ஆங்கிலேயர் கால சீக்கிய குடும்பத்தின் வழியே வரலாற்றுப் பயணம்! - கடிதங்கள்
விடியல் முகம் - முல்க்ராஜ் ஆனந்த் |
இனிய தோழர் முருகானந்தம் அவர்களுக்கு,
வணக்கம். இந்த ஆண்டு குருபெயர்ச்சி உண்மையாகவே நிறைய செயல்பாடுகளை செய்துள்ளது என்றுதான் கூறவேண்டும். எங்கள் அலுவலகத்தில் வேலை செய்து வந்த குங்குமம் நிருபர், கல்வி வேலை வழிகாட்டி ஆசிரியர் நீலகண்டன், தலைமை உதவி ஆசிரியர் கோகுலவாச நவநீதன், குங்குமம் தோழி ஆசிரியர் வள்ளிதாஸன், குங்குமம் டாக்டர் ஆசிரியர் ஆர்.வைதேகி ஆகியோர் வரும் நாட்களில் விடைபெற்று வேறு பத்திரிகை அலுவலகங்களுக்கு செல்லவிருக்கின்றனர்.
ஒவ்வொருவரின் எதிர்கால வாழ்க்கைக்கு அவர்களது செயல்களும் முடிவுகளும்தான் பொறுப்பு. ஆனால் இவர்கள் அனைவரும் பேசி வைத்தது போலவே அடுத்தடுத்து வேலையிலிருந்து விடைபெறுவது பயமாக உள்ளது.
நான் முத்தாரம் இதழின் முழுப் பொறுப்பையும், சூரியன் பதிப்பக ஒருங்கிணைப்பு பணிகளையும் செய்து வருகிறேன். கூடவே குங்குமத்தின் உதவி ஆசிரியர் பணிகளையும் சுமக்கிறேன். இதை சுமத்தப்பட்டு விட்டது என்றுதான் கூறவேண்டும். இனி என்ன ஆகுமென தெரியவில்லை. தினகரனின் வியாழன் இணைப்பிதழான கல்வி மலருக்கான கட்டுரைகளையும் எடிட் செய்து தரச்சொல்லியிருக்கிறார்கள். தற்போது, புது ஆட்கள் இருவரை பணிக்கு எடுத்து இருக்கிறார்கள்.
முல்க்ராஜ் ஆனந்தின் விடியல் முகம் எனும் எண்பது பக்க நாவலைப் படித்தேன். தமிழில் ஷங்கர நாராயணன் மொழிபெயர்த்திருக்கிறார். பஞ்சாபின் அமிர்தசரசில் வாழும் சீக்கிய குடும்பத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளே கதை. இதன் வழியே நாட்டில் நடக்கும் அரசியலையும் பேச முயன்றிருக்கிறார் ஆசிரியர்.
புல்லி என்கிற கிரிஷன்தான் நாயகன். ஆங்கிலேயர் இந்தியாவை ஆளும் காலகட்டத்தில் நடைபெறுகிற கதை. வறுமை, ஊழல், குடும்ப அமைப்பின் சிக்கல், விடுதலைப் போராட்டம், ராணுவ வேலை என பல்வேறு விஷயங்களையும் பேசி பயணிக்கிறது கதை.
ஸ்ரீராம் அண்ணாவிடம் இரவல் பெற்று வாசித்த நாவல் இது. ஈரோடு புத்தக திருவிழாவில் காலச்சுவடு இதழுக்கு ஆண்டு சந்தா கட்டினேன். வேறு நூல்களை வாங்கவில்லை. 1984 ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய நூலின் விலை ரூ.210 என நற்றிணையில் போட்டிருந்தனர். காசு அதிகமாக உள்ளதோ என்று தோன்றியதால் வாங்கவில்லை.
இரு நாட்கள்தான் விடுமுறை உள்ளது. ஆக. 15 அன்று ஊருக்கு வந்துவிட்டு வந்தேன். நீங்கள் சென்னை வந்தால் அழையுங்கள். சந்திப்போம்.
நன்றி!
ச.அன்பரசு
25.8.2016
படம் - உடுமலை.காம்
கருத்துகள்
கருத்துரையிடுக