?
இந்திய அறக்கட்டளை சட்டம் 1882 படி அறக்கட்டளையை தொடங்கி இயக்குவது சட்டவிரோதம் கிடையாது. அறக்கட்டளையை நிர்வாகம் செய்பவர், வேறு நீதிமன்ற அதிகாரத்திற்குள் வரும்படியான அமைப்புகளை உருவாக்கவும் அனுமதிக்கிறது.
வைத்தியநாதன் ஐயர்
இந்தியன் எக்ஸ்பிரஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக