சாதிரீதியான கணக்கெடுப்பு பயன்களை கொடுக்குமா?

 







மத்திய அரசு சமூக பொருளாதார சாதி கணக்கெடுப்பை எடுக்க வேண்டுமென பீகாரின் நிதிஷ்குமார் குரல் எழுப்பினார். ஆனால் ஒன்றிய அரசு அதுபற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. செப்டம்பர் 23 அன்று மகாராஷ்டிர அரசு இதுபற்றி வழக்கு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தொடுத்துள்ளது. அதாவது,ஒன்றிய அரசு சாதிரீதியான கணக்கெடுப்பை எடுக்க வேண்டுமென மகாராஷ்டிர மாநில அரசு கோரியுள்ளது

2011ஆம் ஆண்டு சாதிரீதியான கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால் இதுபற்றிய தகவல்கள் வெளிப்படையாக மக்களுக்கு அளிக்கப்படவில்லை. ஒருங்கிணைந்த ஜனதாதளம் கட்சி ஒன்றிய அரசு தனது முடிவை பரிசீலனை செய்யவேண்டும் என்று கூறியுள்ளது. இதற்கு ஒடிஷாவின் நவீன் பட்நாயக்கும், ஜார்க்கண்டின் ஹேமந்த் சோரன் ஆகியோர் இதனை ஆதரிக்கின்றனர். பாஜக சாதி ரீதியான கணக்கெடுப்பிற்கு முழுக்க எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மாநில கட்சிகளின் குரல்களை ஆதரிக்கவும் அதிக வாய்ப்பு உள்ளது. 

2011ஆம் ஆண்டு சாதிரீதியான கணக்கெடுப்பு நடத்தப்பட்டாலும் அதுதொடர்பான விவரங்களை ஏன் தர முடியாது, நீதிமன்றம் அரசின் கொள்கை முடிவுகளில் தலையிடக்கூடாது, சாதிரீதியான கணக்கெடுப்புகளை நடத்துவதற்கான கட்டமைப்பு அரசிடம் இல்லை என்பதையும் ஒன்றிய அரசு தனது பதிலாக கூறியுள்ளது. 

2011ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட சாதி ரீதியான கணக்கெடுப்பில் நிறைய பிழைகள் இருப்பதாக ஒன்றிய அரசு கூறியது.இதை சரி செய்ய அன்றைய நிதி ஆயோக்கின் துணைத்தலைவரான அரவிந்த் பனகரியாவை கமிட்டி தலைவராக நியமித்தது. அதற்கு மேல் இந்த கமிட்டி, வேறு எந்த விஷயங்களையும் செய்யவில்லை. கமிட்டியின் உறுப்பினர்கள் தகவல்கள் தொடர்பாக ஒருமுறை கூட சந்திக்கவே இல்லை. 

அப்படியென்ன தவறு நடந்துவிட்டது? சாதிகள், பிரிவுகள் விஷயத்தில் பல்வேறு தவறுகள் உள்ளன. எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவில் அரசு தகவல்படி 494 இருக்கிறது என்று இருக்கிறது. ஆனால் 2011இல் எடுத்த ஆய்வுப்படி மொத்தம் 4,28,677 சாதிகள் உள்ளன என்று தகவல் பதிவாகியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் 10.3 கோடி மக்கள் உள்ளனர் என்றால் அதில் 1.17 கோடிப்பேருக்கு எந்த சாதியும் இல்லை என்று பதிவாகியுள்ளது. 1931ஆம் ஆண்டுப்படி 4,147 சாதிகள் உள்ளன என்றால் 2011ஆம் ஆண்டுப்படி, 46 லட்சம் வேறுபட்ட சாதிகள் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இப்படி ஏராளமான பிழைகள் உள்ளதால் சாதிரீதியான கணக்கெடுப்பு தகவல்களை வெளியிடுவதில் எந்த பயனும் இல்லை என ஒன்றிய அரசு நீதிமன்றத்தில் கூறியிருக்கிறது. 

சாதிரீதியான கணக்கெடுப்பு கிடைத்தால் அதை வைத்து பல்வேறு சாதிகளும் இட ஒதுக்கீடு வாய்ப்பை அரசிடம் கேட்க நினைக்கின்றன. இதற்காக அரசியல் கட்சிகள் ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைத்து வருகின்றன. சாதி அடிப்படையில் சலுகைகளும் , உரிமைகளும் கேட்பதை தடுப்பதற்கான வழிகளை அரசு தேட வேண்டும் என இதனை எதிர்ப்பவர்கள் கூறிவருகிறார்கள். சாதிகளையும், அவர்களின் பொருளாதார நிலைகளையும் ஆய்வு செய்வது முக்கியமானது என சாதிக் கணக்கெடுப்பிற்கு ஆதரவானவர்கள் பேசி வருகிறார்கள். 




தி இந்து ஆங்கிலம்

ஜி சம்பத்

கருத்துகள்