தீயவாள் பயிற்சிமுறையைக் கற்க போட்டிபோடும் பேராசைக்காரர்கள்! - தி ஸ்மைலிங் ப்ரவுட் வாண்டெரர்

 


ஸ்மைலில் ப்ரவுட் வாண்டரெர்

சீன தொடர்

மாண்டரின் மொழித்தொடர் தமிழில்..

எம்எக்ஸ்பிளேயர்


தொன்மை சீனாவில் உய், ஓஷன், பௌத்தம் என பல்வேறு மதங்களைக் கடைபிடிக்கும் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் அனைத்து தலைவர்களையும் சந்தித்துப் பேசி முடிவெடுக்கும் திறமை உய் பள்ளிக்கு உண்டு. பிற பள்ளிகள் அனைத்தும் உய் பள்ளித் தலைவரின் கட்டளைகளை கேட்பார்கள். இதன் அனைத்து பள்ளி தலைவர்களும் கலந்துபேசி தங்களது பொது எதிரிகளை சமாளிப்பார்கள். இவர்களது பொது எதிரி, மந்திர சக்திகளை பயன்படுத்தும் அசுரர்கள். இவர்கள் டாபோ எனும் கலையைக் கற்றவர்கள். 

ஒரே பள்ளி ஒரே தலைமை என்ற கொள்கையை உய் பள்ளி தலைவர் எடுக்கிறார். இதற்காக கூலிப்படைகளை அமர்த்தி தனது கொள்கைகளுக்கு ஒத்துவராத பள்ளி தலைவர்களை கொல்கிறார். அவர்களின் பள்ளி கற்றுக்கொடுக்கும் தற்காப்புக்கலை நூல்களையும் திருடி வந்து பயிற்சி எடுக்கிறார். இதெல்லாம் தாண்டி அவருக்கு தீராத வேட்கையை ஏற்படுத்துவது தீயவாள் பயிற்சி எனும் வாள்சண்டை முறை. 

இதனை ஒருவர் கற்றுவிட்டால் பிற வாள்பயிற்சி முறைகளை எளிதாக உடைக்க முடியும். பிரிந்துள்ள பள்ளிகளை ஒன்றாக இணைத்து உய் பள்ளி என்ற பெயரில் அதனை மாற்றிவிட முடியும் என நம்புகிறார். இதற்கு எதிர்ப்பு, ஓஷன் பள்ளி மற்றும் பிற பள்ளிகளிலிருந்து வருகிறது. ஓஷன் பள்ளியின் தலைவர் யூபுக்கன் ஒரு தந்திரமான ஆள். ஆனால் அதை அவர் வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருக்கிறார். அவரது முதன்மை சீடர் லீசாங் எனும் சோங்கர்தான் இந்த டிவி தொடரின் நாயகன். 



நாயகன் என்றால் பயங்கர பில்டப் கொடுத்து அறிமுகமாவார்கள். ஆனால் இந்த டிவி தொடரில் வில்லன்களிடம் ஏராளமான அடிகளையும் வாள் வெட்டு காயங்களையும் நாயகன்தான் வாங்குகிறார். ஏராளமான உள்காயங்கள் ஏற்படுகிறது. கூடுதல் திருப்பமாக வாள் பயிற்சி பள்ளி தலைவர் ஒருவரை கூலிப்படை கொலை செய்ய முயலும்போது தடுக்கிறார். அதில் அவரது முயற்சி வீணாகிறது. தலைவரையும் அவரது மனைவியையும் வெட்டி சாய்க்கிறது கலிப்படை. தலைவரின் முதுகில் லீசாங்கின் வாள் எதிர்பாராமல் குத்திவிட அவரது மகன் லீசாங்தான் துரோகம் செய்து தனது அப்பாவைக் கொன்றுவிட்டான் என வன்மம்  கொண்டு வதந்தியை பரப்புகிறான். 

லீசாங் கூலிப்படையுடன் சண்டை போட்டு தப்பிக்கிறான். ஆனாலும் உள்காயங்கள் அவனை பலவீனமாக்குகின்றன. அப்போது ஐந்து விஷயங்களின் தலைவியை சந்திக்கிறான். அவளைப் பொறுத்தவரை பாம்புகள்தான் முக்கியம். அதற்காக மனிதர்களைக் கொல்லக்கூட தயங்கமாட்டாள். லீசாங்கின் உடலில் நச்சால் பாதிக்கப்பட்ட பாம்பின் விஷத்தை கலக்க செய்கிறாள். இதனால் லீசாங் பாம்புடன் போராடி அதனைக் கொல்கிறான். ஆனாலும் கூட பாம்பின் உடலில் இருந்த விஷம் அவனது உள்ளுறுப்புகளை மெல்ல குளிர்ச்சியாக்கி செயலிழக்க வைக்கத் தொடங்குகிறது. 

இந்த நிலையில்தான் நாயகி உள்ளே வருகிறாள். அத்தை என்று பலரும் அழைக்கும் அவள்தான் டாபோ கலையின் வித்தகரான அசுரர் தலைவரின் மகள் ரின். அவளது தனது சக்தியைப் பயன்படுத்தி லீசாங்கின் உயிரைக் காப்பாற்றுகிறாள். கூடவே பார்வையில்லாத வைத்தியர் ஒருவரும் மருந்துகளை வழங்குகிறார். அசுரர் குலமே அவளை அத்தை என்று அழைத்து மரியாதை செய்கிறது. 

லீசாங் எப்படி தன் மீதுள்ள கொலைப்பழியிலிருந்து வெளியே வருகிறான், அசுரர் குலத்தைச் சேர்ந்த ரின் எதற்கு லீசாங்கிற்கு உதவுகிறாள், ஐந்து விஷங்களின் தலைவி லீசாங்கை பழிவாங்க வந்தாளா, ஓஷன் பள்ளி தலைவர் யூபுக்கன் தனது முதன்மை சீடர் தவறானவன் அல்ல என்பதை புரிந்துகொண்டாரா என்ற கேள்விகளுக்கு 37 எபிசோடுகளைப் பார்த்தால்தான் விடை தெரியும். 

ஆஹா

வேகமான சண்டைக்காட்சிகள் தொடரை பார்க்கலாம் என்ற ஆசையைத் தூண்டுகின்றன. கண் தெரியாத வைத்தியர் பற்றி ட்விஸ்ட் உண்மையிலேயே ஆச்சரியப்படுத்துகிறது. கிழக்கு வீரனின் குணமும் கூடத்தான். 

அண்ணன், தங்கை பாசக் காட்சிகள் சிறப்பாக உள்ளன. பௌத்த மடாலய பெண் தனது காதல் பற்றி அம்மாவிடமே பேசும் காட்சி அழகாக உள்ளது. ரின்னுடன் லீசாங்கைப் பார்க்கும்போதெல்லாம் பெண் துறவி தனக்குள் மருகுவது அட்டகாசம். யூபுக்கன் பற்றிய விஷயங்களை மெல்ல பார்வையாளர்கள் தெரிந்துகொள்வது தொடரின் முக்கியமான திருப்பம்தான். வாள் பயிற்சி பெறும்போது மனநிலை எப்படி இருக்கவேண்டுமென லீசாங்கிற்கு வெள்ளையுடை குரு கூறுவது அனைத்துமே பிரமாதமாக படமாக்கப்பட்டுள்ளது. 

ஐயையோ

லீசாங் பலவீனமாக இருக்கும்போது ரின் அத்தை என்ற பாத்திரப் பெயரில் பலசாலியாக அறியப்படுகிறாள். ஆனால் அவன் வாள்பயிற்சி பெற்றபிறகு, அவளை தொடரின் இயக்குநர் முழுக்க இசைக்கருவிகளை வாசிக்க மட்டுமே பயன்படுத்துகிறார். அது ஏனென்று புரியவில்லை. 

கோபயாஷி எனும் பாத்திரத்தின் தன்மை என்னவென்று பார்க்கும் யாருக்குமே தெரியாது. ஏன் அவருக்கே அப்போது அவரது மூளையில் என்ன ஓடிக்கொண்டிருக்கிறது என தெரியுமா என்று தெரியவில்லை. யூ சாங் காய் என்ற பாத்திரம் கூட திருடன் என நாம் கூறிவிடலாம். ஆனால் கோபயாஷி அப்படியல்ல. மனைவியோடு உடலுறவு கொள்ளக்கூடாது என ஆணுறுப்பை அறுத்துப்போடுகிறார். மனைவி அழும்போது தாங்கமுடியாமல் உடைகிறார். பிறகு விபத்தாக அவரையே வாளால் குத்துகிறார். நம்பிக்கை துரோகம், வருத்தம், கோபம் போன்ற பலவீனமான உணர்ச்சிகளால் காட்சிக்கு காட்சி கீழே சென்றுகொண்டிருக்கும் பாத்திரம் இது.  

உயர்ந்து நிற்கும் வாள்!

கோமாளிமேடை டீம் 


கருத்துகள்