சீக்கிய மதத்தைப் பாதுகாக்கும் ராணுவப்படை நிகாங்குகள்!

 





கடந்த வெள்ளிக்கிழமை அன்று, விவசாயிகள் போராட்டத்தில் 35 வயதான தலித் ஒருவரை நிகாங்க்  ஆட்கள் கோரமாக வெட்டிக்கொன்றனர். எதற்கு இந்தக்கொலை என்றபோது, சீக்கியர்களின் நூல்களை மதிக்கவில்லை என்று காரணம் சொன்னார்கள். கடந்த 2020ஆம் ஆண்டு நிகாங்குகள் உதவி சப் இன்ஸ்பெக்டரின் கையை சீவி எறிந்தனர். பொதுமுடக்க காலத்தில் விதிகளை பின்பற்ற முடியாது என நிகாங்குகள் கூறியதன் காரணமாக நடந்த தாக்குதல் இது. 

நீலநிற உடை, அலங்கார தலைப்பாகை, வாள், இன்னும் பிற ஆயுதங்களைக் கொண்ட படையை நிகாங் என்கிறார்கள். 1699ஆம்ஆண்டு குரு கோவிந்த் சிங்கால் உருவாக்கப்பட்டது நிகாங் படை. இவர்களின் பெயருக்கு சமஸ்கிருதத்தில், பயமில்லாத உலகத்தில் லாப நஷ்டம் பற்றி கவலைப்படாதவர்கள் என்று அர்த்தம். 

பாபா புத்தா தல், தமா தல், தர்னா தல் என மூன்று பிரிவாக நிகாங்குகள் பிரிக்கப்பட்டு செயல்படுகின்றனர். பஞ்சாப்பில் நிகாங்குகளின் குழு 30க்கும் மேலாக சிறியதும் பெரியதுமாக செயல்பட்டு வருகிறது என்கிறார்கள்.  நாடோடிகளாக அங்கும் இங்கும் அலைவதால் நிகாங்குகளின் எண்ணிக்கையை முழுவதுமாக கணக்கிடமுடியவில்லை. சீக்கியர்களின் விழாக்களில் தற்காப்புக்கலைகளையும், குதிரை சவாரி திறனையும் கண்காட்சியாக காட்டுவது நிகாங்குகளின் வழக்கம். நிகாங்குகளை முழுமையாக கட்டுப்படுத்தும் தலைவர்கள் கிடையாது என்பதால் இவர்கள் ஒருங்கிணைப்பு இன்றி சிதறிக்கிடக்கின்றனர். 

நிகாங்குகளைப் பொறுத்தவரை அவர்கள் செய்வது சரி என பலரும் சமூகத்தில் ஏற்பதால், தலித் ஒருவரை கை, கால்களை வெட்டிக்கொன்றதற்கு எதிராக அரசியல்வாதிகள் யாருமே குரல் உயர்த்தவில்லை. அப்படிப் பேசினால் நிகாங்குகள் எப்போது குடும்பத்தை வேட்டையாடுவார்களோ என பயத்துடன் உயிர்வாழ வேண்டியிருக்கும் என்பதை அறிவார்கள். 

வேற்று மத ஆட்களிடமிருந்து மக்களையும், கோவில்களையும் பாதுகாப்பதில் நிகாங்கள் உயிரைக் கொடுத்து போரிட்டுள்ளனர். பதினெட்டாம் நூற்றாண்டில் முகலாயர்களுக்கு எதிராக நிகாங்கள் சண்டையிட்டுள்ளனர். 1748 -1767 காலகட்டத்தில் ஆப்கன் அஹ்மத் ஷா துரானியின் படைகள் ஊடுருவலை எதிர்த்து நிகாங்குகள்தான் போரிட்டனர். 

கால்சா ராணுவம் ஐந்து பட்டாலியனாக பிரிக்கப்பட்டது. ஒரு பட்டாலியன் என்றால் ஆயிரம் வீர ர்கள் கொண்ட படை. இதில் அகாலி படை யில் நிகாங்குகள் இடம்பெற்றனர். இவர்களை பாபா தீப் சிங் சாகித் என்பவர் வழிநடத்தினார்.  அகால் பங்கா எனும் சீக்கியர்களின் கோவில்களை பாதுகாப்பது, பராமரிப்பது தொடர்பான பணியில் நிகாங்குகள் ஈடுபட்டனர். 1849க்குப் பிறகு சீக்கிய மன்னர் காலமானார். ஆங்கிலேயர்கள் அரசு, 1859இல் அமிர்தசரஸ் கோவிலை நிர்வாகம்செய்த தனி மேலாளர் ஒருவரை நியமனம் செய்தது. 

போராளிகள் பக்கம் நிற்பது, காவல்துறைக்கு உதவுவது என நிகாங்க்களின் காலம் சென்றது. இப்போது பல்வேறு குருத்துவாராக்களை நிகாங்குகள் கட்டுப்படுத்துகின்றனர். அங்கு வரும் பக்தர்கள் நிகாங்குகளுக்கு நிதி அளிக்கின்றனர். கூடுதலாக குருத்துவாராவுக்கான நிலங்களில் நிகாங்கள் விவசாயம் செய்கின்றனர். புத்தா தல் என்பவரின் தலைமையில் மூன்று பள்ளிகளை நடத்துகின்றனர். இதில் அதிக மதிப்பெண் பெற்றால் மட்டுமே சேர்க்கை உண்டு. கூடவே வாடகைக்கு நிறைய கடைகளை வைத்திருக்கிறார்கள். 

இந்தியன் எக்ஸ்பிரஸ் - நவ்ஜீவன் கோபால்









கருத்துகள்