மக்களுக்காக போராடி அவர்களின் தலைவரான பெண்மணி! - கடிதங்கள்

 




newslaundry


அன்புள்ள ஆசிரியருக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா?

மம்தா பற்றிய நூலை படித்து முடித்துவிட்டேன்.  மம்தா பிறந்து வளர்ந்த சூழல், கல்லூரி கால மாணவி, பின்னாளில் தலைவராவது, போராட்டங்கள், அரசியல் கட்சி தொடங்கிய பிறகு ஏற்பட்ட மாற்றங்கள்  என பல்வேறு விஷயங்களை புள்ளிவிவரங்களோடு நூலாசிரியர் எழுதியுள்ளார். மம்தாவே தனது பணிகளைப் பற்றி எழுதியுள்ள நூலை வாங்கியிருக்கலாம் என தாமதமாக நினைத்தேன். வாய்ப்பு கிடைத்தால் அதனை ஆன்லைனில் தான் வாங்க வேண்டும்.

அவரது திரிணாமூல் காங்கிரஸ் கட்சி, அதிமுக கட்சியை ஒத்துள்ளதாக படுகிறது. இளமைப் பருவம், அரசியலுக்குள் மம்தா நுழைவது, அரசுக்கு எதிரான போராட்டம் ஆகிய பகுதிகள் படிக்க சுவாரசியமாக இருந்தன. உணர்ச்சிகரமாக மக்களுக்காக போராடியவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வரானது பெரிய சாதனைதான்.

தாயிடம் குழந்தை கவன ஈர்ப்பிற்காக சில விஷயங்களை செய்யும் இல்லையா? அதுபோல குணம் கொண்டவர்களை சமாளிப்பது கடினமாக இருக்கிறது. நீங்கள் கூறியபடி அனைவரையும் நண்பர்களாக்கிக் கொள்வது எனக்கு சாத்தியமாக தோன்றவில்லை. காலையில் குட்மார்னிங் சொல்லவில்லை என்று எனது அலுவலக சகா கோபப்படுகிறார். தான் சீனியர் என்பதை அத்தனை பேருக்கும் சொல்லிக்கொண்டே இருக்கிறார். நேரடியாகவும் மறைமுகமாகவும் இப்படி நடந்துகொண்டே இருக்கிறது. நான் அவருக்கு எந்த பதிலும் கூறவில்லை. 

இதழுக்கு இனி நானே தேர்ந்தெடுத்த செய்திகளை எழுதுவது இனி சாத்தியமில்லை. முதலிலேயே செய்திக்கட்டுரைகளுக்கான ஐடியாவை ஆசிரியரிடம் கூறிவிட்டு, பிறகு அனுமதி கிடைத்த பிறகு எழுதவேண்டும். உத்தரவு வந்திருக்கிறது. எனவே, இனிமேல் கட்டுரைகளை சேர்த்து வைக்க முடியாது. 

டிஸ்கவரி ஆப் இந்தியா நூலை வரிசைக்கிரமமாக படிக்க முயன்றேன். முடியவில்லை. குங்குமத்தில் ஷாலினி நியூட்டன் மேம் எழுதும் நான் தொடர் நன்றாக இருக்கிறது. அவரிடம் எனது வாழ்த்துகளை சொல்லிவிடுங்கள். 

நன்றி

ச.அன்பரசு

  


கருத்துகள்