மாமியார் காமிக்ஸ் கதை சொதப்பல்கள்!
image- sadhguru.org |
எழுதுவதற்கான முயற்சிதான். வேறொன்றுமில்லை.
1
சற்றே பாழடைந்து கருமை பூக்கத் தொடங்கிய மாடிவீடு. மெல்லிய ஒளி ஜன்னலில் தெரிகிறது. படுக்கை அறை. அதில்தான் மேசை விளக்கு மஞ்சள் நிறத்தில் எரிகிறது. அதன் அருகில் புகைப்படம், அலார கடிகாரம், ஸ்மார்ட் போன் வைகப்பட்டுள்ளது. அருகில் படுக்கையில் இருவர் படுத்திருக்கின்றனர். கணவரிடமிருந்து மெல்லிய குறட்டை ஒலி கேட்டுக்கொண்டிருக்கிறது. கவிதா, குறட்டை ஒலியால் தூக்கம் தடைபட்டு அவரின் இடது புறத்தில் புரண்டுகொண்டிருக்கிறாள்.
இன்னும் நீ எந்திரிக்கலையா?
நேரமே எந்திரிச்சாத்தானே புருஷனை வேலைக்கு அனுப்பிவிட்டு குழந்தையை ஸ்கூலுக்கு அனுப்ப முடியும்?
கனவா நிஜமா என குழப்பமாகும் கவிதா எழும்போது அது கனவல்ல என்று தெளிவாகிறாள். இது அதே குரல்தான்.
2
சமையல் அறை, குக்கரில் விசில் அடித்துக்கொண்டிருக்க, கவிதா வேகமாக வேலை செய்துகொண்டிருக்கிறாள். காய்கறிகளை நறுக்கிக்கொண்டிருக்கிறாள். சிங்கில் குழாயிலிருந்து இருந்து நீர் கொட்டிக்கொண்டிருக்கிறது. அப்போது, திறந்த ஜன்னல் வழியாக சூரிய வெளிச்சம் அறைக்குள் வந்து கவிதாவின் முகம் மீது படுகிறது. சூரிய ஒளியை நோக்கி முகத்தை புன்சிரிப்புடன் உயர்த்துகிறாள். அப்போது திடீரென குரல் மட்டும் உக்கிரமாக கேட்கிறது.
வாசலை இன்னும் பெருக்கலையா?
டிகாக்ஷன் போட்டு காபி கலந்து கொடுக்க இவ்வளவு நேரமா?
3
கணவரையும், குழந்தை பத்மினியைக்குமான உணவைத் தயாரித்துக்கொடுத்து அனுப்பி வைத்துவிட்டு கவிதா வேகமாக அலுவலகத்திற்கு தயாராகிக்கொண்டிருந்தாள். ஈரத்தலையை வேகமாக கையில் உலர்த்தியவள், வெள்ளை நிறத்தில் மஞ்சள் பூக்கள் கொண்ட சுடிதாரை உடுத்திக்கொண்டு ஹேண்ட்பேக்கை கையில் எடுத்தாள். அப்போது உள்ளறையிலிருந்து...
காபி கலக்க உனக்கு உங்க வீட்டில் யாரும் கத்துத்தரலியா... குழந்தை சாப்பிட்ட தட்டை அலம்பி வெச்சுட்டு போ...
செஞ்சுட்டேன் மா என பெருமூச்சு விட்டபடியே கதவை சாத்தியபடி கீழிறங்கினாள் கவிதா. பஸ் ஸ்டாப்பை நோக்கி நடக்கத் தொடங்கினாள். தெருவில் கார்கள் சென்றுகொண்டிருந்தன. மாடுகள் மரத்தின் கிளையை எட்டிப் பிடித்து இலைகளை தின்று கொண்டிருந்தன.
4
இரவு மணி ஏழு. பஸ் ஸ்டாப்பில் இறங்கி கவிதா நடந்து வருகிறாள். வீடுள்ள தெருவில் திரும்பியவுடன் , குழந்தையை சைக்கிளில் வைத்து தள்ளியபடி பெண் ஒருத்தி கடந்து போனாள். தூரத்தில் மாணவர்கள் கால்பந்து விளையாடுவது தெரிந்தது.
செருப்பைக் கழற்றிவிட்டு கதவை நீக்கிக்கொண்டு நுழையும்போது, பத்மினி ஹாலில் உட்கார்ந்து கார்ட்டூன் நெட்வொர்க் பார்த்துக்கொண்டிருந்தாள். படுக்கை அறைக்குச் சென்று பையை வைத்துவிட்டு முகத்தை கழுவிட்டு, நைட்டி அணிந்துகொண்டு சமையல் அறைக்குள் நுழையும்போது மீண்டும் குரல் அச ரிரீ போல ஒலித்தது.
குளிச்சுட்டு போட்ட துண்டை சரியா காயப் போடத்தெரியாதா? பொறுப்பா நடந்துக்கோ...
குழந்தைக்கு ஆர்லிக்ஸ் கலந்துகுடுத்துட்டு சமையலைத் தொடங்கு.. சீக்கிரம்
முழு உடலுமே பொம்மலாட்ட பொம்மை போல ஆனதாக தோன்றியது கவிதாவுக்கு...
இந்த அசரீரி குரலுக்கு சொந்தக்காரர் யாரு.. அவர்தான் என் மாமியார்....
ஓவியர் பாலமுருகனின் ஓவியம் ஒன்றைப் பார்த்து எழுதிய கதை இது. சொதப்பிவிட்டது என ஓவியர் கூறிவிட்டார்.
படித்தாலே நன்றாக இருக்கிறது. இதற்கு படம் எதற்கு என கூறிவிட்டார். ஏதாவது புரிகிறதா என படிப்பவர்கள்தான் கூறவேண்டும்.
கருத்துகள்
கருத்துரையிடுக