விற்க முடியாமல் நின்றுபோன ஆங்கில மாத இதழின் அச்சுப்பதிப்பு! கடிதங்கள்

 



பௌண்டைன் இங்க் மாத இதழ்


அன்புள்ள முருகு அவர்களுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? 

சென்னை முழுவதும் கொரோனா பீதியில் தவித்து வருகிறது. சானிடைசர், மாஸ்க்,  ஆகியவற்றுக்கு பெரும் தட்டுப்பாடாக உள்ளது. இந்த நேரத்தில் டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகை, வைரஸ், பாக்டீரியா தொற்று நோய்களை மையமாக கொண்ட திரைப்படங்களை தொகுத்து பட்டியலிட்டு செய்தியை வெளியிடுகிறார்கள். விநோதமான மனிதர்கள். 

காய்ச்சல் என்று மருத்துவமனைக்கு போனாலும் குறிப்பிட்ட டிகிரியில் இருக்கவேண்டுமென திருப்பி அனுப்பிவிடுகிறார்கள் என்று செய்தியைப் படித்தேன். அரசு தன் பொறுப்பை இப்படித்தான் செய்கிறது என நண்பர் பாலபாரதி அலுத்துக்கொண்டார். மத்திய அரசு தொற்றுநோய்க்கு எதிராக தயாராக இருப்பதாக கூறினாலும் உண்மையில் பாதிப்பை சரிவர உணரவில்லை என்றுதான் தெரிகிறது. 

பீஷ்மா என்ற தெலுங்குப்படத்தைப் பார்த்தேன். இயற்கை விவசாயத்திற்கும், வேதிப்பொருள் விவசாயத்தை வலியுறுத்தும் நிறுவனத்திற்குமான சண்டைதான் கதை. படம் நெடுக வரும் காமெடிதான் படத்தை பார்க்க வைக்கிறது. 

பௌண்டைன் இங்க் என்ற ஆங்கில மாத இதழின் அச்சுப்பதிப்பு நிறுத்தப்படுகிறது. அந்த இதழ் இனி டிஜிட்டலில் மட்டும்தான் வரும் என கூறிவிட்டனர். அங்கு சென்று எங்கள் இதழின் சீப் டிசைனர் வேலை செய்து வந்தார். ஆங்கிலம் பேசும் ஆட்களுடன் வேலை செய்வதால் அவருக்கு பெருமை தலைகொள்ளாமல் இருந்தது. இனி என்ன செய்வாரோ? முகமே இருளடித்துக்கிடந்தது.  எனக்கு என்னமோ விற்பனை ஆட்கள் சரியில்லை என்றுதான் தோன்றுகிறது. சில மாதங்களுக்கு முன்னர்தான் சிறந்த கட்டுரைக்கான முக்கியமான விருதைக்கூட வாங்கிய பத்திரிகை இது.  சந்தையில் தாக்குப்பிடிக்க முடியவில்லை என்றால் என்ன பிரச்னை என்று தெரியவில்லை. 

நன்றி!

சந்திப்போம்

ச.அன்பரசு

16.3.2020


கருத்துகள்