வான்வெளி பறவைகளே, சுதந்திரமாக பறந்து செல்லுங்கள்!

 








வினோத் அண்ணனின் வீட்டில் கிடைத்த கையேடு. ஈஷாவின் பசுமைக்கரங்கள் அமைப்பு, கையேடு தயாரிப்பில் பங்களித்துள்ளது. இதை இரவல் வாங்கி மாணவர் இதழில் தொடரைத் தொடங்கினோம். இதன் வடிவம் இப்படி இருக்கலாம் என தலைமை வடிவமைப்பாளர்  ஐடியாக்களை சொன்னார். எளிமையாக புரியும்படி இருக்கவே சரி என அதற்கேற்ப பேசி தீர்மானித்து எழுத தொடங்கினோம். 

பறவைகள் பற்றிய தொடரில் பிரச்னை என்னவெனில் அதை எழுதுபவர்கள் மட்டுமல்ல தலைமை உதவி ஆசிரியராக உள்ளவருக்கும் அடிப்படையான அறிவு அவசியம். மாணவர் இதழில் அப்போது அப்பதவியில் இருந்தவர் கையாலாகாதவர். தாய் இதழில் அரசியல் கிசுகிசுக்களை எழுதி வந்த டவுசர் கூடார ஆள். தொடரை எழுதி முடித்தால் போதாது என அதை அவர் அருகில் நின்று வைவா கொடுக்கும்படி ஆயிற்று. தலைமை வடிவமைப்பாளர் அலுவலகத்தில் தினமும் சண்டை நடந்தால் நன்றாக இருக்கும் என வெளிப்படையாகவே கூறியவர். தன்னைத்தானே மாணவர் இதழ் ஆசிரியர் என நினைத்து அதிகாரம் செய்யத் தொடங்கினார். இவரும் டவுசர் பாயும் நண்பர்களானார்கள். 

பறவைகளைப் பற்றி மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தி அவற்றை கவனிக்க வைக்கவேண்டுமென தொடங்கிய முயற்சியை, மேற்சொன்ன இருவரின் அநாகரிக கேலி கிண்டல்களால் கைவிட்டால் என்ன என்று தோன்றியது. இதுபற்றி அதிகாரப்பூர்வ ஆசிரியர் அறிந்தாலும் இருக்கையைக் காத்துக்கொள்ள கள்ள மௌனம் சாதித்தார். பாராட்டு கிடைத்தால் தனக்கு. இகழ்ச்சி கிடைத்தால் தனது குழுவிலுள்ள உதவி ஆசிரியர்களுக்கு என திட்டம் போட்டு இயங்கினார். இப்படிப்பட்ட தலைமைத்துவம் கொண்ட ஆசிரியருக்கு குழுவில் என்ன மரியாதை கிடைக்கும்? 

மாணவர்கள் பத்திரிகையைப் பொறுத்தவரை அங்குள்ளவர்கள் அனைவருமே தீவிரமாக வாசித்துக்கொண்டே இருக்கவேண்டும். மேம்படுத்திக்கொள்ளும் வரைதான் கட்டுரைகளை எழுதமுடியும். எழுதுவதை சுவாரசியமாக மாற்றுவது தனி. அதற்குத்தான் தலைமை உதவி ஆசிரியர் தேவைப்படுகிறார். ஆனால் அவரோ அரசியல் பத்திரிகையில் எழுதிய வேலை செய்த அனுபவசாலி. அறிவியல் பற்றி அவருக்கு கிஞ்சித்தும் தெரியவில்லை. தெரிந்துகொள்ளவும் மனமில்லை. மாச சம்பளம் வருகிறதா சரி. பிரச்னை வந்தால், எழுதியவனை கைகாட்டிவிடலாம் என நினைத்தார். செயல்பட்டார். 

உதவி ஆசிரியர்கள் இதை அறிந்து விரக்தி அடைந்தோ என்னமோ, அவர்கள் தங்களுடைய இணை உலகில் தனியாக இருந்தனர். முன்னாள் பத்திரிகையாளர், தமிழ் சினிமாவில் பாட்டு எழுதும் வாய்ப்பு கேட்பார். மற்ற நேரங்களில் சீட்டு விளையாடுவார். டிவியில் இருந்து பத்திரிகைக்கு வந்தவர், தனது மகனின் வியாதியை வைத்தே விளம்பரம் செய்து தன்னை பிரபலமாக மாற்றிக்கொண்டிருந்தார். அடுத்த உதவி ஆசிரியர், வணிக வளாகங்களில் உடைகளை எலக்ட்ரானிக் பொருட்களை இணையத்தில் சோதித்து பார்த்துவிட்டு வாங்கச் சென்றுவிடுவார். இன்னொருவர், காதல் வாழ்க்கையின் பிணக்குகளை சொல்லி புலம்புவார். அதைத் தீர்க்க பேச்சிலர்களிடம் ஐடியா கேட்டு வந்தார்.  இன்னொரு ஆசிரியர், தன்னுடைய வேலைகளை யார் தலையில் கட்டலாம் என ஒவ்வொருவரின் சேருக்கும் சென்று கட்டுரை பிச்சை கேட்டுக்கொண்டிருந்தார். ஓவியர்களில் ஒருவர், தன்னைத்தானே புகழ்ந்துகொண்டு வலைத்தளங்களில் படம் வரைந்துகொண்டிருந்தார். அவரை மனதிற்குள் திட்டிக்கொண்டிருந்த இன்னுமொரு சக ஓவியர். மாதம் நான்கு டீ ஷர்ட்டுகளை தள்ளுபடிக்கு வாங்கி உடுத்தி பொறாமையை சற்று தணித்தார். இப்படியான வினோத உலகில் மாணவர் இதழின் கட்டுரைகளைப் பற்றி கவலைப்பட, அதைப்பற்றி விமர்சிக்க யாருமில்லை.

இதெல்லாம் கசப்பாக மாற, ஒருகட்டத்தில் பறவைகள் பற்றிய தொடரை நிறுத்திவிட தோன்றியது. நிறுத்தியாயிற்று. 


மறக்கவே நினைக்கிறேன்.

கிடைத்த வாய்ப்பில் செய்யவேண்டியதை செய்ய முயன்றோம். நன்றி!





நன்றி

புகைப்படக்கலைஞர் வினோத், திருவண்ணாமலை

ஏ.சண்முகானந்தம், ஆசிரியர், உயிர் காட்டுயிர் மாத இதழ் 




கருத்துகள்