மானத்தைக் காப்பாற்ற பகத் பாசில் செய்யும் முயற்சிகள்! - கடிதங்கள்
மகேஷிண்டே பிரதிகாரம் - பகத் பாசில்
இனிய நண்பர் முருகு அவர்களுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா?
நோய் எதிர்ப்பு சக்திக்காக நெல்லிக்காய் லேகியம் சாப்பிட நினைத்தேன். ஆனால் சியவனப்பிரகாசம்தான் கிடைத்தது. காதியில் கிடைத்த லேகியம் விலை குறைவு. ஆனால் திருப்தியாக இல்லை. கோட்டக்கல் வைத்தியசாலையில் சியவனப்பிரகாசம் வாங்கி சாப்பிடுகிறேன். ஓரளவு நன்றாகவே இருக்கிறது.
அலுவலகத்திலிருந்து முன்னணி பத்திரிக்கைக்கு சென்ற மருத்துவ இதழ் பெண் ஆசிரியர், நிறுவன இயக்குநரால் மிரட்டப்பட்டது அலுவலகம் முழுக்க தெரிந்துவிட்டது. எதற்கு இந்தளவு ஆங்கார கோபம்? முன்னணி நிறுவனம் குறித்த கோபம் எதற்கு? அந்த நிறுவனம்தான் இதழ்களுக்கான பத்திரிக்கையாளர்களை பயிற்சி கொடுத்து தயாரிக்கிறது. ஏன்? எங்கள் நிறுவன வார இதழின் ஆசிரியர் கூட அந்த நிறுவனத்தின் தயாரிப்புதான். இதேபோல முன்னணி நிறுவனம் மட்டும் தனது பத்திரிகையாளர்களை மிரட்ட வேண்டுமென்றால், அதற்கென தனி குழுவை உருவாக்கி முழுநேரமாக மிரட்டல் வேலைகளை செய்யவேண்டும். அதிகாரம் குவியும் இடத்தில் அரசியல் இருக்கத்தானே செய்யும். இந்த கேடுகெட்ட அரசியல்தான் நிறுவனத்தை வளர்க்க முடியாமல் செய்கிறது. கரையானாக உள்ளே இருக்கு்ம் வளங்களை அரிக்கிறது.
பருவம் நாவலை வீட்டில் இருந்தபோது படித்தேன். படித்தவரை திருப்திதான் என்றாலும் பாவண்ணனின் தமிழாக்க பிரதியை அவசர கதியில் அச்சுக்கு அனுப்பி வைத்துவிட்டார்கள். இதனால் நூலில் ஏகப்பட்ட பிழைகள் வாசிக்கும்போது உறுத்துகின்றன.
மகேஷிண்டே பிரதிகாரம் படம் பார்த்தேன். சின்ன விஷயத்தை அழகாக செய்திருக்கிறார்கள். சண்டை சமாதானத்தின்போது, பகத் பாசிலை ஒருவன் வேட்டியை அவிழ்த்துவிட, அதற்கு எப்படி பழிவாங்குகிறார் என்பதுதான் கதை. இயற்கையான காட்சி அமைப்புகளைக் கொண்ட இனிதான படம் இது.
நன்றி!
சந்திப்போம்
ச.அன்பரசு
13.9.2016
கருத்துகள்
கருத்துரையிடுக