கள்ளம் இல்லாத மனத்துடன் கலையை வளர்க்க முயல்பவனின் கதை! - கடிதங்கள்

 




கள்ளம் -எழுத்தாளர் தஞ்சை ப்ரகாஷ்





அன்பு நண்பர் முருகுவுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா?

ஆர்ச்சீவ்.ஆர்க் என்ற தளத்தில் பள்ளத்தாக்கு என்ற சிறுகதையைப் படித்தேன். மைதிலி என்ற பெண்ணின் சுதந்திர வாழ்கையைப் பேசுகிற கதை. தஞ்சை ப்ரகாஷின் மொழியில் பெண்கள் தைரியமாகவும், தனித்துவமாகவும் எழுந்து நிற்கிறார்கள். முக்கியமான அம்சம், மைதிலியைப் பெண் பார்க்க வரும் ஆண்கள் பற்றியது. 

வர்க்கீஸ் குரியன் எழுதிய  எனக்கும் ஒரு கனவு  நூலை இரண்டாம் முறையாக படித்தேன். குரியன் போன்றவர்களின் அர்ப்பணிப்பு மீதான ஈர்ப்பு எனக்கு குறையவே இல்லை. திரிபுவன்தாஸ் படேலின் பேச்சைக் கேட்டு பணிபுரிய ஒப்புக்கொண்ட வர்க்கீஸின் முடிவு முக்கியமானது. விவசாயிகளை வலுவாக்கிய பொதுத்துறை நிறுவனங்களில் அமுலுக்கு முக்கியமான பங்குண்டு. 

1950 முதல் 1988ஆம் ஆண்டுவரை மேலாளர் பதவியில் ரூ.5 ஆயிரத்தை சம்பளமாக வாங்கிக்கொண்டு வேலை செய்தார் என்பது ஆச்சரியமாக உள்ளது. அரசியல்வாதிகளில் சுயநலமாக செயல்பட்ட ஜெகஜீவன்ராம் போன்றோரை நேரடியாகவே விமர்சித்து எழுதியிருக்கிற துணிச்சல் பாராட்டத்தக்கது. குரோடி, ஜெகஜீவன்ராம், நேரு, ராஜீவ்காந்தி, இந்திராகாந்தி ஆகியோரை முக்கியமான மனிதர்களாக கூறலாம். 

இந்த நூலை வாங்குவதற்கு ஊக்கம் கொடுத்தவர் நீங்கள்தான். அதற்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். கள்ளம் - தஞ்சை ப்ரகாஷ் படித்தேன். இந்த நாவலிலுள்ள பெண்களின் பாத்திரம் அபாரமான உறுதி படைத்தவர்களாக உருவாக்கியுள்ளார். காமத்தின் மூலம் பெண்களை உந்தி அவர்களை வேலையில் வல்லுநர்களாக்கும் உத்தி, அதன் பக்கவிளைவாக ராஜூ படும் பாடுகள்தான் கதை. அகம் சார்ந்த உணர்வுகள் விஷயத்தில் நாவலாசிரியர் சிறப்பாக செயல்பட்டுள்ளார். தமிழோடு வரும் தெலுங்கு மொழியும் சிறப்பாக பதிவாகியுள்ளது. வணிகத்தோடு சமரசம் செய்துகொள்ளாமல் கலைஞனாகவே இருப்பேன் என பிடிவாதம் பிடிப்பவனின் வாழ்க்கைப் பார்வைதான் கதையை முக்கியமானதாக்குகிறது. அப்பாவும், ராஜூவும் கலை பற்றி பேசும் இடங்களை கவனித்தாலே இதனைப் புரிந்துகொள்ள முடியும். 

நன்றி

ச.அன்பரசு

12.1.2021


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்