வாழவே வழியில்லாதபோது இலக்கிய விருதை வைத்து என்ன செய்வது? - மனோரஞ்சன் பியாபாரி

 



எழுத்தாளர் மனோரஞ்சன் பியாபாரி






மனோரஞ்சன் பியாபாரி

மேற்கு வங்க எழுத்தாளர்


உங்கள் எழுத்து பல லட்சம் வாசகர்களை ஈர்க்கும் என நினைத்தீர்களா? உங்கள் நூல்களுக்கு விருதுகளும் கூட கிடைத்துள்ளனவே?

இல்லை. நான் என்னுடைய முதல் நூலை எழுதியபோது, குறைந்தபட்சம் ரிக்சா ஓட்டுபவனும் மனிதன்தான் என்பதை மக்கள் உணர்ந்தாலே போதும் என்று நினைத்தேன். நான் எழுதிய நூல்கள் வெளியாகத் தொடங்கியபிறகு மக்கள் என்னைப் பார்த்த கோணம் மாறியதை உணர்ந்தேன். ஜாதவ்பூர் பல்கலைக்கழக மாணவர்கள் என்னை சந்தித்து உரையாடினர். சிலர் தங்களுடைய பத்திரிகையில் எழுதுவதற்காக அழைத்தனர். இதுபோன்ற மரியாதை எனக்கு இப்போதுதான் கிடைக்கிறது. நான் எழுதிய புத்தகங்கள், படித்தவர்களோடு பழகுவதற்கான வாய்ப்பைக் கொடுத்தது. 

ரிக்சா ஓட்டுபவர்களை யாரும் மனிதர்களாகவே பார்ப்பதில்லை என்று சொன்னீர்கள். நாட்டிலுள்ள ஏழை மக்கள் இப்படித்தான் நடத்தப்படுகிறார்களா?

நான் என்னுடைய வாழ்க்கையில் சமையல்காரனாக, பாத்திரங்களை கழுவும் வீட்டு வேலைக்காரனாக, ரிக்சா ஓட்டுபவனாக இருந்திருக்கிறேன். இந்த வேலைகளில் நிறைய கஷ்டங்களையும் வசைகளையும் அனுபவித்திருக்கிறேன். மெல்லத்தான் இப்படி வசைகளை, வன்முறையை அனுமதித்தால் இப்படியே இருக்கவேண்டியதுதான் என்ற முடிவுக்கு வந்தேன். எனவே ஒருவர் அடித்தால் அவரை திருப்பி அடிக்கவேண்டும். அப்போதுதான் அவர்கள் பயப்படுவார்கள். எனவே நான் திருப்பியடிக்கத் தொடங்கினேன். 

நீங்கள் திருப்பி அடித்தீர்களா? அதுவும் வன்முறையான முறையில்...

ஆமாம். என்னை தாக்கியவர்களை நான் திரும்ப தாக்கியிருக்கிறேன். இதற்காக என்மீது நிறைய வழக்குகள் போடப்பட்டுள்ளன. ஆறுமுறை சிறைக்கும் சென்றுள்ளேன். 

நீங்கள் எப்படி முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்தீர்கள்?

நான் டெல்லியிருந்து கொல்கத்தாவிற்கு விமானத்தில் வந்தபோது மம்தா பானர்ஜியை சந்தித்தேன். இது ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த நிகழ்ச்சி. பிறகு எழுத்தாளர் மகாஸ்வேதா தேவியின் பிறந்தாளில் அவரின் வீட்டில் மம்தாவைப் பார்த்தேன். ஆனால் அவர் என்னைப் பார்த்தாரா இல்லையா என்று தெரியவில்லை. 

நீங்கள் தேர்தலில் வென்று எம்எல்ஏ ஆகிவிட்டீர்கள். இதனால் எழுதுவதற்கு நேரம் கிடைக்காது என்று பயமாக இல்லையா?

நான் முதலில் பாதிக்கப்படும் சாதாரண மக்கள் பற்றி நூல்கள் எழுதிக்கொண்டிருந்தேன். தலித்துகள் எப்படி தங்கள் சாதி, வறுமை, கல்வி அறிவின்மை காரணமாக பாதிக்கப்படுகிறார்கள் என்பதை எழுதி வந்தேன். இப்போது நான் எம்எல்ஏவாக இருக்கிறேன். எனக்கு பதவிக்கான அதிகாரம் இருப்பதால், அதை வைத்து மக்களுக்கு நல்லது செய்து வருகிறேன். இதன் காரணமாக, ஏழை மக்கள் என் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். அவர்களுக்கு நான் நல்லது செய்வேன் என நம்புகிறார்கள். வெறித்தனமான பாசம் வைத்திருக்கிறார்கள். 

2021 தேர்தலில் போட்டியிட மம்தா உங்களுக்கு வாய்ப்பு கொடுத்தது எப்படி நடந்தது?

அது பெரிய கதை. நான் சமையல்காரனாக பணியாற்றிக்கொண்டிருந்த காலம் அது. அப்போது உடல்ரீதியாக பல்வேறு பிரச்னைகள் இருந்தன. மருத்துவர்கள் அறுவைசிகிச்சை செய்வதற்கு பரிந்துரை செய்தனர். இதனை செய்வதற்கு அரசின் உதவியை நாடினேன். ஆனால் அவர்கள் போர்ட் மீட்டிங் ஒன்றை நடத்தி, எனக்கு உதவ முடியாது என முடிவெடுத்தனர். 

உயர் ரத்த அழுத்தம், இரண்டு முழங்கால்களிலும் இருந்த வலி என என்னால் சமையல் வேலையைக் கூட செய்ய முடியவில்லை. இந்த நிலையில் அந்த வேலையும் பறிபோனது. அப்போதுதான் மாநில அரசு, வங்காள அகாதெமி விருதை எனக்கு கொடுத்தார்கள். சாப்பிட வழியில்லாத நிலையில் விருதை வைத்து என்ன செய்ய என்று எனக்கு தோன்றியது. இதைப்பற்றி எழுதி, என்னுடைய விருதை அரசுக்கு திரும்பத் தருகிறேன் என்று கூறினேன். இதைப்பற்றி முதல்வர் மம்தாவுக்கு அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். அவர் உடனே நடவடிக்கை எடுத்து எனக்கு நூலகத்தில் நூலகர் பதவியொன்றைக் கொடுத்தார்.  அதன்பிறகுதான் என்னுடைய பொருளாதார பிரச்னைகள் கொஞ்சம் குறைந்தன. பிறகு வங்காள சாகித்திய அகாதெமியின் தலைவராக்கினார். இந்த பதவியில் உள்ளவர் மாநிலம் முழுவதும் சென்று உரையாற்றலாம் என்பது எனக்கு பிறகுதான் தெரிய வந்தது. 

இப்படி பேசியபோது பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புகள் சமூகத்திற்கு ஏற்படுத்தும் தீங்குகள் பற்றி பேசினேன். இதனால் எனக்கு நிறைய கொலைமிரட்டல்கள் வந்தன. பெங்களூருவில் இறந்துபோன கௌரி லங்கேஷின் தம்பியாக உன்னை மாற்றிவிடுவோம் என்று கூட விதம் விதமாக மிரட்டல்கள் வந்தன. பாஜக, மேற்கு வங்கத்தில் ஆட்சிக்கு வந்தால் எனக்கு நிறைய கஷ்டங்கள் வரும் என்று தெரியும். கூடவே, மாநில மக்களும் பாதிக்கப்படுவார்கள். எனவே என் மனதிலுள்ள விஷயங்களை பேசினேன். இதைப்பற்றி அறிந்த முதல்வர் மம்தா, என்னை அழைத்து தேர்தலில் போட்டியிடுகிறீர்களா என்று கேட்டார். நான் உடனே ஒப்புக்கொண்டேன். 


இப்போது என்ன நூலை எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். அடுத்த நூல் எப்போது வெளியாகும்?

நான் என்னுடைய சுயசரிதையை எழுதிக்கொண்டிருக்கிறேன். எனது எம்எல்ஏ அனுபவத்தையும் அதில் பதிவு செய்யவேண்டும். நூலை முடிக்க எம்எல்ஏ பதவிக்காலம் நிறைவு பெற வேண்டும். என்னுடைய பயணம் இப்போதுதான் தொடங்கியுள்ளது. எனவே நூலை நிறைவு செய்ய ஐந்து ஆண்டுகள் தேவை. 


ஃபிரன்ட்லைன்

ஜியா அஸ் சலாம்


குங்குமம் இதழில் மனோரஞ்சன் பியாபாரியைப் பற்றி எழுதிய கட்டுரை இணைப்பு இதோ..

http://www.kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=11589&id1=9&issue=20170106




கருத்துகள்

பிரபலமான இடுகைகள்