சுகாதார அட்டை இந்திய மக்களுக்கு பாதுகாப்பு அளிக்குமா?

 





அனைவருக்கும் சுகாதார அட்டை ஒன்றை தயாரிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆயுஸ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் ஏபிடிஎம் என அழைக்கப்படும் திட்டம் கடந்த செப்டம்பர் 27 அன்று நடைமுறைக்கு வந்தது. 

இதன் தொடக்க கால திட்டம் கடந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று சோதனை முறையில் சோதித்துப் பார்க்கப்பட்டது. இந்த வகையில் ஒரு லட்சம் சுகாதார அட்டைகள் வழங்கப்பட்டு சோதிக்கப்பட்டது. இந்த சுகாதார அட்டையை பான் கார்டு அல்லது ஓட்டுநர் உரிமம் கொடுத்து பெறலாம். இதில் சேர விரும்புபவர் தனது பெயர், வயது. பிறந்த தேதி, முகவரி, ஆதார் எண் கொடுத்து விண்ணப்பத்து பூர்த்தி செய்யவேண்டும். உங்களிடம் ஆதார் இல்லையென்றாலும் கூட போன் நம்பர் கொடுத்துக்கூட பதிவு செய்துகொள்ளலாம். 

மக்களுக்கு எளிமையான முறையில் குறைந்த செலவில் மருத்துவ வசதிகள் கிடைக்கும் என ஒன்றிய  அரசு கூறியுள்ளது. பிரதமர் மோடி, மக்களின் வாழ்க்கை இனி எளிமையாகும் என திட்டத்தை அறிமுகப்படுத்தி பேசியுள்ளார். 

சுகாதார அட்டையை பதிவு செய்தால் பதினான்கு  எண்கள் கொண்ட அடையாள எண் வழங்கப்படும். இந்த எண்ணை ஒருவர் இதற்கான ஆப்பை போனில் நிறுவி பதிவு செய்து பெறலாம். நோய் பற்றிய தகவல்கள் நோயாளியின் அனுமதி பெற்று நாட்டிலுள்ள மருத்துவமனைகள் பெறலாம் என அமைச்சகம் கூறியுள்ளது. ஆயுஸ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா என்ற திட்டத்தின் மூன்றாவது ஆண்டு தினத்தன்று புதிய  சுகாதார அட்டை திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. 

நோயாளிகளுக்கு சுகாதார அட்டையை வழங்கும் திட்டம் என்பது முக்கியமானது. நாடெங்கும் திட்டம் எப்படி மேம்படுத்தப்படுகிறது என்பதைப் பொறுத்தே இதன் வெற்றி அமையும் என மணிப்பால் மருத்துவமனை தலைவர் சுதர்சன் பல்லால் கூறினார். 

இதில் பதிவு செய்துகொண்ட ஒருவர், தனது தகவல்களை எப்போது வேண்டுமானாலும் நீக்கிக்கொள்ள முடியும் என்ற வசதி உள்ளது. ஒருவரின் எண்ணைப் பெற்று அவரைப் பற்றிய அனைத்து விஷயங்களையும் பெற்றுக்கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது. 

சவால்கள் என்ன?

பிஎம் ஜே அட்டை, ஒரு நாடு ஒரே குடும்ப அட்டை, ஆதார் அட்டை போன்ற திட்டங்களை கூட முழுமையாக நிறைவேற்றிவிட்டோம் என்று கூற முடியவில்லை. இப்போது புதிய நாடுதழுவிய சுகாதார அட்டை என்பது எப்படி வெற்றிபெறும் என்று தெரியவில்லை. நாட்டில் பல்வேறு மொழிகள், பல்வேறு கலாசாரம் என்று நிலவுகின்ற வகையில் இது எளிமையாக இருக்காது என சிலர் விமர்சிக்கின்றனர்.

ஆதார் கார்டைக் கூட எளிமையாக ஏமாற்றி பெற்றுவிடுகிற சம்பவங்கள் நடக்கின்றன. தகவல்களை கொள்ளையிடுவதும் சாதாரண சம்பவங்களாகிவிட்டன. இந்த நிலையில் ஒருவரின் நோய் பற்றிய தகவல்கள் என்பது மருந்து நிறுவனங்கள், மருத்துவமனைகள், காப்பீடு நிறுவனங்களுக்கு தங்கச்சுரங்கம் போன்றவை. தனியார் மருத்துவமனைகள் கோவிட் -19 விவகாரத்தில் சிறப்பாக செயல்படவில்லை. கட்டணங்களை அதிகம் வாங்கினாலும் கூட மருத்துவ சிகிச்சையில் பாகுபாடு இருந்தது. இந்த நிலையில் நோயாளி பற்றிய தகவல்களை தனியார் மருத்துவமனைகளுக்கு கிடைக்கும்படி செய்வது தவறானது. சுகாதார அட்டையை நடைமுறைக்கு கொண்டு வரும் முன்னர், அரசு மருத்துவமனைகளை வலுவாக்கவேண்டும் எனவும் குரல்கள் கேட்கின்றன. 


 


தி இந்து ஆங்கிலம்

பிந்து சாஜன் பெரடப்பன்

தமிழில் அன்பரசு


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்