பால் உற்பத்தியில் இந்தியா சாதித்த வெற்றிக்கதை! - இந்தியா 75

 








இந்தியா 75

கூட்டுறவு நிறுவனங்களின் வெற்றிக்கதை. 


குஜராத்திலுள்ள கைரா என்ற மாவட்டமே கூட்டுறவு அமைப்பு முறையில் பால் உற்பத்தியாளர் சங்கங்களை அமைக்க முக்கிய காரணம். இதனை நிர்வாகம் செய்த கேரளத்தை பூர்வீகமாக கொண்ட வர்க்கீஸ் குரியன், ஏழை மக்களை சுரண்டிய பால் நிறுவனங்களை விரட்டியடித்தார். தற்சார்பான பொருளாதாரத்தை அமுல் நிறுவனம் மூலம் சாத்தியப்படுத்தினார். இந்தியா 75 என்ற வரிசையில் அமுலின் கதை முக்கியமானது. 

இந்தியா இன்று பால் உற்பத்தி துறையில் முக்கியமான நிறுவனமாக உள்ளது. அதுவும் தனியார் நிறுவனங்களை தாண்டி வெற்றித்தடங்களை பதித்துள்ளது. இந்த நிறுவனம் இப்போது பிஸ்கெட்டுகள், பிரெட், சாக்லெட் என பல்வேறு துறைகளிலும் கால் பதித்து வருகிறது. ஆனால் இதற்கான தொடக்கம் என்பது மிக எளிமையாகவே இருந்தது. 

வர்க்கீஸ் குரியன், திரிபுவன்தாஸ் படேல், ஹெச்எம் தலாயா


தற்போதைய ஆனந்த் என்ற இடத்தில் உள்ள கிராமங்களில் இருந்து தினசரி 250 லிட்டர் பாலை கைரா மாவட்ட பால் உற்பத்தியாளர் சங்கம் பெற்று விற்று வந்தது. ஆங்கிலேயர் காலத்தில் ஏகபோக நிறுவனமாக இருந்தது பாய்சன் டைரி என்ற நிறுவனம். இந்த நிறுவனம் பால் உற்பத்தியாளர்களுக்கு மிக குறைந்த விலையை கொடுத்து வந்தது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மனம் நொந்து போய் தங்கள் கஷ்டங்களை சர்தார் வல்லபாய் படேலிடம் சொன்னார்கள். இதன் பின்னர்தான், கைரா மாவட்டத்திலுள்ள சாமர்கா என்ற கிராமத்தில் ஒரு கூட்டம் நடைபெற்றது. இதில் வல்லபாய் படேல், சுதந்திரபோராட்ட வீர ர் திரிபுவன்தாஸ் படேல், மொரார்ஜி தேசாய் ஆகியோர் பங்கு பெற்றனர். இதில் வல்லபாய் படேல் கூறிய யோசனைப்படி கூட்டுறவு உற்பத்தியாளர் சங்கம் அமைக்க முடிவானது. 

கைரா மாவட்டம் முழுக்க பால் விநியோகம் செய்யும் உரிமையை பாய்சன்டைரி நிறுவனம் பெற்றிருந்தது. இதன் ஏகபோக உரிமையை தடுத்து விவசாயிகளுக்கு உதவ, கூட்டுறவு சங்கம் டிசம்பர் 14 , 1946 அன்று பதிவானது. நிறுவனத்தின் தலைவராக திரிபுவன்தாஸ் படேல் இருந்தார். இவர்தான் வர்க்கீஸ் குரியனை இதன் தலைவராக்கி அமுல் என்ற நிறுவனத்தை உருவாக்குவதற்கு முக்கியமான காரணம். இப்போது இவரை திரிபுவன்தாஸ் காகா என்று அழைக்கின்றனர். 

கேரளத்தில் பிறந்த வர்க்கீஸ் குரியன், ஆங்கில அரசின் உதவித்தொகையில் அமெரிக்கா சென்று படித்து வந்தவர். பால்வளத்துறையில் பொறியியல் படித்தார். அரசின் உத்தரவுப்படி குறிப்பிட்ட ஆண்டுகள் அவர் அரசு துறையில் பணியாற்றுவதற்கு உத்தரவானது. அவரது விருப்பம் அணுசக்தி துறை என்றாலும் திரிபுவன்தாஸின் விருப்பப்படி, கூட்டுறவு சங்கத்தை தலைவராக இருந்து வழிநடத்தினார். அவரே கூட எனக்கும் ஒரு கனவுண்டு என்ற நூலில் இதனை விரிவாக எழுதியிருக்கிறார்.  


”என் அப்பாவிற்கு இயற்பியல் துறையில் பணியாற்றவே ஆசை. ஆனால் திரிபுவன்தாஸ் படேலை சந்தித்த பிறகு அவரது வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் கிடைத்ததாக கூறியிருக்கிறார். விவசாயிகளுக்கான சேவகராக அவர் மாறினார். நிறைய முறை தனது சம்பளத்தைக் கூட தியாகம் செய்திருக்கிறார்” என்றார் அவரது மகளான நிர்மலா குரியன். பலருக்கும் குரியன் வாங்கிய சம்பளம் தெரியாது. கடைசி வரை அவர் பெற்ற சம்பளம் ரூ.5 ஆயிரம் மட்டுமே. 

இந்தியா சுதந்திரம் பெற்றபிறகு, பாய்சன் பால் நிறுவனத்துடன் செய்திருந்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது., கைரா கூட்டுறவு நிறுவனத்தை பால் விற்பனைக்கு அரசு தேர்ந்தெடுத்தது. இந்தியாவின் முதல் குடியரசுத்தலைவர் ராஜேந்திர பிரசாத், நவ.15, 1954 அன்று அமுல் நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டினார். 1956ஆம் ஆண்டு அக்டோபர் 31 அன்று நேரு நிறுவனத்தை தொடங்கி வைத்தார். இதுவே வல்லபாய் படேலின் பிறந்ததினமாகும். 

பால் உற்பத்தியை பொறுத்தவரை இந்தியாவில், எருமைப்பாலே அதிகம். எனவே அதிலிருந்து பால் பவுடரை தயாரிக்க நினைத்தார். இதுபற்றிய தொழில்நுட்பத்தை தேடியபோது எங்கும் ஏமாற்றம்தான். நேர்மறையான ஒரு வார்த்தை கூட கிடைக்கவில்லை. ஆனால் இப்படி பால் பவுடரை நாம் தயாரிக்க போகிறோம் என்று பிரதமர் நேருவுக்கு சொல்லியாயிற்று. இப்போது என்ன செய்வது என குரியனும், அவரது பால் உற்பத்தியில் திறமையான ஹெச்எம் தாலயா வும் பதறினர். தாலயா, பாகிஸ்தானில் பால் உற்பத்தியில் ஈடுபட்டு வந்த குடும்பத்தைச் சேர்ந்தவர். பிறகு அதற்கென வழியை கண்டுபிடித்து எருமைப்பாலில் இருந்து முதன்முறையாக பால் பவுடரை உருவாக்கினர். அதுவும் விழா நடப்பதற்கு இருபத்து நான்கு மணிநேரம் முன்னதாக.....

”குரியனும் அவரது சகாவும் கண்டுபிடித்தது முக்கியமான சாதனை. அதுவரை வளர்ந்த பெரிய நாடுகளும் கூட பசுவின் பாலில் இருந்து மட்டுமே பால் பவுடரை தயாரிக்க முடியும் என்று நம்பிக்கொண்டிருந்தனர்” என்றார் அமுலின் தலைவரான ஆர்.எஸ்.சோதி. 

 இவர் , குரியன் உருவாக்கிய கிராம மேலாண்மை கழகம் என்ற நிறுவனத்தில் படித்து வந்த மாணவர் ஆவார். 

கைரா மாவட்டட கூட்டுறவு சங்கம், ஒரு நாளுக்கு ஒரு லட்சம் லிட்டர் பாலை பதப்படுத்தும் திறனைப் பெற்றது. பிறகுதான் அமுல் என்ற பிராண்டில் பால் விற்பனை 1957இல் இருந்து தொடங்கியது. கூட்டுறவு இயக்கம் பிறகுதான் சூரத், வதோதரா, மெக்சனா, சபர்காந்தா ஆகிய ஊர்களிலும் பரவலாகியது. ஆனாலும் இந்தியாவின் பிற மாநிலங்களில் கூட்டுறவு இயக்கம் பெரிதாக வரவேற்கப்படவில்லை. 

1964ஆம் ஆண்டு பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி அமுலின் கால்நடை தீவன தொழிற்சாலையைத் தொடங்கி வைத்தார். அப்போது ஒரு இரவு முழுக்க அங்கிருந்த கிராமத்தில் தங்கியவர், அமுலின் வெற்றிக்கதையை கேட்டறிந்தார். கூட்டுறவு என்பதை மனதில் பதித்தவர், தேசிய பால் மேம்பாட்டு வாரியம் என்பதை அமைக்க உத்தரவிட்டார். இதன் வழியாக ஆனந்த் போல பல்வேறு நிறுவனங்களை மாநிலங்களில் அமைக்க நினைத்தார். இதன் தலைவராக குரியனை நியமித்தார். 

1970ஆம் ஆண்டு பால் வாரியம் தனது பணிகளை தொடங்கியது. பில்லியன் லிட்டர் ஐடியா என்ற பெயரில் தனது திட்டங்களை விரிவாக்கியது. இதன் விளைவாக பால் உற்பத்தியில் தடுமாறிய இந்தியா, இப்போது இத்துறையில் வலுவாக உள்ளது. 

இந்தியாவின் முக்கியமான பால் கூட்டுறவு நிறுவனங்கள்

பஞ்சாப் - வெர்கா

ஹரியானா - வீடா

ராஜஸ்தான் - சரஸ் 

உத்தர்பிரதேஷ் - பாரக்

குஜராத் - அமுல்

மகாராஷ்டிரா - மகானந்த் அண்ட் கோகுல்

மத்தியப் பிரதேசம் - சான்சி

கர்நாடகா - நந்தினி

கேரளா - மில்மா

தமிழ்நாடு - ஆவின் 

தெலுங்கானா - விஜயா

ஆந்திரா - விசாகா

ஒடிசா - ஆம்ஃபெட்

மேற்கு வங்கம் - பென் மில்க்

அசாம் - புராபி

பீகார் - சுதா


பிரசாந்த் ரூபேரா

டைம்ஸ் ஆப் இந்தியா

படம் விக்கிப்பீடியா



கருத்துகள்