சாகித்தியக்காரனின் திறமையை இருட்டடிப்பு செய்துவிட முடியுமா? - கடிதங்கள்
pixabay |
இனிய நண்பர் முருகு அவர்களுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா?
எங்கள் வீட்டில் ஆத்தாவின் இறப்புக்குச் சென்றேன். இரண்டு நாட்கள் இருந்துவிட்டு பிறகு சென்னைக்கு திரும்ப வந்துவிட்டேன். சகோதரர் இன்னும் சில நாட்கள் இருந்து வேலைகளைப் பார்த்துவிட்டு கோவைக்கு செல்வார். நான் வேலை செய்யும் வார இதழ் நிறுவனத்தில் வேலை செய்யும் உதவி ஆசிரியர்கள், நிருபர்கள் பெயர் திடீரென இருட்டடிப்பு செய்யப்பட்டுவிட்டது. அண்மையில் பெண்கள் இதழ், மருத்துவ இதழ் ஆசிரியர்கள் முன்னணி பத்திரிகை ஒன்றுக்கு நல்ல சம்பளத்திற்கு வேலைக்கு சென்றுவிட்டனர். இதன் காரணமாக எங்கள் நிறுவனத்தின் நிர்வாகம் கடுமையாக கோபம் கொண்டுவிட்டது போல. சாகித்தியக்காரனின் திறமையை இப்படி மறைத்துவைத்துவிட முடியுமா?
பணமும், தன்னகங்காரமும் கண்ணை மறைக்கிறது என்றுதான் கூறவேண்டும்.
குங்குமத்தில் தொடராக வரும் முகங்களின் தேசம் - ஜெயமோகன் எழுதுவதை வாசிப்பீர்கள் என நினைக்கிறேன். நான் என் கைக்கு வரும் இதழில் முதலில் படிப்பது இதைத்தான். ஈரோடு கதிரின் எழுத்து அப்படியே எஸ்.ரா போலவே இருக்கிறது. காலையில்தான் காலச்சுவடு இதழைப் படித்துக்கொண்டிருந்தேன். பிரேம் ரமேஷ் எழுதிய பேச்சு மறுபேச்சு எனும் நூலை இடையிடையே வாசிக்கிறேன். அதில் இசை அமைப்பாளர் இளையராஜாவுடன் நடத்தும் நேர்காணல் முக்கியமானதாக தோன்றுகிறது.
புலியூர் முருகேசனை கே.கே.நகரில் டிஸகவரி புக்பேலசில் சந்தித்தேன். உடலாயுதம் எனும் நூலின் விமர்சனக் கூட்டத்திற்கு வந்திருந்தார். அவரது எழுத்தை பிடிக்காதவர்களிடமிருந்து தூரத்தில் இருப்பதால் பேசும்போது அடிக்கடி உருமிக்கொண்டு மீசையை முறுக்கிக்கொண்டு இருந்தார். எனது அறைக்கு வருகிறேன் என்றார். அவர் அங்கு வந்து மதுபானத்தை கையில் எடுத்தால் அவரது உடலில் புகும் ஆவியைக் கட்டுப்படுத்தவே முடியாது. சாத்தியமில்லை என்று சொல்லிவிட்டேன். பக்கத்து வீட்டுக்காரர்கள் வேறு டாபர்மேன் நாய் போல பேச்சிலர்களை கடிக்க தயாராக இருக்கிறார்கள். என்ன செய்வது?
அடவி இதழைப் படித்தேன். ச.ஆறுமுகம் என்பவர் எழுதிய கதைகளைப் படித்தேன். மொழிபெயர்ப்பு கதைகள் நன்றாக இருந்தன. குங்குமம் இதழுக்கு அன்வர் என்பவர் விரைவில் வரவிருக்கிறார்.
நன்றி!
சந்திப்போம்!
ச.அன்பரசு
4.9.2016
கருத்துகள்
கருத்துரையிடுக