எங்கெங்கோ செல்லும் பயணத்தின் கதை! கடிதங்கள்
இனிய தோழர் முருகு அவர்களுக்கு, வணக்கம்.
வணக்கம். இதோ இங்கு இன்னும் வெறித்தனமாக பட்டாசு வெடித்துக்கொண்டே இருக்கிறார்கள். காற்று மண்டலம் கற்கண்டாக மாறுகிறது என ரேடியோவில் சொல்லுவார்கள். இங்கு கந்தக மண்டலமாக மாறிவிட்டது. புகை மூட்டத்தில் மூச்சுத் திணறத் தொடங்கிவிட்டது.
தினகரன், விகடன், இந்து தவிர்த்த தீபாவளி மலர்களில் ஆன்மிகம் தூக்கலாக இருக்கிறது என தினமலர் நாளிதழ் கூறியிருக்கிறது. இந்த ஆண்டு தினகரன் தீபாவளி மலரில் வேலை செய்துள்ளது மகி்ழ்ச்சியாக உள்ளது. வாய்ப்பு கிடைத்தால் நூலை வாங்கிப் பாருங்கள். குங்குமத்திலிருந்து சென்றுவிட்ட வெ.நீலகண்டன், கோகுலவாச நவநீதன் ஆகியோரின் இடத்தை முழுமையாக நிரப்ப முடியவில்லை என்பது உண்மை. தீபாவளி மலர் வேலைகளை முடித்தவுடனே அடுத்து பொங்கல் மலருக்கான வேலைகள் இருக்கின்றன. நீங்கள் ஏதாவது புதிதாக படித்தீர்களா? நான் மாதம்தோறும் காலச்சுவடு, தீராநதி இதழ்களை படித்துவிடுகிறேன். இனி புதிய நூல்களை விட பழைய புத்தக கடைகளில் நூல்களை வாங்கலாம் என நினைத்துள்ளேன்.
பயணம் ஒன்று போதாது - தீபன் எழுதிய நூல்தான் அண்மையில் படித்தது. இயற்கை விவசாயம் பண்ணை குறித்த பயணம் என தொடங்கினாலும் காதல், உணவு பற்றிய விஷயங்கள்தான் சால்னா மேல் எண்ணெய்யாக தெரிகிறது. நூலை படித்து முடித்தபிறகு ஆசிரியரின் பெண்களின் மீதான உறவுதான் மனதில் நிற்கிறது. அப்படியே ராவான எழுத்து இதுதான் நூலின் பலமும், பலவீனமும். இதனால் நூல் சிலருக்கு பிடிக்காமல் போகலாம். பிடித்து்ம்போகலாம்.
நன்றி!
சந்திப்போம்!
ச.அன்பரசு
29.10.2016
கருத்துகள்
கருத்துரையிடுக