குடும்ப வறுமையைத் தீர்க்க கள்ளநோட்டு அடிக்கும் புற்றுநோய்க்குள்ளான ஏழை அச்சகத் தொழிலாளி!
நோ வே ஃபார் ஸ்டூமர்
சீன டிராமா
24 எபிசோடுகள்
ஐக்யூயி ஆப்
இந்த தொடருக்கு எட்டு பாய்ண்டுகள்தான் ரேட்டிங்காக கிடைத்திருந்தது. ஆனால் தொடரின் போஸ்டர் ஈர்ப்பாக தெரிந்தது. மோசமில்லை. மெதுவாக நகரும் சாகச வகை தொடர். பாத்திரங்கள் சிறப்பாக எழுதப்பட்டுள்ளன. இது சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவான படம்தான். ஆனால் கதையின் போக்கில் நாடு, தேசியவாதம், நன்மை, தீமை என்பதெல்லாம் அடிபட்டு போய்விடுகிறது. இறுதியாக தொடர் முடியும்போது நமக்கு எஞ்சுவது, கும்பலாக ஆயுதங்களை வைத்து ஒரு கூட்டம் செய்வது நியாயம், அவர்கள் கூறுவது நீதி. ஆயுதம் இல்லாமல், பிறரை கொல்ல மனமில்லாதவன் பலவீனமாக உள்ளான். அவன் தன்னை மிரட்டும் கொள்ளைக்கார, பேராசைக்கார கூட்டத்திற்கு பயப்படுகிறான். வலி பொறுக்கமுடியாமல் எதிர்த்து அடிக்கும்போது அவனை அதிகார வர்க்கம் கண்டிக்கிறது. ஆனால் முன்னர் அநீதியாக அவன் தண்டிக்கப்படும்போது அமைதியாக இருக்கிறது. ஏன்?
அந்த கேள்விதான் தொடரைப் பார்த்து முடிக்கும்போது ஒருவருக்கு தோன்றுகிறது.
எந்த பதிலும் இல்லை.
லிஷான் என்ற நகரம் உள்ளது. அங்கு கள்ளநோட்டு புழக்கத்தில் உள்ளது. அதை யார் அச்சிடுகிறார்கள். புழக்கத்தில் விடுகிறார்கள் என காவல்துறை கண்டுபிடித்து தடமறிய முயல்கிறது. கள்ளநோட்டு கும்பலின் ஆட்கள் சட்டென இறந்துவிட காவல்முறை முட்டு்ச்சந்தில் நிற்கிறது. கிடைத்த சொற்ப தடயங்களை வைத்து குற்றவாளிகளை எப்படி பிடித்தார்கள் என்பதே கதை.
மாஸ்டர் நைன் என்பவர் கள்ளநோட்டு கும்பலின் தலைவர், அயல்நாட்டில் வசிக்கிறார். அதாவது தொடரில் கூறுகிறபடி வைத்துக்கொண்டால், ஆற்றுக்கு அந்தப்பக்கம். அங்கிருந்து ஆட்களை அனுப்பி லிஷான் நகரில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட நினைக்கிறார். அதை போலீஸ் மோப்பம் பிடித்து மாஸ்டர் ஹூ என்ற தலைவரின் தம்பியை கைது செய்துவிடுகிறது. இதில், தவறுதலாக பிரிண்டிங் பிரஸ்சில் வேலை செய்யும் டாங் ஷாங் என்பவரும் கைதாகிறார். இவர் வேறுயாருமல்ல. காவல்துறை அதிகாரியான ஷின்பாய் என்ற இளம்பெண்ணின் அக்கா கணவர்.
இதில் போலீசாரிடமிருந்து தப்பி ஓடுபவன் ஷியா சென். இவன் அப்போதுதான் தொழிலுக்கு வந்துள்ள இளைஞன். டாங் சாங், அவருக்கு புற்றுநோய் என்பது உறுதியானவுடன் கள்ளநோட்டில் சம்பாதிக்க முடியுமா என்று பார்க்கிறார். அதற்கு ஷியாசென்னிடம் செல்கிறார். அவனோ, அதற்கு பிளாக் ஸ்னேக் என்ற கந்துவட்டி சைக்கோவை பார்க்கவேண்டும் என்கிறான். அவனை சந்தித்தபோது, அவன் இருவரையும் வசைமாறி பொழிந்து அடித்து உதைக்கிறான். அவன் மூலம் கள்ளநோட்டுக்கான பேப்பர் கிடைக்கும். அதை வைத்து கள்ளநோட்டை அச்சிட்டு விடலாம் என டாங் சாங் நினைக்கிறார். ஆனால் இடையில் ஷியா சென் பிளாக் ஸ்னேக்கை கொன்று விடுகிறான். அதேநேரம், டாங் சாங்கின் கொழுந்தியா ஷின்பாய் கல்யாணம் ஏற்பாடாகிறது.
மாஸ்டர் ஹூ தனது தம்பியை மீட்க கல்யாணப்பெண் ஷின்பாயை கடத்த நினைக்கிறார். ஆனால் கல்யாண மாப்பிள்ளைதான் கிடைக்கிறார். ஹூவாசு எனும் அவனும் கூட போலீஸ் அதிகாரிதான். அவன் வேண்டுமென்றால், தனது தம்பியை ஒப்படைக்கவேண்டுமென மாஸ்டர் ஹூ சொல்லுகிறார். அவர் கள்ளநோட்டு வழக்கில் குற்றவாளி. போலீசார் தேடப்படும் குற்றவாளி நோட்டீஸ் கூட அச்சடித்து சுவரில் ஒட்டிவிட்டது. அவனையும் பிடிக்கவேண்டும். தம்பியையும் விட்டுக்கொடுக்க கூடாது. இப்படி துறைமுகத்தில் நடக்கும் பரிமாற்றத்தில் காவல்துறை சுடுகிறது. இதில் மாஸ்டர் ஹூவின் தம்பி அங்கேயே சுடப்பட்டு இறக்கிறான்.
மாஸ்டர் ஹூவாவின் குடும்பத்தை தழைக்க தம்பியை மட்டுமே அவன் நம்பியிருக்கிறான். அவனும் கொல்லப்பட்டுவிட, உள்ளுக்குள் ஒளிந்துள்ள துரோகி யார், தனது தம்பி இறந்துபோக யார் காரணம் என தேடுகிறான். இந்த சமயத்தில்தான் பிளாக் ஸ்னேக் கொல்லப்படுவதும் நடக்கிறது. ஷியா சென்னும், டாங் சாங்கும் சேர்ந்து கள்ளநோட்டு அடிக்க முயல்கின்றனர். டாங் சாங் பள்ளி, கல்லூரியில் ஓவியங்களை துல்லியமாக அழகாக வரையும் ஓவியர். தனது திறமையைப் பயன்படுத்தி பெரிதாக அவருக்கு சம்பாதிக்கும் வாய்ப்பு அமைவதில்லை. வேதியல், கணிதம், இயற்பியல் ஆகியவற்றில் பிறருக்கு பாடம் சொல்லுமளவு திறமைசாலி. ஆனால், பிரிண்டிங் பிரசில் ஓவர்டைம் பார்த்தும் கையில் காசு கிடைக்காமல் திண்டாடுகிற துரதிர்ஷ்டசாலி. அவருடைய பள்ளி காலத்தில் பணக்காரன் ஒருவன் செய்த துரோகத்தால், வறுமை பீடிக்கிறது.
புற்றுநோய் என்று மருத்துவர் கூறியவுடன் டாங் சாங், கள்ளநோட்டு அடிக்க முடிவு செய்து ஷியா சென்னை சந்திக்கிறார். தனது பெண் குழந்தை, மனைவி, அவள் வயிற்றில் வளரும் குழந்தை ஆகியோருக்கு பொருளாதார பாதுகாப்பை கொடுத்துவிட்டு செத்தால் பரவாயில்லை என்று நினைக்கிறார். இதற்கான தனது ஓவியத்திறமையைப் பயன்படுத்துகிறார்.
ஷியா சென் முதலில் டாங் சாங்கை உதாசீனமாக நடத்தினாலும் கள்ளநோட்டு அடித்தால் காசு கிடைக்கும் என்றதும் அவரை முதலாளியாக ஏற்றுக்கொள்கிறான். இருவரும் கூட்டாளிகள் என்று கூறுவது சரியாக இருக்கும். டாங் சாங் சொல்லும் பல்வேறு யோசனைகளை வைத்தே ஷியா சென் நிறைய பிரச்னைகளை சமாளிக்கிறான். குறிப்பாக காவல்துறை விசாரணைகளை...
டாங் சாங், ஷியா சென் என இருவரும் பிளாக் சென்னுடன் சண்டைபோடும்போது அவனை ஃப்ரீசர் வேனில் அடைத்துவிடுகிறார்கள். அதில் ஒருவன் செத்துவிடுகிறான். அவன்,ரகசிய போலீஸ். அவன் உடலை டாங் சாங் ஆற்றில் தூக்கி எறிந்துவிடுகிறார். பிளாக் ஸ்னேக் குளிரிலும் உயிர் பிழைத்து இருக்கிறான். ஆனால், உடல் சற்று தேறியதும் ஷியா சென்னை கொல்ல முயன்று அவன் கையால் இறந்துபோகிறான். இந்த பிணத்தை ஷியா, சவுக்குத்தோப்பில் சென்று புதைக்கிறான். பின்னர், டாங் சாங்கின் ஆலோசனைப்படி பெட்ரோல் ஊற்றி எரித்துவிடுகிறான். இதற்கிடையில் பிளாக் ஸ்னேக்கை தேடி ஷியா சென்னை தேடி, மாஸ்டர் ஹூ வருகிறார். அவருக்கு துரோகியை கண்டுபிடித்து கொல்வதில் ஆர்வம். அந்த நேரத்தில் டாங் சாங் உருவாக்கிய கரன்சி நோட்டு கையில் கிடைக்க அதைப் பார்த்து வியந்து போகிறார். நாமும் மெஷின் வைத்து ஆட்களை வைத்து நோட்டு அடிக்கிறோம் இந்த மாதிரி நேர்த்தி வரவில்லையே... யார் அடிப்பது என தேடி வருகிறார்.
இங்கு வருவதற்கு முன்னரே அவரது தம்பியைக் கொன்ற போலீஸ்காரியின் காதலன் ஹூவாசுவை கல்யாண நாளன்று லாரி வைத்து விபத்துக்குள்ளாக்குகிறார். அவன் மருத்துவமனையில் சேர்க்கப்பட, அங்கே வைத்தே அவனை நூதனமாக விஷம் வைத்துக் கொல்கிறார். பிறகுதான் கள்ளநோட்டு அடிக்கும் விவகாரத்திற்கு வருகிறார். டாங் சாங்கை கூட்டாளியாக சேர்த்துக்கொண்டு, பிளாக் ஸ்னேக்கை ஷியா சான் கொன்றதை கேட்டுத் தெரிந்துகொள்கிறார். பிறகு, டாங் சாங்கிடம் குறிப்பிட்ட பணத்தை அடித்து எல்லை துறைமுகத்திற்கு கொண்டு வரச்சொல்கிறார். அதில் ஏதோ ஆபத்து இருப்பதை உணர்ந்த டாங் சாங், ஷியாவை தயாராக இருக்கச் சொல்கிறார். அதன்படி அவர்களை மாஸ்டர் ஹூ கடத்திச் செல்ல முயல, அங்கு ஒரு சிறிய குண்டுவெடிப்பை டாங் சாங் செய்ய கார் ஆற்றில் கவிழ்கிறது. டாங்கும் ஷியாவும் தப்பிக்கிறார்கள்.
இந்த நேரத்தில் காவல்துறையும் பல்வேறு தடயங்களை வைத்து ஷியா சான்னை தேடி அடிக்கடி வருகிறது. அவனுக்கு பல்வேறு விசாரணை டிப்ஸ்களை சொல்லிவிட்டு டாங் சாங், நோட்டு அச்சடிப்பதில் கவனம் செலுத்துகிறார். ஒருநாளுக்கு பதினாறு மணிநேரத்திற்கு அதிகமாக வேலை செய்தும் அவருக்கு எதிர்பார்த்த பணம் கிடைக்கவில்லை. மகளை பியானோ இசைக்கலைஞராக மாற்ற முயல்கிறார். ஆனால், பியானோ வாங்க காசு வேண்டும், அதைக் கற்றுத்தர ஆசிரியர் வேண்டும், அவருக்கு மணிக்கணக்கிற்கு பணம் தரவேண்டுமே?
சாப்பாடு, செலவுகளுக்கே திண்டாடும் நிலையில் எப்படி இதையெல்லாம் டாங் சாங் செய்தார் என்பதை நிதானமாக கூறியிருக்கிறார்கள்.
ரேட்டிங்கை விடுங்கள். நிதானமாக நகரும் கதையில் ஏராளமான சுவாரசியங்கள் உள்ளன. குறிப்பாக, டாங் சாங் பாத்திரம் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. பலவீனமான ஆளாக கையில் காசு இல்லாமல் தடுமாறுபவராக, ஓவர்டைம் பார்க்கவில்லை என்றால் அடுத்தநாள் வேலை கிடையாது என்று மிரட்டப்படும்போது கூட அதை ஏற்றுக்கொள்ளும் அவலமான நிலையில் உள்ளவர். உண்மையில் அவருக்கு கோபமே வராதா என பார்வையாளர்கள் நினைக்கிறார்கள். அவருக்கும் ஒரு வாய்ப்பு வருகிறது. அதையும் கூட அவர் தனது வாழ்க்கை அமைதியாக நகரவேண்டுமே என்றுதான் செய்கிறார். கிளைமேக்சில் வலிந்து அவரது கொழுந்தியாளான போலீஸ் அதிகாரி பேசுவதும், அதற்கு டாங் சாங் பதில் பேசுவதும் ஒட்டுவதில்லை. போலீஸ்காரியான ஷின்பாய்க்கும் கோபம் நியாயத்தை காப்பதல்ல. தனது காதலனை கொன்றவனுக்கு ஆதரவாக மாமா நடந்துகொண்டாரே என்பதுதான்.
டாங் சாங் அனைத்தையும் தெளிவாக புத்திசாலித்தனமாக செய்துவிட்டு ஷின்பாயின் காலில் விழுந்து கெஞ்சுவது பொருத்தமாக இல்லை. அவரின் ஒட்டுமொத்த ஆளுமையுமே உடைந்துபோனது போல இருக்கிறது.
பள்ளிக்காலத்தில் அவர் கேட்ட உதவிக்காக, கூட படித்த நண்பன் அவரின் அடையாளத்தை திருடி படித்து முன்னேறி தொழிலதிபராகிறான். டாங் சாங் படிப்பை கைவிடும் குடும்பச்சூழலில் கிடைத்த வேலைகளை செய்கிறார். பிரிண்டிங் பிரஸ்சில் சின்னச் சின்ன வேலைகளை செய்கிறார். மனைவி வந்துவிடுகிறாள். ஒரு பெண் குழந்தை பள்ளியில் படிக்கிறாள். ஒரு குழந்தை மனைவியின் வயிற்றில் இருக்கிறது. பண நெருக்கடியிலும் கூட தவறான விஷயங்களை செய்யாத மனிதர்தான்.
ஆனால் புற்றுநோய் வந்துவிட்டது என மருத்துவர் உறுதிசெய்ய, அவர் வருமானம் சம்பாதிக்க தனது ஓவியத்திறமையைக் கையில் எடுக்கிறார். அதுவும், கள்ளநோட்டுகளை போலீஸ் ரெய்டு நடத்தும்போது அதில் குற்றவாளியாக மாட்டிய சந்தர்ப்பம், யோசிக்க வைக்கிறது. வடிவமைப்பு அவருடையது. விற்பனை வெளியாட்கள் என முடிவு செய்கிறார். அதிலும் அவருக்கு ஷியா சென்னை அவருடைய தம்பி போலவே நடத்துகிறார்.
கள்ளநோட்டை அச்சிடுவதை குறிப்பிட்ட நேரத்தில் நிறுத்திவிடுவோம். இல்லையெனில் நாம் மாட்டிக்கொள்வோம். குறிப்பாக அவனது 26 வயதை கணக்கிலெடுத்துத்தான் சொல்கிறார். ஆனால் சூழல், சில பேராசைக்காரர்களின் செயல்களால் எல்லாமே மாறிப்போகிறது. சிறுவயதில் டாங்கின் அடையாளத்தை திருடிய நண்பன் மீண்டும் வாழ்வில் வருகிறான். இந்த முறை அவரது வாழ்க்கை பறிபோகிறது. ஆனால் கடந்தமுறை போல டாங் சாங் அமைதியாக இல்லை. சண்டை செய்கிறார். ஜியாங் யுவான் என்ற பழைய நண்பனின் அடியாளை ஸ்பேனரில் ஒரே அடியில் காலி செய்கிறார். அந்தளவு கொலைவெறியோடு இருக்கிறார். இதிலும் கூட பழைய நண்பனை பழிவாங்கவேண்டுமென செய்வதில்லை. அவர் அடிக்கும் கள்ளநோட்டை ஜியாங் யுவான் போலீஸ் போல ஆட்களை செட் செய்து கொள்ளையடிக்கிறான். டாங்கின் சம்பளமாக மாஸ்டர் ஹூ கொடுக்கும் பணத்தையும் திருடிவிடுகிறான்.
கோபத்தின் உச்சிக்கே சென்ற டாங் சாங், மெல்ல கொள்ளையடித்த ஆட்களை யோசித்து முகங்களை நினைவுபடுத்திப் பார்த்து ஆட்களை மெல்ல கண்டுபிடிக்கிறார். அவர்கள் அனைவரையும் போட்டுத் தள்ளுகிறார். இறுதியாக ஜியாங்கை மட்டும் கொல்ல முடியாமல் போகிறது. காவல்துறை அவனைப் பிடித்துவிடுகிறது. மற்றவர்களை டாங், மாஸ்டர் நைனின் ஆட்கள் உதவியுடன் கொல்கிறார்.
மனைவியைக் காப்பாற்ற அவளை விவகாரத்து செய்துவிடுகிறார். ஆனால் எதற்காக அவளைச் சந்திக்க வீட்டுக்கு போகிறார் என்று தெரியவில்லை. பழைய வீட்டில் அவர் இருந்தால் கதை நகராதோ??? மனைவி தங்க உள் அலங்காரம் செய்த புதிய வீடு ஒன்றை வாங்கிக் கொடுத்துவிடுகிறார். மகளுக்கு பியானோ வாங்கி வைத்துவிடுகிறார். அதற்கு ஆசிரியரையும் கூட நியமித்துவிடுகிறார். அதுதான் அவரது மகளுக்கான வாக்குறுதி. அதை சம்பாதித்த பணத்தில் செய்துவிடுகிறார்.
டாங் சாங் தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, அந்த விவகாரத்தை அனைவரிடமும் கூறியிருந்தால் கதையில் இன்னும் சில விஷயங்கள் நன்றாக வந்திருக்கலாம். டாங் கூடவே படித்துவிட்டு அவரைக் காதலித்து வசதியான பணக்காரரை மணந்துகொள்ளும் காதலி மா. இவரது பாத்திரத்திற்கு கொஞ்சம் வாய்ப்பு கொடுத்திருக்கலாம். அப்பா, மகள் பாசத்திற்கு சில உணர்ச்சிகரமான காட்சிகள் கிடைத்திருக்கும். ஷின்பாய், டாங் சாங் என்ன யோசிக்கிறார் என்பதை சற்றேனும் புரிந்துகொள்ள முடிந்திருக்கும். அதெல்லாம் இல்லை என்பதால், டாங்கின் குடும்ப உறவு, பாசம் என்பது பெரிய பலவீனமாக மாறிவிடுகிறது. அவரை காரில் கொண்டு செல்லும் முன்னர் கமிஷனர் பேசும் வசனம் எரிச்சலாக இருக்கிறது. அதை வெட்டியிருக்கலாம். சற்றும் புரிதல் இல்லாத வசனம்.
டாங் சாங்கிற்கு தான் செய்கிறோம், என்ன செய்யவேண்டும் என்பதெல்லாம் தெளிவாக தெரியும். அவரது முடிவும் கூட அறிவார். அதனால்தானே மனைவியை விவாகரத்து செய்கிறார். விவாகரத்து செய்தியை அனைவரும் சொல்லியிருந்தால், குடும்பத்திற்கு பாதுகாப்பு கிடைத்திருக்கலாம். அதில்தான் அந்த பாத்திரம் சற்று கோட்டைவிட்டுவிட்டது. மதுபானத்தை முகர்ந்து பார்த்துவிட்டு நிதானமாக அருந்துகிற ரசனைக்கார மனிதர்தான் டாங் சாங். ஆனால் அவரது வாழ்க்கையில் பால்யகால நண்பன், குடும்பம் ஆகிய இரண்டு அம்சங்களே எழ முடியாமல் வறுமையில் அழுத்திவிட்டன. எழ முயல தனது திறமையைப் பயன்படுத்துகிறார். தன்னை அடித்து அவமானப்படுத்தும் மாஸ்டர் ஹூவிடம் கூட மரியாதையாகவே நடந்துகொள்கிறார். ஆனால், அவரது வாழ்க்கைக்கு ஆபத்து வரும்போது மாஸ்டர் ஹூவைக் கொல்ல ஆலோசனை தரவும் தயங்குவதில்லை.
தொடரின் பல இடங்களில் மாஸ்டர் நைனுக்கு அடுத்த தலைவராக டாங் சாங்தான் இருக்கிறார். அடியாள் ஒருவன் கூட அதை அவரிடமே கூறுகிறான்.
இறுதியாக கிளைமேக்ஸ் காட்சி அனைத்துக்குமான திருஷ்டிப்பொட்டாக அமைந்துவிட்டது.
டாங் சாங் பாத்திரத்தில் நடித்த நடிகர்தான் தொடரில் பெரும் பலம். அடுத்து ஷியா சென் பாத்திரம். இவர்கள் இருவரும்தான் தொடரின் பெரிய பலம். ஒருவர் முதிர்ச்சியானவர். இன்னொருவர் இளமையின் வேகம் கொண்டவர். அவசரப்படுபவர்.
எது நன்மை, எது தீமை என்ற கேள்வியை தீவிரமாக மனதில் எழுப்பும் சாகச தொடர்.
கோமாளிமேடை டீம்
No Way to Stumer is a 2019 Chinese drama that follows a team of investigators as they make huge sacrifices in their mission to stop counterfeit money. The drama is unique in its theme, branching out from the usual law enforcement stories. The team, led by police captain Qi Tian, works to uncover the source of counterfeit money, including “superior” fake bills that cannot be detected by money scanners.
கருத்துகள்
கருத்துரையிடுக