எழுதுவதில் வேகத்தோடு தரமும் முக்கியம்! - கடிதங்கள் 2021

 






13.2.2021

அன்புள்ள ஆசிரியர் கே.என்.சிவராமன் அவர்களுக்கு, 

வணக்கம். 

நலமாக இருக்கிறீர்களா? 14ஆம் தேதி சந்திப்பிற்காக பலகாரம் வாங்கி வைத்திருந்தேன். உங்களுக்கு முன்னமே குறுஞ்செய்தி அனுப்பியது நல்லதாகிவிட்டது. ஆபீசில் வேலைக்கு வந்து ஏழு நாட்கள் ஆகிவிட்டது. திரும்ப மென்பொருட்கள் பிரச்னை, பாஸ்வேர்டுகள், கட்டுரைகளை எழுதுவது, டெட்லைன் சிக்கல்கள் என வந்துகொண்டிருக்கின்றன. கோ ஆர்டினேட்டராக வேலைகளை ஒருங்கிணைத்தபோதும் எழுதவே நினைத்திருக்கிறேன். இறை அருளால் பத்து மாதத்திற்குப் பிறகு அந்த பொறுப்பிலிருந்து விலக்கப்பட்டது நிம்மதியாக இருக்கிறது. இனி எழுத்தை கவனிக்கலாம்.

கட்டுரை எழுதுவதை விட அதனை செம்மையாக்குவதற்கு இன்னும் மெனக்கெட வேண்டும் என்பதை புரிந்துகொள்ளத் தொடங்கியுள்ளேன். பாலபாரதி சார், உன்னுடைய எழுத்து இன்னும் கொஞ்சம் கூட மாறவேயில்லை என்று முகத்துக்கு நேராகவே சொல்லிவிட்டார். எனவே தற்போது எழுதிவரும் கட்டுரைகளில் பத்திகளுக்கு இடையில் தொடர்பிருக்கிறதா என்று சரிபார்த்து வருகிறேன். இந்த நேரத்தில் நான் எழுதிய அரைகுறை ஐடியாக்களைக் கொண்ட கட்டுரைகளை பதிப்பித்த உங்கள் நினைவுகூர்கிறேன். நன்றி சார். 

என் அம்மாவைத் தவிர என் மேல் நம்பிக்கை வைத்தவர்கள் இருவர். முன்னாள் குங்குமம் ஆசிரியரான தி. முருகன், அடுத்து நீங்கள்.  நீங்கள் ஓராண்டு இதழில் எழுதுவதற்கு வாய்ப்பு கொடுத்தீர்கள். நீங்கள் நினைத்தளவு கட்டுரைகளை எழுதிப் பழகினேனா என்று தெரியவில்லை. ஆங்கில நூல்களை கொஞ்சம் முன்னதாகவே வாசிக்க முயன்றிருக்கவேண்டும். தங்கியிருந்த இடம் காரணமாக மனம் நிலையாகவே இல்லை.  எழுத்திலும் அந்த தடுமாற்றம் வெளியே வந்துவிட்டது. வேகத்தோடு தரமும் வரவேண்டுமென பா.ரா கூறியிருந்தார். அதனை பின்பற்ற முயற்சிக்கிறேன். உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது சொல்லுங்கள். சந்திப்போம். 

நன்றி!

ச.அன்பரசு

 



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்