எதன் கேள்வியைக் கேட்பது சமூகமா, மனமா? - கடிதங்கள்

 







அன்புள்ள முருகு அவர்களுக்கு, வணக்கம். 

நன்றாக இருக்கிறீர்களா? இங்கு பனியும் வெயிலுமாக இருக்கிறது. வரும் ஏழாம்தேதி எங்கள் இதழ் சார்ந்த போட்டி ஒன்று கலைவாணர் அரங்கத்தில் நடைபெற இருக்கிறது. 

அதற்கு நாங்கள் கட்டாயமாக செல்லவேண்டியுள்ளது. அவசியமில்லைதான். ஆனால் அழைக்கிறார்கள். நிகழ்ச்சியில் முழுக்க விற்பனைப்பிரிவு அதிகாரிகள் முன் நிற்பார்கள். அங்கு நாங்கள் எதற்கு? இதற்கு முன்பே ஒரு விழா கோட்டூர்புரத்தில் நடைபெற்றது. நாங்கள் தேமே என்று நிற்கவைக்கப்பட்டோம். முக்கியமான விஷயம், முதலாளி வருகிறார் என்பதுதான்.  ஓல்ட்பாய் என்ற கொரிய படம் பார்த்தேன். படம் பார்த்து அது சொல்லும் விஷயங்களை புரிந்துகொள்வது கடினம்தான். இந்த விஷயத்திலிருந்து வெளியே வருவது சிரமமாகவே இருக்கும். தேவையில்லாமல் ஒருவரின் வாழ்க்கை பற்றி வதந்தி பரப்புவதன் பாதிப்பை ஒருவனுக்கு எப்படி பாதிக்கப்பட்டவன் புரிய வைக்கிறான் என்பதுதான் கதை. அண்ணன், தங்கை, அப்பா, மகள் உறவு அதுபற்றிய உண்மை அறியாமலே காமத்தினால் ஒன்றாக சேர்ந்து ஒன்றாக நொறுங்குகிறது. சமூக விதிகளின்படி வாழ்வதா, மனம் சொன்னபடி வாழ்வதா என்பதுதான் படத்தின் அடிப்படைக் கேள்வி. திகைக்க வைத்து விட்டார்கள். 

இதுபற்றி அலுவலக நண்பர் பாலபாரதியிடம் கேட்டபோது. நான் பொழுதுபோக்காக படம் பார்ப்பவன். இதுமாதிரி கொடூரமான படம் பற்றி பேசாதே என்று சொல்லிவிட்டார். அவரின் மனப்பாங்கு வேறுமாதிரியானது என்பதால் அந்த விவகாரத்தை அதோடு விட்டுவிட்டேன். 

ஹூவெய் மொபைல் நிறுவனம் பற்றி இறுதிப்பகுதியைப் படித்துக்கொண்டிருக்கிறேன். 

நன்றி!

ச.அன்பரசு

5.2.2020

 

கருத்துகள்