சுதந்திரமான பேச்சுரிமையை வலியுறுத்திய பத்திரிகையாளர்களுக்கு நோபல் விருது!

 








பத்திரிகையாளர்கள் மரியா ரெஸா, டிமிட்ரி முரடோவ் ஆகியோருக்கு இந்த ஆண்டிற்கான நோபல் அமைதிப்பரிசு கிடைத்துள்ளது. இவர்கள் இருவரும் பிலிப்பைன்ஸ் மற்றும் ரஷ்யாவில் நடைபெற்ற ஆட்சி முறைகேடுகள், ஊழல்கள் ஆகியவற்றை வெளிப்படுத்தியுள்ளனர். 

சுதந்திரமான பேச்சுரிமைக்காக பாடுபட்டதற்காக மேற்சொன்ன பத்திரிகையாளர்களுக்கு அமைதிப் பரிசு வழங்கப்படுகிறது என நோபல் கமிட்டி கூறியுள்ளது. இந்த பத்திரிகையாளர்கள் பிற பத்திரிகையாளர்களுக்கு முன்னோடியானவர்கள். இவர்கள் ஜனநாயகத்தையும் அதன் மதிப்பையும் காக்க உழைத்துள்ளனர் என இந்த அமைப்பு இதுபற்றிய அறிவிப்பில் கூறியுள்ளது.  

மரியா ரெஸா, 2012ஆம் ஆண்டு ராப்ளர் எனும் இணையதளத்தைத் தொடங்கினார். இதில் பிலிப்பைன்ஸ் அதிபர் டூடெர்டேவின் போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு எதிராக பல்வேறு செய்திகளை இணையத்தளத்தில் வெளியிட்டார். 2018ஆம் ஆண்டிற்கான மனிதராக இவரை அமெரிக்காவின் டைம் பத்திரிகை தேர்ந்தெடுத்தது. 

முரடோவ், 1993ஆம் ஆண்டு ரஷ்யாவில் நோவாயா கெசட்டா எனும் சுதந்திரமான பத்திரிகை ஒன்றைத் தொடங்கினார். இந்த பத்திரிக்கை அதிகாரத்தை கேள்வி கேட்கும் வகையில் பல்வேறு கட்டுரைகளை எழுதி வருகிறது. இவரின் நாளிதழில் பல்வேறு உண்மைகளை அடிப்படையாக கொண்ட கட்டுரைகளை எழுதிவருகின்றனர். 

மரியா ரெசாவைப் பொறுத்தவரை உண்மையை மக்களுக்கு சொன்னதால் அவர்மீது ஏழு வழக்குகள் நீதிமன்றத்தில் அரசால் போடப்பட்டுள்ளன. இப்போது ஒரு வழக்கில் சிறை சென்றுவிட்டு பிணையில் வெளியே  வந்துள்ளார். அதிகாரத்தை எதிர்ப்பதற்கு கொடுக்கும் விலை என்று கூறினார் ரெசா. உலகளவில் சுதந்திரமாக இயங்கும் பத்திரிகைகள் மீது அரசு தொடுக்கும் வன்முறை தாக்குதலுக்கு ரெசாவின் வழக்குகளே உதாரணம். ரெசாவுக்கு வயது 58. பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து நோபல் பரிசு பெறும் முதல் பெண் ரெசாதான். 

முரடோவைப் பொறுத்தவரை அவரது பத்திரிகையில் கட்டுரை எழுதிய பங்களிப்பாளர்கள், செய்தியாளர்கள் பலரும் ரஷ்ய அரசால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அதையெல்லாம் சமாளித்துத்தான் பத்திரிகையை நடத்தி வருகிறார் முரடோவ். செசன்யாவில் நடந்த அரச வன்முறையை எழுதிய முரடோவின் பத்திரிகையைச் சேர்ந்த பத்திரிகையாளர் அன்னா பொலிட்கோவ்ஸ்காவை அரசு கொலை செய்தது. தனது அமைதிப் பரிசை ரஷ்ய அதிபர் புதினை எதிர்க்கும் அலெக்ஸி நாவல்னிக்கு வழங்க விருப்பம் தெரிவித்திருக்கிறார் முரடோவ். தனது பத்திரிகையில் பணியாற்றி அரசால் கொல்லப்பட்ட ஆறு பேர்களுக்கும் நோபல் விருதை அர்ப்பணிப்பதாகவும் கூறினார். 

ஜெர்மனியின் போருக்கு பிறகான ரகசிய  ஆயுத உருவாக்கம் பற்றிய செய்திகளை கார்ல் வோன் ஆசிட்ஸ்கி என்ற பத்திரிகையாளர் வெளியே கொண்டுவந்தார். 1935ஆம் ஆண்டு இவருக்கு நோபல் அமைதிப்பரிசு வழங்கப்பட்டது. முரடோவுக்கு வழங்கப்படும் நோபல் பரிசு ரஷ்யர் ஒருவருக்கு இந்த வகையில் வழங்கப்படும் முதல் விருது. இவருக்கு முன்னர், 1990இல் மிகைல் கார்ப்பசேவுக்கு அமைதி விருது வழங்கப்பட்டது. 1935க்குப் பிறகு நோபல் அமைதிப் பரிசு பத்திரிகையாளர்களுக்கு இப்போதுதான் வழங்கப்படுகிறது. 

டைம்ஸ் ஆப் இந்தியா


 




கருத்துகள்

பிரபலமான இடுகைகள்