உலக நாடுகள் ஆப்கானிஸ்தானில் நடத்தும் அரசியல் விளையாட்டு

 










அரசியல் விளையாட்டு

ஆப்கானிஸ்தானைப் பொறுத்தவரை அங்கு பெரும்பாலான மக்கள் பழங்குடிகள் என்பதால் போர் என்பது எப்போதும் அங்கு நின்றது கிடையாது. நிற்கவும் போவதில்லை. இங்கிலாந்து, ரஷ்யா, அமெரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், சீனா என அனைத்து நாடுகளும் ஆப்கானிஸ்தானை வளைத்து போட முயன்றுகொண்டே இருக்கின்றன.இதனை நேரடியாக, மறைமுகமாக என இரண்டு வகையாகவும் கூறலாம். 

இப்போது அதைப் பற்றி சில தகவல்களைப் பார்ப்போம். 

அமெரிக்கா

அமெரிக்க மக்களைப் பொறுத்தவரை இனி அவர்களின் வரிப்பணம் போருக்கு என்று செலவிடப்படாது. அந்நாட்டின் பொருளாதார நிலைமை இப்போது சரியில்லை. இந்த வகையில் அமெரிக்க அதிபர், அடுத்த ஆபரேஷன் நமக்குத்தான் என்று சொல்லி பின்வாங்கியது நல்ல விஷயம்தான். அமெரிக்காவை தளமாக கொண்டு தீவிரவாதிகள் இயங்கிய நிலை இனி இருக்காது என அமெரிக்கா நம்புகிறது. இதனை ஆப்கானிஸ்தானை சுற்றியுள்ள நாடுகளே கூட நம்பாது. உலகின் சூப்பர் போலீஸ் நாடான அமெரிக்கா, இதனை நம்புகிறது. அதோடு அதன் பெருமைமிக்க அந்தஸ்து இருபது ஆண்டு போரில் தோற்று பின்வாங்கியதோடு முடிவுக்கு வந்துவிட்டது. பின்லேடனை அழித்தது மட்டுமே சாதனை என அமெரிக்கா சொல்லிக்கொள்ளலாம். அதன் பழைய எதிரியான அல்கொய்தா திரும்ப ஆப்கானிஸ்தானில் தனது வேலைகளை தொடங்கியிருக்கிறது. 

ரஷ்யா 

180 ஆண்டுகளாக  காத்திருக்கிற நாடு. ஆர்சிபியின் கோலி ஐபிஎல் கப் அடிக்க துடிப்பது போல ஆப்கானிஸ்தான் எனக்குத்தான் என அடம்பிடிக்கிற நாடு ரஷ்யா. தனக்கான பலாபலன்களோடு நட்பு நாடுகளுக்கு ஏற்படும் பாதிப்புகளையும் தடுக்க ஆப்கானிஸ்தானை கேடயமாக பயன்படுத்த ரஷ்யா நினைத்தது. அமெரிக்கா இருபது ஆண்டுகளாக முக்கி முனகி தோற்றுப்போய் வெளியேறியதை பார்ட்டி வைத்து கொண்டாடாமலும் சந்தோஷப்படும்  நாடு ரஷ்யாதான். காபூலில் தனது தூதரகத்தை திறந்து வைத்துக்கொண்டு கமுக்கமாக அரசியல் நிலையைக் கவனித்து வருகிறது. 

சீனா

தனக்கான ஆதாயங்களை மட்டுமே குறிவைத்து கடன் கொடுத்து நாடுகளை மடக்கும் தந்திரக்கார நாடு. ஆப்கானிஸ்தான் மக்களைப் பற்றியெல்லாம் கவலை கிடையாது. அங்குள்ள மண்ணில் நிறைந்துள்ள கனிம வளங்களை வாரிசு இல்லாத சொத்தை ஆட்டையைப் போடுவதும் போல கொள்ளையடிக்க கட்டம் கட்டி வருகிறது. ஷின்ஜியாங்கில் ஓரண்டு இழுக்கும் உய்கூர் மக்களை எப்படியாவது ஆப்கானிஸ்தான் ஓரமாக முகாம்களை அமைத்து தங்க வைத்துவிடும் திட்டம் கூட சீன டிராகனின் மனதில் இருக்கலாம். 

இரான்

1998இல் ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தில் இருக்கும்போது இரானிய அதிகாரிகளை தாலிபன்கள் கொலை செய்தனர். இருந்தாலும் ஆப்கானிஸ்தானின் மீது இரான் நேசம் காட்ட அங்கு கிடைக்கும் வர்த்தக சந்தை முக்கியமான காரணமாக உள்ளது. எரிபொருள் தவிர்த்த பிற பொருட்களை ஆப்கனில் சிறப்பாக விற்கிறது. இதற்காக தொகையை ரொக்கமாகவே பெறுகிறது. இதன் காரணமாக, அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தாலும் கூட இரானுக்கு பாதிப்பில்லாத வருமானம் ஆப்கனிலிருந்து கிடைக்கிறது. ஆப்கனில் அரசியல் நிலைமை சீராக இருந்தால்தான், சாபார் துறைமுகத்தை வைத்து தனது பொருட்களை இந்தியாவில் வணிகம் செய்ய முடியும். இதற்காவே ஆப்கன் மீது கவனம் குவிக்கிறது இரான் அரசு. 

கத்தார்

இந்த அரபு நாட்டின் வழியாகவே முன்னர் பல்வேறு அதிகாரம் சார்ந்த பேச்சுவார்த்தைகளை நடத்தினர். இப்போது தாலிபன் வந்தபிறகு அவர்கள் அவர்களுக்கான வழியில் பேச்சுவார்த்தைகளை நடத்துகின்றனர். 

துர்க்மெனிஸ்தான்

ஆப்கானிஸ்தான் நாட்டுடன் 800 கி.மீ. தொலைவுள்ள எல்லையை பகிர்ந்துகொள்கிற நாடு. தாலிபன்களோடு எந்த பிரச்னையும் கிடையாது. ஆனால் எரிபொருளை கொண்டுவரும் குழாய் ஆப்கானிஸ்தான் வழியில் வருவதால் சற்று பதற்றமாக இருக்கிறது. எனவே, ஆப்கனில் அரசியல் நிலைமை சீரானால் பெருமூச்சுவிடும் முக்கியமான நாடு துர்க்மெனிஸ்தான். 

உஸ்பெகிஸ்தான்

ஆப்கானிஸ்தான் நாட்டுடன் உஸ்பெகிஸ்தானுக்கு 144 கி.மீ. தொலைவுக்கு எல்லை பகிர்வு உண்டு. ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சிக்கு வந்ததால், அங்குள்ள மக்கள் இந்த நாட்டுக்கு அகதியாக வருவது அதிகரித்து வருகிறது. தாலிபன்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், உஸ்பெகிஸ்தான் நாடுகளுக்கு இடையில் ரயில் பாதை அமைக்கும் திட்டம் ஆலோசனையில் இருந்தது. இனி, இந்த திட்டம் நிறைவேறுவது தாலிபன்களின் கையில் உள்ளது. 

தஜிகிஸ்தான்

ஆப்கானிஸ்தானோடு எல்லைப் பகிர்வு 1300கி.மீ உள்ளது. முக்கியமான விஷயம், இங்கு ரஷ்யாவின் மிகப்பெரிய ராணுவத்தளம் அமைந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள மக்கள் தொகையில் 25 சதவீதம் பேர் இங்கு வாழ்கின்றனர். 

இந்தியா

பெரிய ஏமாற்றத்தை சந்தித்துள்ள நாடு, இந்தியா. வெளியுறவுத்துறை சார்ந்த தோல்வி என்றுதான் சொல்லவேண்டும். அமெரிக்கா இருபது ஆண்டுகள் போராடி தோற்று ஓடியதால், அதனை நம்பி அங்கு செய்த முதலீடுகள் அனைத்தும் இந்தியாவுக்கு விரயம்தான். இனி பாகிஸ்தான், சீனா இணைந்து செயல்பட்டு ஆப்கானிஸ்தானை இந்தியாவுக்கு எதிரான களமாக மாற்றலாம். ஆப்கனில் போதைப்பொருட்கள் வேறு ஏகபோகமாக இருப்பதால், அதனை எளிதாக இந்தியா வழியாக பிறநாடுகளுக்கு கடத்தும் வாய்ப்பு உள்ளது. சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், இரான், பாகிஸ்தான் ஆகிய நாடுகள் தமது சுயநலன்களுக்காக ஒன்றாக சேர்ந்தாலும் இந்தியாவுக்கு பிரச்னைகள் தொடங்கிவிடும். ஏறத்தாழ கற்ற அனைத்து ராஜ தந்திரங்களும் வீணாகிவிட்டதே என்று வருத்தப்பட வேண்டிய நிலை. 

டைம்ஸ் ஆப் இந்தியா 


 





 



கருத்துகள்