மனிதர்கள் இறந்துவிடுவார்கள் ஆனால் பணம் சாசுவதமானது! - கடிதங்கள்

 





15.2.2021

அன்புள்ள ஆசிரியருக்கு, வணக்கம். 

நலமாக இருக்க இறையைப் பிரார்த்திக்கிறேன். ஊரில் இருக்கும்போது சொந்தக்காரர்களின் வீட்டுக்குச் சென்றேன்.  கிடையில் விழுந்துவிட்ட டெய்லர் மாமா, சித்தப்பா வீட்டு ஆத்தா ஆகிய இருவரையும் நேரில் சென்று பார்த்தேன்.  ஆத்தாவுக்கு இடுப்பில் வலுவில்லை. கால்கள் வலுவில்லாத நிலையில் கண்களில் மட்டும் ஒளி தெரிந்தது. தன்னைப் பார்க்க வந்தவர்கள் மிகவும் பிரயத்தனம் செய்து அடையாளம் கண்டனர். கிளம்பும்போது கையெடுத்து கும்பிட்டதை மறக்கவே முடியாது. திரும்ப அவர்களது இறப்பிற்கு நான் ஊருக்கு வரமாட்டேன் என்று நினைக்கிறேன். 

நினைவுகள் மங்கி, யாரென்றே தெரியாத நிலையில் ஒருவரைப் பார்த்து இறைஞ்சுவது போல கையெடுத்து கும்பிடும் நிலை பரிதாபமாக இருக்கிறது. இன்னொரு மரணத்தைப் பற்றி சொல்லவேண்டும். பெரிய மாமன் கந்தசாமி, பிரஷர் கூடி மாரடைப்பு வந்து செத்துப்போனார். ஆடு மேய்க்கப்போனபோது நெஞ்சுவலி வந்து இறந்துபோயிருக்கிறார். அவரது வீட்டிலுள்ள மனைவி, மகன்கள் என எல்லோருக்குமே தேவையானதை செய்துவிட்டார். எனவே, அவர்கள் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. 

25 ஆண்டுகளாக அவரது தங்கையான எனது அம்மாவிடம் ஒருவார்த்தை பேசாதவர். தான், தனது, தனக்கு என்றே முழுக்க வாழ்ந்துவிட்டு போய்விட்டார். அவரது மனதில் என்ன பாரமோ, சோகமோ. மனிதர்கள் இறந்துபோய்விடுவார்கள். ஆனால் பணம் காசு சாசுவதமாக இருக்கும் என நம்பினார். அப்படியேதான் வாழ்ந்தார். மூன்றுபேருக்கு சொந்தமான நிலங்களை தனக்கு மட்டுமே சொந்தமாக்கிக் கொள்ள நினைத்தார். ஆனால் அதற்கெல்லாம் காலம் காத்திருக்கவில்லை. அவரது சீட்டை எடுத்துவிட்டது. 

சமூக தொழிலதிபர் நூலை உங்களுக்கு அனுப்பி வைத்தேன். என்னால் தொழில் பற்றி எழுத முடியும் என்பதை முதலில் நீங்கள்தான் கண்டுபிடித்தீர்கள். குங்குமத்தில் என்னால் எழுதும் தன்னம்பிக்கை கூடி வரவில்லை. அதனால் என்ன, பட்டத்தில் சில கட்டுரைகளை எழுதியிருக்கிறேன். சமூக தொழிலதிபர் நூல் படிக்க எப்படியிருக்கிறதென எனக்கு தெரியவில்லை. எழுத்தை மேம்படுத்த வேண்டிய தேவை உள்ளது என நினைக்கிறேன். 

சுலேகா என்ற காந்திக்கு இங்க் தயாரித்து கொடுத்த கம்பெனி பற்றிய செய்தியை எக்ஸ்பிரஸில் படித்தேன். நன்றாக இருந்தது. இந்த நிறுவனம் இப்போது மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது. ஆனால் அனைத்துமே பல்க்காகத்தான் விற்கிறார்கள். 

நன்றி!

ச.அன்பரசு 



கருத்துகள்