இஸ்லாமியர்கள் மீதான வெறுப்புக்கு காரணம் என்ன?

 







இஸ்லாமியர்கள் மீதான வெறுப்புக்கு அமெரிக்க வர்த்தக மையம் தாக்குதல் மட்டுமே காரணம் அல்ல. அதற்கு முன்னரே இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதத்திற்கு இடையே முன்விரோதம் , பகை, வன்மம் என எல்லாமே உண்டு. அதனை ஊக்கப்படுத்தியது தாக்குதல் நடத்திய பத்தொன்பது தீவிரவாதிகள் என்று கூறலாம். 

கிறித்துவம், இஸ்லாம் என்ற இரு மதங்களுமே நிறுவனமயமாக்கப்பட்ட மதங்கள். இதில் இஸ்லாமைப் பொறுத்தவரை அவர்கள் பிறரிடமிருந்து தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளும் தன்மை கொண்டவர்கள். இதனை இலக்கியவாதிகள் கூட பயன்படுத்தி காபிர்களின் கதைகள் என எழுதுகிறார்கள். இதன் வழியாக அவர்கள் சமூகத்திற்கு என்ன சொல்ல வருகிறார்கள் என்று தெரியவில்லை. 

புர்கா அணிவது, குல்லா அணிவது என தங்களை தனித்தே காட்டிக்கொள்ளும் இஸ்லாமியர்கள் அனைத்து நாடுகளிலும் இணக்கமான தன்மை கொண்டவர்களாக இல்லை. அமெரிக்காவில் இந்த வேறுபாடுகளை துல்லியமாக அடையாளம் காண்கிறார்கள். முஸ்லீம்களின் புனித நூலில் போர் என்பதை இயல்பானதாக ஏற்றுக்கொள்வதால், வன்முறையான குணம் கொண்டவர்கள் என முஸ்லீம்களை அடையாளப்படுத்த தொடங்கினர். 2010ஆம்ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றில் அமெரிக்கர்களில் பாதிப்பேர் முஸ்லீம்கள் வன்முறையான போக்கு கொண்டவர்கள் என்று கூறினர். இதை உறுதிப்படுத்துவது போலவே மதவெறி கொண்டு முஸ்லீம் அடிப்படைவாதிகளும் நடந்துகொண்டனர். தாக்குதல் நடத்தி மேற்கு நாடுகளில் பொதுமக்களை கொன்றனர். இதுதான் அப்பாவியான பிழைக்க வரும்  முஸ்லீம் மக்களை கூட சந்தேகமாக பார்க்க வைக்கிறது. முஸ்லீமா, தாடி வைத்திருக்கிறாயா, ஆடையைக் கழற்று என விமானநிலையங்களில் அவலங்கள் நடந்தேறுகின்றன. 

நார்வே, நியூசிலாந்து, வியட்நாம், இந்தியா என அனைத்து நாடுகளிலும் முஸ்லீம்கள் மீதான தாக்குதலுக்கு வலது சாரி கட்சிகள் வளர்ந்து வருவதும் முக்கியமான காரணமாக உள்ளது. இவர்கள் அரசியலுக்காக பிரிவினைவாதத்தை ஊக்கப்படுத்தி இடைநிலை சாதிகளை வைத்து சிறுபான்மையினர் மீது தாக்குதலை நடத்துகின்றனர். இப்படி செய்கிறீர்களே நியாயமா என்று கேட்டால், மனித உரிமைகளை வைத்து அரசியல் செய்யக்கூடாது என நாட்டின் பிரதமரே ஓலமிடுகிறார். கைகள் ஒருவரது கழுத்தை நெரித்து கொன்று கொண்டிருக்க, கொல்பவரின் கண்கள் கொல்லப்படுபவரின் இறப்பிற்கு தாரை தாரையாக கண்ணீர் சிந்தினால் எப்படியிருக்கும்? அப்படித்தான் இருக்கிறது நிலைமை .

2013 ஆம் ஆண்டிலேயே அமெரிக்காவில் மக்களின் தனிப்பட்ட சுதந்திரம் என்பது பறிபோய்விட்டது. அங்குள்ள கணினி, போன்கள் என அனைத்துமே அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. இதனைத்தான் எட்வர்ட் ஸ்னோடன் வெளிப்படுத்தினார். இதற்காகவே 52.6 பில்லியன் பட்ஜெட் போடப்பட்டு பிரிசம், டெம்போரா என இரு திட்டங்கள் உருவாக்கப்பட்டன. சிஜிஹெச்க்யூ எனும் திட்டத்தை இங்கிலாந்து செயல்படுத்தி மக்களை உளவுபார்த்து வருகிறது. இந்தியா மட்டும் சும்மாவா, பெகாசஸ் என்பது இப்போது வந்துள்ள செய்திதான். இதற்கு முன்னரே நாட்கிரிட், நேத்ரா, சிஎம்எஸ் என்ற திட்டங்களை இந்திய அரசு செயல்படுத்தி உளவு பார்ப்பதை தொடங்கிவிட்டது. 

உள்நாட்டுப் பாதுகாப்பு என்ற போர்வையில் அரசு செய்யும் செயல்பாடுகள் எப்போதும் வெளியே வராது. இப்படி சேகரிக்கப்படும் தனிநபர் பற்றிய தகவல்களை அரசியலுக்காக பயன்படுத்திக்கொள்ளும் அரசுகளும் உண்டு. இவை வெளியே கசிந்தால் நிலைமை மோசமாக இருக்கவே வாய்ப்புகள் உண்டு. 

விமானநிலையங்களில் செயற்கை நுண்ணறிவு கொண்ட முகமறிதல் சோதனைகள் வந்துவிட்டன. எனவே அரசு எளிதாக  ஒருவரை குற்றம் சாட்டி அவரை எங்குமே செல்லமுடியாதபடி தடுக்க முடியும். இவையன்றி விமானநிலைய சோதனைகள் தனி. விமானத்தில் கூட கதவுக்கு அருகில் கேமரா, உள்ளே வருபவர்களைப் பார்க்க விமானியிடம் மானிட்டர் என நிறைய வசதிகள் வந்துவிட்டன. எதற்கு இந்தளவு பாதுகாப்பு என்றால் எல்லாம் உங்களுக்காகத்தான் என்று சொல்லுவார்கள். ஏற்றுக்கொள்வதைத் தவிர்த்து வேறு என்ன வழி இருக்கிறது?


டைம்ஸ் ஆப் இந்தியா 





 

கருத்துகள்