திரைப்படங்களில் உணர்ச்சிகளை உருவாக்குவது கடினமானதுதான்! - சத்யஜித்ரே நூற்றாண்டு - நேர்காணல்

 




சத்யஜித்ரே நூற்றாண்டு 2021



சத்யஜித்ரே வங்காளத்தைச் சேர்ந்த முக்கியமான திரைப்பட இயக்குநர். அவரின் நூற்றாண்டை முன்னிட்டு ஆங்கில மாத இதழான பிரன்ட்லைன் சிறப்பிதழ் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட நேர்காணல் இது. 

செஸ் பிளேயர்ஸ் படத்தில் நவாப்புகளைப் பற்றி பேசியிருப்பீர்கள். குழந்தையாக இருக்கும்போது நீங்கள் லக்னோவிலிருந்து கல்கத்தா வந்தவர். எப்படி இதனை சித்திரித்தீர்கள்?

நல்லது. அங்கு நவாப்புகள் யாருமில்லை. அங்கு எனது மாமா மட்டுமே இருந்தார். அதுல்பிரசாத் சென் எனும் அவர்தான் வங்காள பாடல்களுக்கு இசையமைத்து வந்த பிரபலமான ஆள். நாங்கள் அவரின் வீட்டுக்கு அருகில் வசித்ததால், பாடல்களை உருவாக்கப்படுவதையும் உருதை நல்ல முறையில் உச்சரிப்பதையும் அறிந்திருந்தேன். லக்னோவில் உள்ள பாரம்பரிய முறையும் எனக்கு தெரிந்த ஒன்றுதான். நான் லக்னோவிற்கு நடிகை அக்தாரி பாயை பார்க்கப் போனேன். ஜல்சாகர் என்ற படத்தில் அவரை நடிக்க வைக்க கேட்கலாம் என்று யோசனை இருந்தது. அங்கு அவருடைய கணவர் வழக்குரைஞராக இருந்தார். அவரின் உடல்மொழியைப் பார்த்தேன்.எனவே அவரை நவாபாக நடிக்க வைத்தேன்.  எனவே நான் சிறுவனாக இருந்தபோதும் கூட அந்தளவு குறிப்பிட்ட விஷயம் பற்றி விழிப்புணர்வாக இல்லை என்பது உண்மைதான். 

வாஜித் அலி ஷா பற்றிய ஏதாவது உணர்ச்சிகள் உங்களுக்கு இருந்ததா?

சிறிய பையனாக அப்படி ஏதும் கிடையாது. லக்னோவை விட்டு விலகிச் செல்லும்போது தும்ரி பாடல்களைப் பற்றி தெரியும். வங்காள இசையைத் தழுவியதாக அவரது பாடல்களைக் கேட்டிருக்கிறேன். அதனால் நினைவில் இருக்கிறது. இப்படித்தான் வாஜித் பற்றி அறிந்தேன். வாஜித் அலி சா பற்றி இரண்டுவிதமான கோணங்கள் உள்ளன. ஒன்று, அவருக்கு நாம் மரியாதை கொடுக்கும் விதமாக மற்றொன்று அப்படியில்லாத நிலை. நான் அவரைப் பற்றிய படத்தை உருவாக்கும்போது இதில் தெளிவாக இருந்தேன். 

படத்தை உருவாக்கும்போது நிறைய விஷயங்களை பிறருக்கு விட்டுக்கொடுத்துவிட்டேன். உருது தெரிந்த ஷாமா ஸைதிதான் படத்தில் நிறைய பங்களிப்புகளை செய்தார். அவரின் முட்டாள்தனமான பாத்திரம் மீது எனக்கு எந்த உணர்ச்சியும் இல்லை. அப்படி இருந்தால் அது படத்தை உருவாக்குவதற்காகவே இருக்கும். வாஜித், பாரம்பரிய இசையில் ஏராளமான புதிய விஷயங்களைக் கொண்டு வந்து சேர்த்தார். அவரது காலத்திற்கு பிறகுதான் அது இந்திய இசையாக மாறியது. 

உங்களுக்கு இரண்டு செஸ் விளையாடும் பாத்திரங்களாக வாஜித், மிர்சா மீது ஈர்ப்பு இருந்ததா? 

என்னால் அவர்களை புரிந்துகொள்ள முடிந்தது. நான் அவர்களின் பாத்திரங்களின் மீதான உணர்ச்சிகளைக் கொண்டிருந்தேன். எனது விளம்பர பணிகள் முடிந்த பிறகு  இரண்டு மணிநேரம் செஸ் விளையாட்டை நூலிலிருந்து கற்று விளையாடிக்கொண்டிருந்தேன். 

செஸ் விளையாடும் பழக்கத்திலிருந்து எப்படி வெளியே வந்தீர்கள்?

அந்தப் பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக இறந்துவிட்டது. செஸ் விளையாடுவதற்கான படித்து வந்த புத்தகங்களை விற்றுவிட்டேன். அப்போது நான் பதேர் பாஞ்சாலி படத்தை எடுத்துக்கொண்டிருந்தேன். 

செஸ் மீது பைத்தியமாக இருந்த நவாப்புகள் இறுதியில்தான் அதன் பாதிப்பை உணர்வார்கள். அவர்களால் பல்வேறு நிகழ்ச்சிகளில் முழுமையாக பங்கேற்க முடியாது. ஏறத்தாழ நானும் அப்படித்தான் இருந்தேன். 

உங்கள் படங்களின் கதாப்பாத்திரங்களுக்கு இடையிலான உறவு வலிமையாக உள்ளதே?

அதனை என்னுடைய ஸ்பெஷல் என்று சொல்லலாம். இப்படி பாத்திரங்களை உருவாக்குவது எனக்கு இயல்பானதாக இருக்கிறது. நான் மனிதர்களின் உளவியல் பற்றி புரிந்துகொண்டிருக்கிறேன் என்று கூட கூறலாம். 

உறவுகளை திரையில் வலிமையாக உருவாக்குவது கடினமானதா?

திரைப்படத்தைப் பொறுத்தவரை அனைத்து விஷயங்களுமே கடினமானதுதான்.  எந்த பிரச்னைக்கும் எளிய தீர்வு என்பதே கிடையாது. மிக கவனமாக உள்வாங்குவதும், கணக்கிடலும், புரிந்துகொள்வதும் முக்கியமானது. 




பிரன்ட்லைன்

ஆண்ட்ரூ ராபின்சன்

கருத்துகள்