சீனப் பொக்கிஷங்களை ஜப்பான்காரனுக்கு விட்டுக்கொடுக்க மறுக்கும் நாயகன்!

 









ஷூ ஃபூ டிரஷ்சர்


சீன திரைப்படம் 


ஒன்றரைமணிநேரம்


ஐக்யூயி ஆப்


கல்லறைக்கு சென்று பொக்கிஷங்களை தேடும் படங்களுக்கென இருக்கும் சில அம்சங்களைப் பார்ப்போம். 


நாயகன் பொக்கிஷ புதிர்களை அவிழ்ப்பதில் திறமைசாலி. அவனுக்கென நகரில் கலைப்பொருட்களை விற்கும் கடை வைத்திருப்பான். தங்கம், வெள்ளி பாத்திரங்களை கொள்ளையிடுவதில் ஆர்வம் இருக்காது. 


நாயகனின் நண்பன் பேராசை கொண்ட வியாபாரி. சூதாடி கலைப்பொக்கிஷங்களை அடகு வைப்பான். இவனுக்காகவே நாயகன் வெளிநாட்டுக்காரர்கள் அல்லது எதிரிகளோடு கூட்டு சேர்ந்து கல்லறைகளை கண்டுபிடித்து உள்ளே செல்லவேண்டியிருக்கும். இந்த காட்சிகள் கடுப்பாக இருந்தாலும் திரை நடிகர்கள் காமெடி என்பதாக பாவ்லா செய்வார்கள். 


நாயகி பெரும்பாலும் நாயகனின் தோழியாக இருப்பாள். எதிரியாக இருந்து நட்பாகி தனது காணாமல் போன அப்பாவை கல்லறைக்குள் தேடிக்கொண்டிருப்பாள். நாயகன் ஊடல் கொள்வதும், ஊடாடி மகிழ்வதும் இவருடன்தான். 


சீன படங்களில் ஜப்பானியர்கள் மேல் துவேஷம் மறைக்கப்படாமல் இருக்கும். அந்த நாட்டினர், சீனாவின் மீது படையெடுத்து நிறைய அக்கிரமங்கள் செய்திருக்கிறார்கள். அதை இன்றுவரை மறந்துவிட மக்கள் தயாராக இல்லை. சினிமா இயக்குநர்கள் அதை மக்களுக்கு நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறார்கள். பொக்கிஷத் தேடல் படங்களில் ஜப்பானியர்கள்தான் கொள்ளைக்காரர்கள். இரக்கமிலாத கொலைகாரர்கள். அமெரிக்கப் படங்களில் ரஷ்யர்கள் எப்படியோ, அப்படியேதான் சீனர்களுக்கு ஜப்பானியர்களும்.


நாம் பார்த்த இந்த படத்திலும் இதே விஷயங்கள்தான் இருக்கின்றன. 


குகைக்குள் புதிரான சில கற்களை அழுத்தி கதவை திறந்து பிறகு நீரில் குதித்து பாதாளத்திற்கு சென்று அங்குள்ள குகையில் பொக்கிஷங்கள் இருக்கும். அப்போதும் கூட அதை நாயகன் சீன அரசுக்கானது என விட்டுவிடுவான். ஜப்பானியர்கள் அதை எடுக்க முயல்வார்கள். அவர்களுக்கு நாயகியின் சகோதரி உதவி செய்வாள். அதாவது துரோகியாக மாறி.... பிறகென்ன ஜப்பானியர்களுடன் சீன நாயக, நாயகியர் சண்டைபோட்டு தேசப்பற்றை மன்னிக்கவும் பொக்கிஷத்தை மீட்கிறார்கள. குகை சிதைந்து பொக்கிஷத்தை மூடுகிறது. நாயகன், நாயகி, காமெடி நண்பன் எல்லோரும் உயிர்பிழைத்து வீடு திரும்புகிறார்கள். எதிரிகள் குகையிலேயே மண்ணுக்கு உரமாகிறார்கள். படம் முடிந்தது. 


பொக்கிஷ திருட்டு படத்திற்கு கிராபிக்ஸ் முக்கியம். இந்த படம் அந்த வகையில் சுமாராக இருக்கிறது. தேசப்பற்றுடன் பார்த்தால் அந்த வேறுபாடு தெரியாது என சீன பக்தர்கள் சொல்வார்கள். உணர்வு ரீதியாக படம் எங்கேயும் ஒன்றவில்லை.  அது படத்தை பலவீனமாக்குகிறது. 


படத்தின் தொடக்க காட்சிகளில் வரும் சண்டைகள் நன்றாக எடுக்கப்பட்டுள்ளன. 



சுமாரான படம். 


கோமாளிமேடை டீம் 

Xu Fu Treasure is a Chinese movie that tells the story of an explorer in the Republic of China who searches for the legendary treasure of Xu Fu on Penglai Island and destroys Japanese agents to protect Chinese treasure. The movie is based on the story of Xu Fu’s journey to the East, which is recorded in history and folklore.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்