இரண்டு பேர் இரண்டு பேருடனும் காதல்! - கடிதங்கள்

 






பிரிய முருகுவிற்கு....

நலமுடன் திகழ வேண்டுகிறேன். சேட்டன் பகத்தின் நாவல் ஒன்றைப் படித்தேன். அதுபற்றித்தான் இந்த மடல். 


கோபால் மிஷ்ரா, ராகவ் காஷ்யப், ஆர்த்தி பிரதான் என இரண்டு ஆண், ஒரு பெண் என மூவருக்கு இடையிலான உறவுச்சிக்கல்களும், வாரணாசியின் வளர்ச்சி மாற்றங்களும்தான் கதை. இந்த மூவரில் ஒருவர் இதில் நடக்கும் அநீதியைத் தட்டிக் கேட்க எழுகிறார். அவர் வெற்றி பெற்றாரா, எப்படி வென்றார் என்பதை சேட்டன் பகத்தின் ரிவல்யூஷன் 2020 என்ற நாவல் பேசுகிறது. 

நாவலை நீங்கள் வாசிக்கவேண்டியது அவசியம். 

ஒருவரின் புரட்சி குறித்த அறைகூவல் மற்றவரை விழித்தெழச் செய்யலாம. ஒவ்வொருவரும் அவரவர் பங்கை சமூகத்திற்கு தரவேண்டும். அப்படி பங்களித்தால்தான் சமூகத்திற்கு பல  மாற்றங்களைக் கொண்டு வரமுடியும். 

இந்த நாவலில் காதல் என்பது முழுக்க ஆர்த்தி என்ற பாத்திரத்தைச் சேர்ந்தது. ஆர்த்திக்கு, ராகவுடன் காதல் இருக்கும்போது கூட விரக்தியடையும் நேரத்தில் கோபாலுடன் உடலுறவு கொள்கிறாள். மில்லினிய கால வாசகர்களுக்கான நாவல் இது. 

தற்போது வீட்டில் படிக்க கிடைத்த புத்தகம் பூவுலகுதான். வடக்குப்புதுப்பாளையும் ஊர்ப்புற நூலகத்திற்கு படிக்க சென்றேன். உண்மையில் எனது தோற்றம் பற்றிய அறிவை அப்போதுதான் பெற்றேன். நான் யார், எனது பெயர், எங்கே வீடு, யார் எனது அப்பா என ஏகப்பட்ட விசாரணை நடந்தபிறகுதான் இதழ்களைப் படிக்கவே வாய்ப்பு கிடைத்தது. எதற்கு நூலகப் பெண்மணிக்கு இந்த பதற்றம் என்றால் அவர் கழுத்தில் முறுக்காக போட்டிருந்த சங்கிலிதான் காரணம். பிள்ளையார் சதுர்த்திக்கு பிடித்து வைத்து கொழுக்கட்டை போன்ற கொழு கொழு உடல் அமைப்பு அவருக்கு. பாதுகாப்பை பெண்கள் அனைத்து இடங்களிலும் உறுதிப்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள். 

நன்றி!

ச.அன்பரசு


22.2.2013

கருத்துகள்