சாதனைப் பெண்கள்- ஆட்சியிலும் சமூக முன்னேற்றத்திலும் பங்களித்த பெண்கள்
மரியா க்யுட்டெரா டி ஜீசஸ்
பிரேசில் நாட்டு சுதந்திரப் போராட்டத்திற்கு உழைத்த துணிச்சல் நாயகி
மரியா, அவருடைய அப்பாவின் பண்ணையில்தான் வளர்க்கப்பட்டார். இதனால் அவருக்கு குதிரை சவாரி, விலங்குகளை வேட்டையாடுவது எளிதாக கைவரப்பெற்றது. மேலும் ஆயுதப்பயிற்சியும் எடுத்தார். பிறகுதான் சுதந்திரப் போராட்டத்தில் இணைந்தார். இப்போராட்டம் 1822 – 1824ஆம் ஆண்டு நடைபெற்றது.
அன்றைய காலத்தில் ராணுவத்தில் இணைந்து போரிட்ட முதல் பெண் இவர்தான். போர்ச்சூகீசியர்களுக்கு எதிராக போரிட்டவர், அவர்கள் பதுங்கும் இடங்களை கண்டுபிடித்து துணிச்சலாக தாக்கினார். இவரை பிரேசிலின் ஜோன் ஆப் ஆர்க் என்று அழைத்தனர். ஆண்களைப்போலவே ஆடை அணிவது இவரது பாணி.
இவர் இறந்து நூறு ஆண்டுகளுக்குப் பிறகு பிரேசில் ராணுவத்தில் மரியா பெயரில் தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டது.
ராணுவ சேவைக்காக இம்பீரியல் ஆர்டர் எனும் விருது வழங்கப்பட்டது. 1825ஆம் ஆண்டு பிரிட்டன், போர்ச்சுக்கல் ஆகிய இருநாடுகளும் இணைந்து பிரேசிலுக்கு சுதந்திரத்தை வழங்கின.
2
டோலரெஸ் இபாருரி
சமூக செயல்பாட்டாளர்
அனைவருக்கும் இளம் வயதில் மனதில் வரும் கேள்விதான் இபாருரிக்கும் வந்தது, நாம் அதை புறக்கணித்திருக்க அதிக வாய்ப்புகள் உண்டு. இவர் புறக்கணிக்காமல் அதற்கான விடைகளை தேடினார். அதுபற்றிய விஷயங்களை பிறருடன் பகிர்ந்துகொள்ள லா பாசினாரா என்ற பெயரில் எழுத தொடங்கினார். பிறகு ஸ்பானிஷ் இடது சாரி கட்சியில் இணைந்நார். அனைத்து சொத்துக்களும் மக்களுக்கானதே. சொத்துக்களை மக்கள் பகிர்ந்து வாழ வேண்டும் என்பதே இபாருரியின் கொள்கை.
ரஷ்யாவில் புகலிடம் தேடி இருந்தபோது லெனின் அமைதிப்பரிசை இவருக்கு லெனின் தலைமையிலான அரசு வழங்கியது.
1936ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டில் உள்நாட்டுப் போர் வெடித்தது. அதில் இடதுசாரிகளுக்கு ஆதரவாக இபாருரி களமிறங்கி பேசினார். அவர்களை வெல்ல விடக்கூடாது என்ற சுலோகனை தனது பேச்சில் விதைத்தார். அதுதான் இடதுசாரிகளை போரில் ஊக்கமுடன் செலுத்தியது. ஆனால் போரில் இடதுசாரிக்ள் தோற்றவுடன், கம்யூனிச ரஷ்யாவுக்கு புகலிடம் தேடிச்சென்றார். 1977ஆம் ஆண்டு வரை அங்கு இருந்தார். பிறகு ஸ்பெயினுக்கு வந்தவர், நாடாளுமன்ற உறுப்பினராக செயல்பட்டார். தனது இறப்புவரையில் இடதுசாரி கருத்துகளை பேசி வந்தார். 1989ஆம் ஆண்டு இவர் மறைந்தார்.
போர் என்றால் ஆண்களின் வீரத்திற்குத்தான் இடம் என்று பலரும் நம்பிய காலத்தில் தனது உறுதியான குரலை வெளிப்படுத்தினார் இபாருரி. இதனால் முக்கியமான இடதுசாரி தலைவராக வரலாற்றில் இடம்பெற்றுள்ளார்.
3
எலினார் ரூஸ்வெல்ட்
1884ஆம் ஆண்டு வசதியான குடும்பத்தில் எலினார் பிறந்தார். பத்து வயதாக இருக்கும்போது பெற்றோர் மறைந்துவிட அனாதையானார். பிறகு தனது 15ஆவது வயதில் இங்கிலாந்தில் உள்ள ஆலன்ஸ்வுட் அகாடமியில் படிக்க அனுப்பிவைக்கப்பட்டார். அங்கிருந்த தலைமை ஆசிரியர் எலினாரை சுயமாக யோசிக்கும் பெண்ணாக வளர்த்தெடுத்தார்.
சிறுவயதில் எலினார் பக்திப் பூர்வமாகவும், கூச்ச சுபாவம் கொண்ட பெண்ணாகவும் இருந்தார். இதனால் அவரது அம்மா, அவரை பாட்டி என்ற கிண்டல் செய்துவந்தார்.
1905ஆம் ஆண்டு எலினார் ஃபிராங்களின் ரூஸ்வெல்டை திருமணம் செய்துகொண்டார். 1933ஆம் ஆண்டு பிராங்களின் அமெரிக்க அதிபரானார். அதிபரின் மனைவி என்ற பெருமையை எலினார் பெற்றார். பெண்களின் உரிமை, இளைஞர்களின் பிரச்னைகள் ஆகியவற்றை பத்திரிக்கையாளர்களிடம் தொடர்ச்சியாக பேசி வந்தார். மேலும் பத்திரிகையில் மை டே என்ற தலைப்பில் பத்தி ஒன்றையும் எழுதி வந்தார்.
ஐ.நாவின் மனித உரிமைகள் அமைப்பின் முதல் தலைவர் எலினார்தான். 1946ஆம் ஆண்டு இப்பதவியை ஏற்றார். பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து உலக நாடுகளில் மனித உரிமைகளை அமல்படுத்த பல்வேறு நடவடிக்கைகளைத் தொடங்கினார். இதன் விளைவாக அமெரிக்காவில் வாழும் அனைத்து மக்களுக்கும் ஒரேவிதமான உரிமைகள் என்ற கொள்கைகளை எலினார் உருவாக்கினார்.
ஊடக சந்திப்பில் ஆண் பத்திரிகையாளர்களை எலினார் அனுமதிக்கவில்லை. இதன் விளைவாக ஊடகங்கள் பெண்களை அதிகளவு பத்திரிகைகளில் வேலைக்கு எடுக்கவேண்டும் என்று தனது செயல்பாட்டுக்கு காரணம் சொன்னார்.
அதிபர் கென்னடி கேட்டுக்கொண்டதால் பெண்கள் அமைப்பின் தலைவராகவும் செயல்பட்டார். அவர் இறக்கும்வரை அதாவது 78 வயது வரையிலும் தனது பத்திரிக்கை பத்தியை எழுதி வந்தார். கூடவே வானொலி, டிவி ஆகியவற்றிலும் பேசினார். தனது செயல்பாடுகள் தொடர்பாக நூல்களையும் எழுதியுள்ளார். ஃபர்ஸ்ட் லேடி ஆப் தி வேர்ல்ட் என்று அழைக்கப்பட்ட பெருமை உடைய பெண்மணி இவர்தான்.
3
இந்திராகாந்தி
இந்தியாவுக்கான இரும்பு பெண்மணி
முதல் பெண் பிரதமராக இந்தியாவின் தலைமைப் பொறுப்பில் சாதனைகளை படைத்தார். நாட்டை ஊக்கம் கொண்ட நாடாக மாற்றினார்.
நேரு, கமலா தம்பதியினருக்கு 1917ஆம் ஆண்டு பிறந்தார் இந்திரா. பிரிட்டிஷாருக்கு எதிராக நேரு பல்வேறு சுதந்திரப் போராட்டங்களில் பங்கேற்றார். இந்திரா தனது வயது ஒத்த சிறுவர்களுடன் சேர்ந்து போஸ்டர்களை தயாரித்து ஒட்ட உதவினார். வீட்டிலேயே ஆசிரியர்கள் மூலம் கல்வி கற்றார். பிறகு ஐரோப்பாவுக்கு சென்று கல்வி கற்றார். 1942ஆம் ஆண்டு ஃபெரோஸ்காந்தியை மணம் செய்தார்.
1947ஆம் ஆண்டு இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்து நேரு முதல் பிரதமராக பதவியேற்றார். அதற்கு முன்னர் இந்திரா, நேருவுடன் கட்சிப்பணிகளை செய்துள்ளார். பிறகுதான் காங்கிரஸ் கட்சியின் தலைவரானார். நேரு மறைந்தபின்னர். காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்றார். கட்சி மூலமாக 1966ஆம் ஆண்டு இந்திரா பிரதமரானார்.
பிரிட்டிஷ் பிரதமரான மார்க்கரேட் தாட்சருடன் மரியாதைக்குரிய நட்பை இந்திரா பேணி வந்தார்.
இந்தியாவை தன்னிறைவு பெற வைக்க பசுமைப் புரட்சி திட்டங்களை தொடங்கி வைத்தார். இதன்மூலம் உணவு உற்பத்தி அதிகரித்து வேலைவாய்ப்புகளும் பெருகின. 1971ஆம் ஆண்டு பாகிஸ்தானில் மேற்கு மற்றும் கிழக்கு புறங்களில் உள்நாட்டுப்போர் வெடித்தபோது, கிழக்கு பாகிஸ்தானை இந்திரா ஆதரித்தார். இதன் காரணமாகவே வங்கதேசம் தனி நாடாக உருவானது.
இந்திராகாந்தி பிரதமராகும் முன்னரே தகவல்தொடர்புத்துறை அமைச்சராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
இந்திராகாந்திர நான்கு முறை பிரதமராக பதவி வகித்துள்ளார். நான்காவது முறை பிரதமராக பதவி வகித்தபோது, தனது மெய்காப்பாளர்களால் சுடப்பட்டு கொல்லப்பட்டார். இதற்கு சீக்கிய கோவிலில் ராணுவம் நடத்திய தாக்குதலே காரணம் என்று கூறப்பட்டது.இந்திரா இறந்தபிறகு, அவரது மகன் ராஜீவ்காந்தி பிரதமரானார்.
பசுமை புரட்சி, மக்கள் தொகை கட்டுப்பாடு, வங்கிகள் தேசியமயம் என பல்வேறு திட்டங்களை உருவாக்கினார்.
கருத்துகள்
கருத்துரையிடுக